வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள ‘அர்னாப்” புயல் காரணமாக இன்று காலை 9.30 மணி முதல் எதிர்வரும் 12 மணிநேரத்திற்கு ஆழ்கடல் மற்றும் கரையோர பகுதிகளுக்கு கடும் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் பகுதிகளில் கடும் காற்றுடனான வானிலை நிலவும் என்பதுடன், அலை அதிக சீற்றத்துடன் காணப்படும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் கிழக்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்மேற்கு பகுதிகளில் ஏற்பட்ட தாழமுக்க நிலைமையானது, தற்போது ‘அர்னாப்” புயலாக மாறியுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு உருவாகியுள்ள புயல் இன்றிரவு 11.30 அளவில் மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, கரையோர பகுதிகளில் காற்றின் வேகமானது 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், கடல் அலையானது 3 முதல் 4 மீற்றர் வரை சீற்றத்துடன் உயர்ந்து காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
கடற்றொழிலுக்கு செல்வதை முற்றாக நிறுத்திக் கொள்ளுமாறு மீனவர்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையானது, எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு கடுமையாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயங்கள் எழுந்துள்ளதுடன், மண்சரிவு அபாயங்களும் எழுந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.
இம்முறை உருவாகியுள்ள ‘அர்னாப்” புயலுக்கான பெயரை பங்களதேஷ் பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
