மின் கட்டணத்தைப் பார்த்தாலே ஐயோ.. ஏன் இப்படி என்று கேட்கும் அளவிற்கு நாளுக்கு நாள் கட்டண உயர்வானது அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக வீட்டின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி அல்லது சோலார் பேனல்களை அமைத்து வருகிறது. இதற்கு அதிக செலவாகும் என்பதால், மக்களுக்காக மத்திய அரசு மானியத்துடன் கூடிய சோலார் அமைப்புகளை வீடுகளை நிறுவுவதற்கான திட்டத்தை வழிவகுத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் சூரிய சக்தி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்கியது. வருகின்ற 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு இலட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மானியம் பெற முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எவ்வளவு மானியம்? எப்படி பெறுவது?
மத்திய அரசின் பிரதமர் சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா திட்டத்துடன் இணைந்து, தமிழக அரசு கூடுதல் மாநில மானியத்தையும் வழங்குகிறது. இதன் மூலம் வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதற்கான செலவைக் குறைக்க முடியும்.
1 கிலோவாட்: மத்திய அரசு ரூ.30,000; தமிழக அரசு ரூ.5,000. மொத்தம் ரூ.35,000 மானியம்.
2 கிலோவாட்: மத்திய அரசு ரூ.60,000; தமிழக அரசு ரூ.10,000. மொத்தம் ரூ.70,000 மானியம்.
3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல்: மத்திய அரசு அதிகபட்சம் ரூ.78,000; தமிழக அரசு அதிகபட்சம் ரூ.22,000. மொத்தம் ரூ.1 லட்சம் வரை மானியம் பெற முடியும்.
இந்த மானியத் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இருப்பினும், சூரியசக்தி அமைப்பை நிறுவுதல், நிகர அளவீட்டு மின்மீட்டர் பொருத்துதல் மற்றும் திட்டத்தின் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட நடைமுறைகள் அவசியம்.
இந்தத் திட்டத்தின் விண்ணப்பம் முதல் மானியம் பெறுவது வரையிலான நடைமுறைகளை எளிதாக்குவதற்காகத் தமிழக மின்வாரியம் ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. https://www.tnebltd.gov.in/usrp/ இந்த இணையதள வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள முடியும். இதில் திட்டம் குறித்த விவரங்கள், மானியத் தகுதி, சூரியசக்தி அமைப்புகளை நிறுவும் நடைமுறைகள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். மத்திய அரசின் மானியம் வழங்கப்பட்ட பிறகு, தமிழக அரசின் கூடுதல் மானியத்திற்கான நடைமுறைகள் ஒருங்கிணைந்த இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். இதற்காகத் தனியாக இரண்டாவது விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனத் திட்ட வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
10 நாட்களில் 16,500 விண்ணப்பங்கள்:
தமிழகத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் 10 நாட்களில் மட்டும் 16,500 பேர் விண்ணப்பித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.