தமிழ்நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த மாபெரும் கட்சியான அதிமுக, தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி Vs சி.வி.சண்முகம் அணி என பிளவுபட்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியிலிருந்து விலகியிருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசியல் என்றாலே தி.மு.கவும் அதிலிருந்து பிரிந்து மாபெரும் கட்சியாக உருவெடுத்த அ.தி.மு.கவும் தான் பிரதானமாக இருந்தது. இப்படியான நிலையில், சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 108 தொகுதிகளைக் கைப்பற்றி இன்று தேர்தல் கணக்குகளை மாற்றியுள்ளது.
தேர்தல் கணக்கு மட்டுமின்றி, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களான சி.வி.சண்முகம், எம்.பி.வேலுமணி தலைமையிலான 25 அ.தி.மு.கவின் எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. தவெகவிற்கு ஆதரவளித்த நிலையில் சி.வி.சண்முகம் அணி Vs எடப்பாடி பழனிச்சாமி அணியாக பிளவுபட்டிருப்பது அரசியல் களத்தில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி உள்ளதுடன், முன்னாள் அமைச்சர் செம்மலை போன்ற மூத்த தலைவரின் விலகல் கட்சி மட்டத்தில் நிலவும் அதிருப்தி அலையை வெளிக்காட்டுகிறது.
இரண்டாக பிரிந்த அ.தி.மு.க…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் படுதோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்த தேர்தல் தோல்விகளுக்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் எனவும், ‘அ.தி.மு.கவின் கவுண்டர் பாலிடிக்ஸ்’ காரணம் என கட்சிக்கு உள்ளேயே பல நிர்வாகிகள் பேசி வந்தனர்.
இப்படியான சூழலில் சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தவெக, ஆட்சியமைக்க ஆதரவின்றி நின்றிருந்த நிலையில், திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்களுடன் தவெகவிற்கு ஆதரவளித்தது. அதன்பின்பு, விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவெகவிற்கு ஆதரவளித்தது. மொத்தம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன், விஜய் முதல்வராக பொறுப்பேற்றார்.

விஜய் முதல்வராக பொறுப்பேற்கும் முன்னரே அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு ஆதரவளிப்பார்கள், அதற்கு பலனாக அமைச்சர் பதவியை பேரமாக கேட்பார்கள் எனப்பேசப்பட்ட நிலையில், தவெகவிற்கு தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆதரவளித்து அவர் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இப்படியான சூழலிலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்து, முதல்வர் விஜயையும் அவர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டி தங்கள் ஆதரவை பொதுவெளியில் அறிவித்தனர். அதன்பின்பு, சட்டப்பேரவையில் நடந்த Floor Testயிலும் தவெகவிற்கு இந்த எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய சி.வி.சண்முகம் அணியினர், அ.தி.மு.கவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் எனவும் விமர்சித்தனர். சி.வி.சண்முகம் குழுவை துரோகிகள் எனக்கூறி, கட்சிப்பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ள நிலையில், இருதரப்பும் மாறி மாறி தங்களை குறைசொல்லி பேட்டியளித்து வருகின்றனர்.
கட்சியிலிருந்து விலகிய செம்மலை – என்ன பேசினார்?
அ.தி.மு.க இப்படி இரண்டாக பிரிந்துகிடப்பதைத் தொடர்ந்து, பல மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பது எனத்தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெரும் ஆதரவில் கட்சியில் பல ஆண்டுகளாக கோலோச்சிய முன்னாள் அமைச்சர் செம்மலை அ.தி.மு.கவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது, அ.தி.மு.கவின் பிளவு கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் கடுமையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.

செம்மலை எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1972ல் அ.தி.மு.க துவங்கிய காலத்தில் கட்சியில் இணைந்து, 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் பேராதரவுடன் சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெறும், 19 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 1980ம் ஆண்டு தாரமங்கலம் தொகுதி கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் கட்சியிலிருந்து விலகி சுயேட்சியாக நின்று வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரின் கவனத்தை ஈரத்து மீண்டும் கட்சியில் இணைந்தார்.
1984ம் ஆண்டு அ.தி.மு.க தலைமையில் அதே தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி, 2001ல் ஓமலூரில் நின்று வெற்றி என தொடர்ச்சியாக கட்சியில் மூத்த தலைவரானார். 2001ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். அதன்பின்பு, 2009ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் வெற்றி, 2016ல் மேட்டூர் தொகுதியில் வெற்றி பெற்று கடந்த பத்து ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க பிளவுபட்டிருப்பதைக் கண்டு மனவருத்தத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்துள்ளார்.
‘கற்பூரம் கரையலாம் கட்சி கரையலாமா?’
கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செம்மலை, ‘‘தேர்தலுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.கவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது. இதே மனநிலையில்தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.
நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கத்துக்கு இந்த கதியா? கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா!
முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இரு பெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்துக்கு என் அனுபவம் பயன்படவேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, தடுக்கப்பட்டன. அதைப்பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
மறைந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிறபோது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப் படுகிறது.
எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன்,’’ எனக்கூறினார்.
‘அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை…’
மேலும், ‘‘இந்த இயக்கம் தமிழக அரசியலில் நிலையாக இருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. இந்த இயக்கம் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு. எனது விலகலுக்கு பிறகாவது கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறவர்கள் இனிமேலாவது தங்களுக்கு இருக்கும் ஈகோவை விடுத்து குறைபாடுகளை நீக்கி இயக்கத்தை காப்பாற்ற வேண்டும், வளர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். இது கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்ட கட்சி மக்களிடம் இருந்து விலகுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் இருப்பதாக நான் உணருகின்றேன். கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் இதை உணர்ந்து இயக்கத்தை காக்க வேண்டும்.
ஒற்றுமை இருந்தால் போதும், வெளியில் இருந்து எந்த சதி வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் நிர்வாகிகளும் தொண்டர்களும்.
போனது போக எஞ்சி இருப்பதாவது மிஞ்சுமா? யாரையும் நீக்குவதோ, மற்றவர்களை ஒதுக்கும் நடவடிக்கையை எடுக்காமல் எல்லோரும் ஒற்றுமையாக கழகத்தை காப்பதுதான் என்னுடைய விருப்பம்.
கட்சிக்கு குந்தகமாக இருக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மனப்பான்மை இருக்கக் கூடாது. கட்சியின் நலனை பார்க்க வேண்டும். தங்களின் நலனை முன்னிறுத்தி கட்சியை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. அந்த வகையில் சில நபர்களை நாங்கள் தடுத்தோம்.
அதிமுகவை தவெக தலைவர் விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியை ஒரு வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே அதற்கு காரணம். இதில் விஜயையோ அல்லது பிறரையோ குறைசொல்ல முடியாது. அதிமுக தலைவர்களிடையே ஈகோ பிரச்சனை. கட்சியை வளர்க்கும் எண்ணமே அவர்களுக்கு இல்லை. அதிமுக பலவீனம் அடைந்துகொண்டே செல்கிறது. கட்சியில் பயணிக்க மனம் இடமளிக்கவில்லை,’’ எனக்கூறி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
செம்மலையின் இந்த முடிவு, எடப்பாடி பழனிச்சாமி Vs சி.வி.சண்முகம் அணி என அ.தி.மு.க பிரிந்து கிடப்பது, மூத்த தலைவர்களையும், தொண்டர்களையும் கடுமையாக பாதித்துள்ளதை உணர்த்துகிறது.