இலங்கை – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான 70 வருட இராஜதந்திர உறவை கொண்டாடும் வகையிலான நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இந்த நிகழ்வுகளை கொண்டாடுவது தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் வெய் ஹுவாஷியெங் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 2027ம் ஆண்டு 70 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அத்துடன், இறப்பர் – அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 75 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் கொண்டாடும் வகையிலான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த விடயம் தொடர்பிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

1952ம் ஆண்டு இறப்பர் – அரிசி ஒப்பந்தம்
சுதந்திர இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முதலாவது உறவு இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் ஊடாக 1952ம் ஆண்டு ஆரம்பமாகின்றது.
1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையிலிருந்து சீனாவிற்கு இறப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டதுடன், பதிலுக்கு சீனாவிலிருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
1952ம் ஆண்டு நிலவிய உலகளாவிய அரிசித் தட்டுப்பாடு மற்றும் இலங்கையின் வெளிநாட்டு நாணய நெருக்கடி காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டமையானது, பொருளாதார ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருந்தது.
இந்த ஒப்பந்தம் முதல் ஐந்து வருடங்களுக்கு கையெழுத்திடப்பட்ட போதிலும், பின்னரான காலத்தில் பல முறை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தது.
முதல் கட்டமாக இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஆண்டொன்றிற்கு 50000 மெற்றிக் தொன் இறப்பர் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததுடன், சீனாவிலிருந்து இலங்கைக்கு ஆண்டொன்றிற்கு 270,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இலங்கை – சீனா இராஜதந்திர உறவு 1957ல் ஆரம்பம்
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு 1957ம் ஆண்டு ஆரம்பமாகின்றது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் 1957ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 07ம் தேதி இலங்கை தூதரகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவு இந்த தூதரகம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலேயே தொடங்கியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் இலங்கைக்கான முதலாவது தூதுவராக வில்மட் ஏ பெரேரா நியமிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, சீனாவிற்கான தூதரகம் இலங்கையில் 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கைக்கான சீனாவின் முதலாவது தூதுவர் 1957ம் ஆண்டு ஜுன் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படியே, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பமாகியது.
இலங்கையில் வலுவாக செயற்படும் சீனா
இலங்கையுடன் பெரும்பாலான நாடுகள் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தாலும், அயல் நாடான இந்தியாவிற்கு அடுத்தப்படியாக சீனா மிக நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றது.
இலங்கையுடன் சீனா கொண்டுள்ள உறவு, பூகோள அரசியலில் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகின்றது.
இதன்படி, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபம், தெற்காசியாவிலேயே உயரமான கோபுரமான தாமரா தடாகம், அதிவேக சாலைகள், மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல்வேறு பாரிய திட்டங்களை சீனா இலங்கையில் செய்துக்கொடுத்துள்ளது.
அத்துடன், பொருளாதார ரீதியில் பல்வேறு உதவிகளை அவ்வப்போது செய்து வரும் சீனா, இலங்கை பாதிப்புக்களை எதிர்நோக்கும் போது உடனடி உதவிகளையும் செய்து வருகின்றது.
அதேவேளை, இலங்கை மக்களுக்கான பொருளதார முன்னேற்றத்திற்கான உதவித் திட்டங்களையும் சீனா செய்து வருகின்றது,
இவ்வாறு இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் ஊடாக 75 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட முதல் உறவும், 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இராஜதந்திர உறவும் இரு நாடுகளையும் வலுவாக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த ஆண்டு நிறைவுகளை கொண்டாட இரண்டு நாடுகளும் தயாராகி வருகின்றன.