2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள அணிக்கு ஒரே நாளில் இரட்டை பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
10,000 மீட்டரில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம்:
பெண்களுக்கான 10,000 மீட்டர் இறுதிப் போட்டியில் சீமா குமாரி 32:50.05 என்ற நேரத்தில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா பதக்கம் வென்று 16 ஆண்டுகளாக நீடித்த காத்திருப்புக்கு சீமா குமாரி முடிவு கட்டியுள்ளார்.
பஹ்ரைனின் வின்ஃப்ரெட் யாவி 32:39.18 என்ற நேரத்தில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஜப்பானின் நோசோமி தனகா 32:41.54 நேரத்துடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
கலப்பு 4×400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி:
தொடர்ந்து நடைபெற்ற கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.எம்.ஆர். பூவம்மா, விஷால் தேன்னரசு, வித்தியா ராம்ராஜ் மற்றும் மனு டி.எஸ். ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3:14.46 என்ற நேரத்தில் பந்தயத்தை முடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.3:12.87 என்ற ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனை நேரத்தில் பஹ்ரைன் தங்கம் வென்றது. 3:14.54 நேரத்தில் பந்தயத்தை முடித்த வியட்நாம் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே வெறும் 0.08 வினாடிகள் மட்டுமே வித்தியாசம் இருந்ததால், இறுதிக்கட்டம் பரபரப்பாக அமைந்தது.
தமிழக வீராங்கனை வித்தியா ராம்ராஜ் முக்கிய பங்கு:
இந்திய அணிக்காக கடைசி சுற்றை ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த வித்தியா ராம்ராஜ், இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முக்கிய பங்களிப்பை வழங்கினார்.மேலும், தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தேன்னரசுவும் இந்திய கலப்பு தொடர் ஓட்ட அணியில் இடம்பெற்றிருந்தார். இவர்களுடன் எம்.ஆர். பூவம்மா மற்றும் மனு டி.எஸ். ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தனர்.
இந்திய வீரர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து:
சீமா குமாரியின் சாதனைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் நீண்டகால பதக்கக் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்த அவரது சாதனையை அவர் பாராட்டினார்.
கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடியும் சீமா குமாரியின் வெண்கலப் பதக்க வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோரும் சீமா குமாரி மற்றும் கலப்பு தொடர் ஓட்ட அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி என இந்தியா தனது தடகளப் பதக்க எண்ணிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.