இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்த கருத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணைகளின் போது, இலங்கை தொடர்பிலும், இலங்கை மக்களின் பொறுப்புணர்வு தொடர்பிலும் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் புகழ்ந்திருந்தமை, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந்த நிலையிலேயே, இலங்கை கடற்றொழில் அமைச்சர் நேற்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, தமது வரவேற்றை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி என்ன சொன்னார்?

கச்சத்தீவில் மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபடும் நோக்கில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கக்கூடாது என அந்த நாட்டு மீனவர்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் வீதிகளிலும், கடலிலும் குப்பைகளை கொட்டாமல், சமூக பொறுப்புடன் நடந்துக்கொள்வதாக நீதிபதி சஞ்சய் குமார் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கை மீனவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே, மீன்கள் இலங்கை கடற்பரப்பை நோக்கி அதிகளவில் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்திய கடல் பகுதி அசுத்தமடைந்துள்ளமையினால், மீன்வளங்கள் அழிந்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனாலேயே, தமிழக மீனவர்கள் தமது கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கச்சத்;தீவு ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் எண்ணமில்லை என இந்திய மத்திய அரசு சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தம் தெடர்பில் இலங்கையுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டதா என மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், தாம் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த முயற்சி செய்த போதிலும், பின்னர் அந்த திட்டம் கைவிட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, இலங்கையுடனான சிறந்த உறவை முறித்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அத்துடன், மீன்வளத்தை தேடி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றால் கைது செய்யப்படுவார்கள் எனவும் கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டுமெனின், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள், இந்திய மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
எனினும், 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கச்சத்தீவு தொடர்பிலான ஒப்பந்தங்களின் அரசியலமைப்புச் செல்லுப்படித் தன்மை தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் இதுவரை தீர்ப்பொன்றை வழங்கவில்லை என தெரிய வருகின்றது.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பதில்

கச்சத்தீவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான விவகாரம் குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகள் வரவேற்கத்தக்கவை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையாமல் இருப்பது தொடர்பில் தமிழக மீனவர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளமை, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.
மேலும், விசாரணையின்போது நீதிபதி சஞ்சய் குமார், இலங்கைக்கு தான் சென்றிருந்தபோது அங்குள்ள மக்கள் கடற்கரை மற்றும் பொது இடங்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காண்பித்த சமூகப் பொறுப்புணர்வைத் தாம் அவதானித்ததாகக் குறிப்பிட்டுள்ளதையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் மக்கள் பொது இடங்களில் குப்பைகளை வீசாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் இத்தகைய சமூகப் பொறுப்புணர்வும், கடல் சூழலைப் பாதுகாப்பதில் காணப்படும் அக்கறையும் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்கக்கூடும் எனவும் நீதிபதி தனது அவதானிப்பில் குறிப்பிட்டுள்ளார் எனவும் அவர் கூறுகின்றார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் கடல் வளங்களையும் கடல் சூழலையும் பாதுகாப்பது இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். எமது கடற்பரப்பில் சட்டவிரோதமான மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இலங்கை தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள், குறிப்பாக அடித்தளத்தை அழிக்கும் வகையிலான மீன்பிடி முறைகள், எமது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் பாதிக்கின்றன.
எனவே, சர்வதேச கடல் எல்லையை மதிப்பதும், ஒவ்வொரு நாட்டினதும் கடல் வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமானதாகும்.
கச்சத்தீவு தொடர்பான 1974ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை ஒப்பந்தமும், 1976ஆம் ஆண்டு கடல் எல்லை மற்றும் மீன்பிடி தொடர்பான ஏற்பாடுகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு தெளிவானது.
அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன் கடல் வளங்களையும் பாதுகாக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் நீடித்த தீர்வுகளை நோக்கி முன்னேறுவது முக்கியமானது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்திய உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை, இரு நாடுகளின் மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் வளப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு நல்லுறவு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியமான அவதானிப்பாக அமைந்துள்ளது.