இலங்கையில் இன்று (அக்.13) முதல் எல்-நினோ தாக்கத்தினால், கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கையிலிருந்து தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமொன்று உருவாகும் நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, இலங்கை மற்றும் இலங்கையை சூழவுள்ள கரையோர மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை இன்று முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி, மீனவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை இடைக்கிடை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இலங்கையில் இன்று முதல் கடும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் இயக்குநர், பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவிக்கின்றார்.
இதன்படி, களனி, களு, நில்வலா மற்றும் அத்தனகலஓய ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையுடனான வானிலையினால், சில ஈரவலயப் பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மத்திய மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மாத்திரமன்றி, உலர் வலய பகுதிகளுக்கும் நீர் வடிந்தோடி, அந்த பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதேவேளை, உலர் வலய பகுதிகளுக்கும் மழையுடனான வானிலை நிலவுமாக இருந்தால், மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளதுடன், ஆறுகளுக்கு அருகில் வாழும் மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புலத்கோபிட்டிய மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹம்பாந்தோட்டை பகுதியி;ல வலஸ்முல்ல மற்றும் கடுவன ஆகிய பகுதிகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, அத்துரெலிய மற்றும் முலட்டியன ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பகுதிக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவிவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் காணப்படும் பெரும்பாலான வலயங்களில் கடுமையான மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் அபாய முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஏ.எல்.கே.லக்சிறி இந்திரதிலக்க தெரிவிக்கின்றார்.