அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

வெப்ப அலைக்கு ஈடுகொடுக்குமா இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்பு?

2035-க்குள் இந்திய வீடுகளில் கூடுதலாக 20 கோடி ஏ.சி.க்கள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கணிப்பு! மின்சாரத் தேவை ஆண்டுக்கு 6% அதிகரிக்கும் என்கிறது சர்வதேச எரிசக்தி முகமை. அதிகரிக்கும் வெப்பநிலையும் குளிரூட்டும் சாதனங்களின் தேவையும் இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்புக்கு புதிய சவால்களை உருவாக்குமா?

காலநிலை மாற்றத்தின் விளைவாக உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency – IEA) வெளியிட்டுள்ள World Energy Outlook 2026 அறிக்கை, இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவையில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் குறித்து முக்கியமான கணிப்புகளை முன்வைத்துள்ளது.

2035-க்குள் கூடுதலாக 20 கோடி ஏ.சி.க்கள்!

இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் வீடுகளில் மட்டும் கூடுதலாக 20 கோடி குளிரூட்டும் சாதனங்கள் (Air Conditioners) நிறுவப்படும் என சர்வதேச எரிசக்தி முகமை கணித்துள்ளது. இதன் மூலம், உலக அளவில் மின்சாரத் தேவையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.

தற்போது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உலகின் மொத்த ஏ.சி. பயன்பாட்டுச் சாதனங்களின் பங்கு 10 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது. இது 2035-ஆம் ஆண்டுக்குள் 20 விழுக்காடாக அதிகரிக்கும் என IEA கணித்துள்ளது.

இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் சூழல் இருந்தபோதிலும், ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவான வீடுகளில்தான் ஏ.சி. வசதி உள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுமார் 90 விழுக்காடு வீடுகளில் குறைந்தபட்சம் ஓர் ஏ.சி. சாதனமாவது பயன்பாட்டில் உள்ளது.

இதிலிருந்து இந்தியாவில் குளிரூட்டும் சாதனங்களுக்கான சந்தை விரிவடைவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆண்டுக்கு 6% அதிகரிக்கும் மின்சாரத் தேவை!

ஏ.சி. பயன்பாடு அதிகரிப்பது மட்டுமின்றி, தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாக்கல், மின்சார வாகனங்களின் பயன்பாடு, தரவு மையங்களின் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளாலும் இந்தியாவின் மின்சாரத் தேவை அதிகரிக்கவுள்ளது.

IEA-வின் கணிப்பின்படி, அதன் ‘Stated Policies Scenario’ (அறிவிக்கப்பட்ட கொள்கைகள் சூழல்) அடிப்படையில், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு சராசரியாக 6 விழுக்காடு அதிகரிக்கும். உலகின் முக்கியப் பொருளாதாரப் பிராந்தியங்களில் இதுவே மிக வேகமான வளர்ச்சியாக இருக்கும்.

2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தி சுமார் 2,114 டெராவாட் மணி (TWh) ஆக இருந்தது. இது 2035-ஆம் ஆண்டில் 3,585 டெராவாட் மணி அளவுக்கு அதிகரிக்கும் என அறிக்கை கணித்துள்ளது.

அதாவது, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்பை கணிசமாக விரிவுபடுத்த வேண்டிய தேவை உருவாகும்.

வெப்பநிலை உயர்வு: மின்சாரக் கட்டமைப்புக்கு நெருக்கடி!

வெப்பநிலை அதிகரிக்கும்போது ஏற்கெனவே ஏ.சி. வைத்திருப்பவர்கள் அதன் பயன்பாட்டு நேரத்தை அதிகரிப்பார்கள். அதேசமயம், இதுவரை ஏ.சி. வாங்காத குடும்பங்களும் புதிதாக வாங்கத் தொடங்குவார்கள். இதனால், மின்சாரத்திற்கான தேவை இரண்டு வழிகளில் அதிகரிக்கிறது.

ஒன்று, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சாதனங்களின் மின்சார நுகர்வு அதிகரிப்பது. மற்றொன்று, புதிதாக ஏ.சி. சாதனங்கள் வாங்கப்படுவதால் மொத்த மின்சார நுகர்வு அதிகரிப்பது.

IEA தனது ஆய்வில் வெப்ப அலைகளின் தாக்கத்தையும் தனியாகக் கணக்கில் கொண்டுள்ளது. அதிக வெப்பநிலையும் நீண்டகால வெப்ப அலைகளும் நீடிக்கும் சூழலில், 2035-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய குளிரூட்டும் தேவைக்கான மின்சார நுகர்வு, வழக்கமான கணிப்பைவிட மேலும் 700 டெராவாட் மணி அதிகரிக்கக்கூடும். இது சுமார் 40 விழுக்காடு கூடுதல் வளர்ச்சியாகும்.

மேலும், உலகளாவிய குளிரூட்டும் தேவைக்கான மின்சார நுகர்வு 2035-ஆம் ஆண்டுக்குள் 1,700 டெராவாட் மணி அளவுக்கு அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய இந்தியாவின் மொத்த மின்சாரத் தேவைக்கு நெருக்கமான அளவாகும்.

இதன் முக்கியமான விளைவு மின்சார உற்பத்தி அதிகரிப்புடன் மட்டும் நின்றுவிடாது. கோடைக்காலங்களில் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் மின்சாரத்திற்கான தேவை திடீரென அதிகரிப்பதால், மின்பகிர்மானக் கட்டமைப்பிலும் அழுத்தம் ஏற்படும்.

மின்சார உற்பத்தி அதிகரித்தால் மட்டும் போதுமா?

இந்தியாவின் மின்சாரத் தேவையை எதிர்கொள்ள மின்சார உற்பத்தியை அதிகரிப்பது அவசியம் என்றாலும், அதற்கான கட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதும் முக்கியமானது.

மின்சார உற்பத்தி நிலையங்கள், மின்பரிமாற்றக் கட்டமைப்புகள், துணை மின் நிலையங்கள், மின்பகிர்மான வலையமைப்புகள் ஆகிய அனைத்தையும் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டியிருக்கும்.

அதேநேரத்தில், அதிகரிக்கும் மின்சாரத் தேவையை அனல் மின் நிலையங்களின் மூலமாக மட்டுமே எதிர்கொள்வது சுற்றுச்சூழல் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் கொண்டது.

IEA கணிப்பின்படி, 2035-ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் 51 விழுக்காடு புதைபடிவமற்ற எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும். இருப்பினும், நிலக்கரி தொடர்ந்து முக்கியமான மின்சார உற்பத்தி ஆதாரமாக நீடிக்கும்.

எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதுடன், மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் கட்டமைப்புகள், மின்விநியோகத் திறன் மற்றும் எரிசக்தித் திறன் கொண்ட சாதனங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

எரிசக்தித் திறன் கொண்ட ஏ.சி.க்கள் அவசியம்!

அதிகரிக்கும் ஏ.சி. பயன்பாட்டால் ஏற்படும் மின்சார நுகர்வைக் கட்டுப்படுத்துவதில் எரிசக்தித் திறன் (Energy Efficiency) முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரே அளவிலான குளிரூட்டும் திறனைக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு ஏ.சி. சாதனங்களின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. அதிக எரிசக்தித் திறன் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சார நுகர்வையும் குடும்பங்களின் மின்கட்டணச் சுமையையும் குறைக்க முடியும்.

இந்தியாவில் ஏற்கெனவே ஏ.சி. சாதனங்களுக்கான எரிசக்தித் திறன் தரநிலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், வளர்ந்து வரும் சந்தையில் குறைந்த மின்சார நுகர்வு கொண்ட சாதனங்கள் பரவலாகக் கிடைப்பதையும் அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், கட்டடங்களின் வடிவமைப்பு, இயற்கையான காற்றோட்டம், வெப்பத்தை உள்வாங்குவதைக் குறைக்கும் கட்டுமான முறைகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

வெப்பத்தை எதிர்கொள்வதற்கான தீர்வு என்ன?

இந்தியாவில் ஏ.சி. பயன்பாடு அதிகரிப்பதை வெறும் நுகர்வோர் சந்தையின் வளர்ச்சியாக மட்டும் பார்க்க முடியாது. அது காலநிலை மாற்றம், நகர்ப்புற வாழ்க்கை முறை, மக்களின் வாங்கும் திறன், மின்சார உற்பத்தி மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகிய அனைத்துடனும் தொடர்புடையது.

ஒருபுறம் அதிகரிக்கும் வெப்பநிலையிலிருந்து மக்களைப் பாதுகாக்கக் குளிரூட்டும் வசதிகள் அவசியமாகின்றன. மறுபுறம், அந்த வசதிகளுக்காக அதிகரிக்கும் மின்சாரத் தேவையைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் உருவாகியுள்ளது.

குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் மலிவான விலையில் குளிரூட்டும் வசதிகள் கிடைக்கச் செய்வதுடன், மின்சாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கான கொள்கைகளையும் அரசு உருவாக்க வேண்டும்.

வெப்ப அலைகளை எதிர்கொள்வதற்கான தீர்வு ஒவ்வொரு வீட்டிலும் ஓர் ஏ.சி. நிறுவுவதில் மட்டும் இல்லை. காலநிலைக்கு ஏற்ற நகர்ப்புறத் திட்டமிடல், எரிசக்தித் திறன் கொண்ட கட்டடங்கள், பொதுமக்களுக்கான குளிரூட்டும் மையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வலுவான மின்சாரக் கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த அணுகுமுறையில்தான் உள்ளது.

2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சாரத் தேவை எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதைவிட, அந்தத் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறோம் என்பதே இப்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி!

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of பிரீத்தி காளியப்பன்

பிரீத்தி காளியப்பன்