பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு மாணவி சென்றபோது, அங்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து மாணவியை தாக்கி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்துக்குப் பிறகு மாணவி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு, சுற்றுச்சுவர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெக அரசின் சார்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இதையெல்லாம் மீறியும் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள்அ அதிகரித்து வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று கண்டிகை சந்திப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாணவிக்கு நடந்த சம்பவம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.