தலைமன்னார் கடல் பரப்பின் மணல் திட்டுக்களில் நிர்க்கதியான நிலையில் இருந்த 11 பேரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
தலைமன்னார் பகுதியை அண்மித்து இலங்கை கடற்படை நடாத்திய சோததனை நடவடிக்கைகளின் போது இவர்கள் இன்று (05) மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தமிழகத்திலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக இலங்கையை நோக்கி வந்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இன்று காலை நடாத்திய சோதனை நடவடிக்கைகளின் போது முதலில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஆண் ஒருவரும், நான்கு பெண்களும், 2 முதல் 14 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சிறுவர்கள் அடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை குறித்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்போது, தலைமன்னார் பகுதியை அண்மித்த மணல் திட்டொன்றில் நிர்க்கதியான நிலையிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் தந்தையும், அவருடைய 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் அடங்குகின்றனர்.
இந்த பகுதியில் நிலவிவரும் அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக, குறித்த நபர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.
இதையடுத்து, மீட்கப்பட்டவர்களுக்கு குடிநீர், உணவுகளை வழங்க கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதி முகாம்களிலிருந்து இராமேஸ்வரம் ஊடாக சட்டவிரோதமான முறையில் இலங்கையை நோக்கி இவர்கள் வர முயற்சித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து இந்தியாவை நோக்கி சட்டவிரோதமான சென்ற நிலையில், அங்கு அகதி அந்தஸ்த்து கோரியிருந்தமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, இவர்கள் மீண்டும் தாய் நாட்டை நோக்கி திரும்ப முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆட்கடத்தல்காரர்கள் இராமேஸ்வரத்திலிருந்து படகின் ஊடாக அழைத்து வந்து, இவர்களை தலைமன்னார் பகுதியிலுள்ள மணல் திட்டுக்களில் இறங்கிவிட்டு, சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் போலீஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

