திரையுலகைத் தாண்டி, சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலும் இந்தியாவின் அடையாளமாகத் திகழும் நடிகர் அஜித் குமார், தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் பிரத்யேகமான ‘பிஇ 6 ஃபார்முலா இ எடிஷன்’ (BE 6 Formula E Edition) எலக்ட்ரிக் காரைத் தனது கார் சேகரிப்பில் இணைத்துள்ளார். மஹிந்திரா நிறுவனம் எஃப்ஐஏ ஃபார்முலா ஈ உலகச் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற 12 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், உலகின் முதல் ஃபார்முலா ஈ தழுவிய எலக்ட்ரிக் எஸ்யுவி-யாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஸ்பெயினின் ஆண்டலூசியா சர்க்யூட்டில், உலகச் சாம்பியன் நைக் டி வரீஸ் உடன் இணைந்து அஜித் மேற்கொண்ட ஜென் 2 மின்சார ரேஸ் கார் சோதனை ஓட்டம், அவரை இந்தத் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட காரைத் தேர்வு செய்யத் தூண்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இரண்டு பெரிய ரேசிங் அடையாளங்களான மஹிந்திராவும் அஜித்தும் கைகோர்த்துள்ளனர்.



சமீபகாலமாக ‘அஜித் குமார் ரேசிங்’ அணி மூலம் சர்வதேச அரங்கில் அவர் பெரும் வெற்றிகளைக் குவித்து வருகிறார். குறிப்பாக, 2025 துபாய் 24H எண்ட்யூரன்ஸ் போட்டியில் P3 இடத்தையும், 2026 கிரெவென்டிக் 24 ஹவர்ஸ் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் முகெல்லோ மற்றும் ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சுற்றுகளில் முறையே P3 மற்றும் P2 இடங்களையும் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். இந்தத் தொடர் வெற்றிகளின் பின்னணியில், 282 bhp திறன் மற்றும் 380 Nm டார்க் கொண்ட, 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் எட்டும் இந்த அதிவேக எலக்ட்ரிக் காரை அவர் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.