அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

50 வருடங்களின் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுமா?

இலங்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் இதுவரை எட்டவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

எனினும், மரண தண்டனையை நிறைவேற்றும் பேச்சுக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசியலமைப்பில் மரண தண்டனைக்கான சட்டம் உள்ள போதிலும், மரண தண்டனையை நிறைவேற்றும் செயற்பாடு நடைமுறையில் இல்லை.

இலங்கையில் 1976ம் ஆண்டு ஜுன் மாதம் 23ம் தேதி இறுதியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஜே.எம்.சந்திரதாஸ என்ற நபரே வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார.

அதன்பின்னர் 1978ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிப்பீடம் ஏறிய ஆட்சியாளர்கள், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு மறுத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் மரண தண்டனை வழங்கும் செயற்பாடுகள் இன்றும் நீதிமன்றங்களினால் தொடர்கின்ற போதிலும், அதனை நிறைவேற்றும் செயற்பாடு தொடரவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் சட்டத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த மரண தண்டனையை, 1956ம் ஆண்டு பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவினால் ரத்து செய்யப்பட்டது.

எனினும், அவரது படுகொலையை தொடர்ந்து, 1959ம் ஆண்டு இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமல்படுத்தப்பட்டது.

இவ்வாறு இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்கள் வலுவடைந்ததை தொடர்ந்து, 1976ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி மரண தண்டனை தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது.

வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகள், சட்ட மாஅதிபரத், நீதி அமைச்சர் ஆகியோரின் அனுமதியுடன், ஜனாதிபதியின் அனுமதியும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்கு பின்னர் இன்று வரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியும் மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடவில்லை.

2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்திய போதிலும், பல்வேறு அழுத்தங்களினால் அந்த செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான பின்னணியில் தற்போது மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நேற்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் போதைப்பொருள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளமையினால், இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுச் சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் செயற்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh