சூழலியலாளர் மாதவ் காட்கில் குழு 1.29 லட்சம் சதுர கி.மீ., பரப்பை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் Ecologically Sensitive Areaவாக அறிவித்திருந்த நிலையில், 2026-ம் ஆண்டின் புதிய வரைவு வெறும் 56,825.7 சதுர கி.மீ. பகுதியை ESA-வாக முன்மொழிந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் நிலப்பரப்பின் அளவு குறைந்து கொண்டே செல்வது எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்தும்? பேரிடர்கள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?
இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகள் நாட்டின் முக்கிய பல்லுயிர் பெருக்கம் நிறைந்த வனப்பகுதியாகவும், பல நீராதாரங்களை உருவாக்கும் முக்கிய காடாகத் திகழ்கிறது. எண்ணற்ற அரிய மற்றும் அழிந்து வரும் காட்டுயிர்கள், முக்கிய ஆறுகள், குடிநீர் திட்டம், மாபெரும் பாசனத்திட்டங்கள் என பலதும் மேற்குத்தொடர்ச்சி மலையை நம்பியே இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்கள் அதிகம் பயன்பெறுகின்றன.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்த மலைத்தொடரின் எதிர்காலம் ஒரு முக்கியமான கேள்வியைச் சுற்றியே சிக்கியுள்ளது. எவ்வளவு பகுதியை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக (Ecologically Sensitive Area — ESA) அறிவிக்க வேண்டும்? என்பது தான் அந்தக்கேள்வி.
இந்த விவகாரத்தில் வெளியான ஒவ்வொரு புதிய பரிந்துரையிலும் ESA-வாக அறிவிக்க முன்மொழியப்படும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால், மேற்குத்தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
கடந்த ஜூலை 27, 2026 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கான புதிய வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய ஆறு மாநிலங்களில் மொத்தம் 56,825.7 சதுர கிலோமீட்டர் பகுதியை ESA-வாக அறிவிக்க இந்த வரைவு முன்மொழிந்துள்ளது.

புதிய வரைவு புதிய சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு தடை, அனல் மின் திட்டங்களின் விரிவாக்கத்துக்கு கட்டுப்பாடு, அதிக மாசு ஏற்படுத்தும் Red Category தொழில்களுக்கு கட்டுப்பாடுகள், மேலும் 20,000 சதுர மீட்டருக்கு மேற்பட்ட சில கட்டுமானத் திட்டங்களுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளது. ஆனால், இது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய தொடக்கமா அல்லது கடந்த ஒன்றரை தசாப்தமாக நடைபெற்றுவரும் கொள்கை நீர்த்துப்போகலின் தொடர்ச்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாதவ் காட்கில் கமிட்டியும்; 44 சதவீதம் ESA குறைவும்!
2011-ல் பேராசிரியரும் சூழலியலாளருமான மாதவ் காட்கில் தலைமையிலான Western Ghats Ecology Expert Panel (WGEEP), 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதையும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பிராந்தியமாகக் கருதி, அதை Protected Areas, ESZ1, ESZ2 மற்றும் ESZ3 என வகைப்படுத்தியது.

இதில், Protected Areas, ESZ1 மற்றும் ESZ2 ஆகியவை சேர்ந்து சுமார்
75 சதவீதம் பரப்பை உயர் அல்லது மிக உயர்ந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதிகளாகக் கருதும் வகையில் அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரை சுற்றுச்சூழல் பாதுகாப்பை மட்டும் வலியுறுத்தாமங், உள்ளூர் மக்களின் பங்கேற்பு, கிராம சபைகளின் பங்கு மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் ஆகியவற்றையும் முன்வைத்தது.
ஆனால், காட்கில் பரிந்துரைக்கு கடுமையான அரசியல் மற்றும் குவாரி, தொழிற்சாலைகள் போன்றவற்றின் வணிக ரீதியிலான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 2012-ல் டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையில் High-Level Working Group அமைக்கப்பட்டது.
கஸ்தூரிரங்கன் குழு மேற்குத் தொடர்ச்சி மலைகளை ‘Natural Landscape’ மற்றும் ‘Cultural Landscape’ எனப்பிரித்து ஆய்வு முறையை அணுகியது. இயற்கையான நிலப்பரப்புகளை மையமாகக் கொண்டு செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் ESA வரம்பை நிர்ணயித்ததால்,பாதுகாப்புக்குள் வரும் பகுதி சுமார் 59,940 சதுர கிலோமீட்டராக குறைத்தது கஸ்தூரி ரங்கன் கமிட்டி.
அதாவது, காட்கில் குழு பரிந்துரைத்த 1,29,037 சதுர கிலோமீட்டர் Western Ghats boundaryயுடன் ஒப்பிடும்போது, கஸ்தூரிரங்கன் குழுவின் ESA பரப்பு எண்ணிக்கையில் சுமார் 53.55% குறைவு. ஆனால் இவை ஒரே மாதிரியான regulatory categoryகள் அல்ல என்பதால், இதை நேரடியாக ‘53.55 சதவீதம் பாதுகாப்பு நீக்கம்’ என்று நாம் பொருள்படுத்தக்கூடாது.

மேற்குத்தொடர்ச்சி மலை என்றாலே இந்த இரண்டு கமிட்டிகளின் ஆய்வுகள், பரிந்துரைகள் தான் இன்றளவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த இரு கமிட்டிகளுக்குப் பின்னரும் அந்தந்த மாநில அளவிலான நில அளவீடுகள் மற்றும் எல்லை நிர்ணயங்கள் நடைபெற்றன.
மாநிலங்கள் வாரியாக குறைவு…
இந்நிலையில், தற்போதைய 2026 வரைவு 56,825.7 சதுர கிலோமீட்டரை மட்டுமே முன்மொழிகிறது. இது ஏற்கனவே குறைக்கப்பட்டதாக கருதப்படும் கஸ்தூரிரங்கன் குழுவின் சுமார் 59,940 சதுர கிலோமீட்டர் ESA அளவிலிருந்து மேலும் 5.20 சதவீதத்தை குறைத்ததுள்ளது சூழலியலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காட்கில் குழுவின் 1,29,037 சதுர கிலோமீட்டர் Western Ghats boundaryயுடன்
ஒப்பிடும்போது, தற்போதைய 56,825.7 சதுர கிலோமீட்டர் வரைவு அளவு கணக்கில் சுமார் 55.96 சதவீதம் குறைவானது.
எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் காட்கில் குழுவின் முழுமையான Western Ghats ecological zoning அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய ESA வரைவு மிகவும் குறுகிய பரப்பை மையமாகக் கொண்டுள்ளது, பல மாநிலங்களில் ESA பரப்பு குறைந்துள்ளது.
கேரளாவில் இந்த மாற்றம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரையில் கேரளாவுக்கான ESA பரப்பு 13,108 சதுர கிலோமீட்டராக இருந்தது. தற்போதைய 2026 வரைவு அறிவிப்பில் கேரளாவுக்கான ESA பரப்பு வெறும் 9,993.7 சதுர கிலோமீட்டர் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 9,107 சதுர கிலோமீட்டர் Reserved Forest மற்றும் 886.7 சதுர கிலோமீட்டர் Non-Forest Land என குறிப்பிடப்பட்டுள்ளது. கஸ்தூரிரங்கன் குழுவின் அளவுடன் ஒப்பிடும்போது இது சுமார் 23.75 சதவீதம் குறைவு.
மாநில அளவிலான எல்லை நிர்ணயம், மனிதக் குடியிருப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு வகைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தற்போதைய ESA பரப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இதேபோல, தமிழ்நாட்டில் 6,914, கர்நாடகாவில் 20,668, மஹாராஷ்டிராவில் 17,340, குஜராத்தில் 449, கோவாவில் 1,461 சதுர கிலோ மீட்டர்கள் என குறைக்கப்பட்டுள்ளன.
பேரிடர்கள் ஏற்கனவே எச்சரித்துவிட்டன!
மனிதர்கள் வரைபடத்தில் கோடுகளை வரைய முடியும். ஆனால் இயற்கை அந்தக் கோடுகளைப் பின்பற்றுவதில்லை. ஒரு மலைச்சரிவு, ஒரு நீர்ப்பிடிப்புப் பகுதி அல்லது ஒரு ஆற்றின் பிறப்பிடம் நிர்வாக எல்லைகளுக்குள் மட்டும் அடங்கியதல்ல. மலைப்பகுதிகளில் சரிவின் நிலைத்தன்மை, நீரியல் அமைப்பு, நிலத்தடி நீரின் அழுத்தம் மற்றும் காடுகளின் தொடர்ச்சி ஒன்றோடொன்று இணைந்தவையாக உள்ளன.

ESA எல்லைக்கு வெளியே உள்ள பகுதியில் குவாரி அமைக்கப்படும்போது அல்லது சாலை வெட்டப்படும்போது அதன் சுற்றுச்சூழல் தாக்கம் அந்த நிர்வாக அல்லது அறிவிக்கப்பட்ட எல்லைக்குள் மட்டும் நின்றுவிடாது. கிரானைட் குவாரிகள், வெடிமருந்து மூலம் பாறைகளை உடைத்தல், சாலை அமைப்புக்காக மலை வெட்டுதல், காடுகளின் தொடர்ச்சியைத் துண்டித்தல் போன்ற மனிதச் செயல்பாடுகள் மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை வெகுவாக பாதித்து வருகிறது.
தீவிர மழை நிகழ்வுகளுடன் இத்தகைய நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் இணையும் போது, சில பகுதிகளில் பேரிடர் அபாயம் அதிகரிக்கிறது.
மாதவ் காட்கிலின் ஆய்வுகள், அறிவுரைகளில் இருந்து நாம் தொடர்ச்சியாக ESA குறைத்து வருவதையும், அதன் அருகேயுள்ள அதீத மனிதத்தலையீடுகளையும் குறைக்காமல் அலட்சியம் காட்டுவது பல பேரிடர்களை உருவாக்கி வருகின்றன. கடந்த பத்தாண்டுகளின் பேரிடர் வரலாற்றை நாம் எடுத்துப்பார்த்தால் இதனை நாம் உணர முடியும்.
2014-ல் மகாராஷ்டிராவின் மாலின் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய மலைச்சரிவில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2018 மற்றும் 2019-ல் கேரளாவில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளில் பாலக்காடு மாவட்டத்தின் காவலப்பாறை மற்றும் புத்துமலை பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் சுமார் 80 பேர் உயிரிழந்தனர்.
2020 ஆகஸ்டில் மூணாறு அருகே பெட்டிமுடி தேயிலைத் தோட்டக் குடியிருப்பை மண் சரிவு தாக்கியதில் 66 பேர் உயிரிழந்தனர்.
2021-ல் கொங்கண் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுகளில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆனால், இவற்றில் மிகப் பெரிய பேரழிவாக 2024 ஜூலையில் வயநாட்டின் சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவைக் குறிப்பிடலாம். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், முழு குடியிருப்புகளும் அழிந்தன.

இந்தப் பேரிடர்களை ஒரே காரணியால் விளக்க முடியாது என்றாலும், தீவிர மழை பல நிலச்சரிவுகளுக்கு உடனடி தூண்டுதலாக இருந்தாலும், புவியியல் அமைப்பு, சரிவின் தன்மை, நிலப்பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், காடுகளின் நிலை மற்றும் சில மனிதச் செயல்பாடுகள் ஆகியவை அபாயத்தையும் பாதிப்பின் தீவிரத்தையும் அதிகரிக்கக்கூடிய காரணிகளாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதிலிருந்து எழும் முக்கியமான பாடம் என்னவென்றால் இயற்கை எப்போதும் நிர்வாக எல்லைகளையோ அல்லது அரசியல் சமரசங்களையோ மதிப்பதில்லை, அது அதன் போக்கிலேயே தான் இருக்கிறது.
ESAவால் மக்கள் வெளியேற்றப்படுவார்களா?
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ESA அறிவிப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் முக்கிய அச்சங்களில் ஒன்று, ESAவால் மக்கள் வெளியேற்றப்படுவார்கள், விவசாயம் தடை செய்யப்படும்,
தனியார் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதாகும்.
ஆனால் 2026 வரைவு அறிவிப்பில் இதற்கு மாறான சில முக்கிய அம்சங்கள் உள்ளன. வரைவு அறிவிப்பின் பத்தி 4, உள்ளூர் மக்கள் மற்றும் பழங்குடியின மக்களை வெளியேற்றுவதில்லை என்று குறிப்பிடுகிறது. விவசாயம், தோட்டக்கலை மற்றும் பாரம்பரிய தோட்டப் பயிரிடுதல் போன்ற நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், பத்தி 7, தனியார் நில உரிமைகள் பாதிக்கப்படாது என்று கூறுகிறது. Forest Rights Act – வன உரிமைச் சட்டத்தின் கீழ் கிராம சபைகளின் உரிமைகள் மற்றும் பொருந்தும் இடங்களில் அவர்களின் ஒப்புதலுக்கும் வரைவு முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, உண்மையான விவாதம், ‘ESA வந்தால் மக்கள் வாழ முடியுமா?’ என்பதல்ல; மாறாக, ‘மலைகளில் எந்த வகையான வளர்ச்சியை அனுமதிக்க வேண்டும்?’ என்பதே.
குவாரிகளுக்கு ஏன் கட்டுப்பாடு?
புதிய குவாரிகள் மற்றும் சுரங்கங்களுக்கு தடை விதிப்பதும், ஏற்கனவே இயங்கும் சுரங்கங்களை அவற்றின் குத்தகைக் காலம் முடிவதற்குள் அல்லது இறுதி அறிவிப்பிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள், எது முன்னதாக வருகிறதோ அதன்படி நிறுத்துவதும் வரைவு அறிவிப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
மலைப்பகுதிகளில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பாறைகளை உடைப்பது மற்றும் மலை வெட்டுதல் போன்ற செயல்பாடுகள் பாறை அமைப்பு, சரிவு நிலைத்தன்மை மற்றும் நீரியல் அமைப்புகளை பாதிக்கக்கூடியவை. குறிப்பாக தீவிர மழை நிகழ்வுகளுடன் இவை இணையும் போது அபாயம் அதிகரிக்கலாம். அதேபோல், 20,000 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது மலைச்சரிவுகள், இயற்கையான நீர்வழிகள் மற்றும் நிலப்பயன்பாட்டின் மீது ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பார்க்கப்படலாம்.
தமிழ்நாட்டுக்கு ஏன் இது முக்கியம்?
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியமான பகுதிகள் தமிழ்நாட்டிலும் உள்ளன. நீலகிரி முதல் கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி வரையிலான பல பகுதிகளின் நீர், விவசாயம் மற்றும் சூழலியல் அமைப்புகள் இந்த மலைத்தொடருடன் தொடர்புடையவை.
மாதவ் காட்கில் அறிக்கையிலும் தமிழ்நாட்டில் வால்பாறை, நீலகிரி, ஊட்டி என பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள ESA பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ESA விவகாரம் கேரளா அல்லது கர்நாடகாவின் பிரச்சினை மட்டுமல்ல. இது தமிழ்நாட்டின் நீர் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பேரிடர் தாங்குதிறன் குறித்த கேள்வியும் கூட என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு மலைப்பகுதியில் ஏற்படும் சூழலியல் மாற்றம் அந்த மலையின் எல்லைக்குள் மட்டும் நின்றுவிடாது. அதன் நீர்வழிகள் கீழ்நிலப் பகுதிகளுக்குச் செல்கின்றன. அதன் காடுகள் மழை மற்றும் வெப்பநிலை அமைப்புகளுடன் தொடர்புடையவை. அதனால், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பை ஒரு மாநிலத்தின் நிர்வாகப் பிரச்சினையாக மட்டும் அணுகுவது போதாது என்பதையும் சூழலியலாளர்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர்.
பாதுகாப்பற்ற வளர்ச்சி வேண்டாம்!
மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு சாலை வேண்டும், வீடு வேண்டும், மருத்துவமனை வேண்டும், பள்ளி வேண்டும், வேலைவாய்ப்பு வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பல தலைமுறைகளாக வாழும் அவர்களின் வாழ்க்கையை முடக்கிவிட முடியாது. அதே நேரத்தில், வளர்ச்சி என்ற பெயரில் மலையின் இயற்கை அமைப்பையே பலவீனப்படுத்தினால், அதன் விலையை இறுதியில் செலுத்த வேண்டியதும் அதே மக்களாக இருக்கின்றனர்.
ஒரு குவாரி வேலைவாய்ப்பை உருவாக்கலாம், ஒரு பெரிய கட்டுமானத் திட்டம் முதலீட்டைக் கொண்டு வரலாம். ஆனால் அந்த மலை நாளை சரிந்தால், அதன் விலையை அந்த மலையின் அடிவாரத்தில் வாழும் குடும்பங்கள்தான் செலுத்த நேரிடும். அதனால்தான் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எதிர்காலத்தை ‘சுற்றுச்சூழலா? வளர்ச்சியா?’ என்ற இரட்டைத் தேர்வாக பார்க்க முடியாது என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
2011-ல் காட்கில் குழு பயன்படுத்திய 1,29,037 சதுர கிலோமீட்டர் Western Ghats boundary-யிலிருந்து, கஸ்தூரிரங்கன் குழுவின் சுமார் பல தலைமுறைகளாக வாழும் அணுகுமுறைக்கும், தற்போது 2026 வரைவு அறிவிப்பில் 56,825.7 சதுர கிலோமீட்டர் ESA முன்மொழிவுக்கும் கொள்கை அணுகுமுறை மாறியுள்ளது. இந்த மாற்றம் வெறும் வரைபடத்தில் வரையப்பட்ட கோடுகளின் மாற்றம் அல்ல. இது இந்தியா தனது முக்கியமான மலைச்சூழலை எவ்வளவு பாதுகாப்புடன் நிர்வகிக்கப் போகிறது என்பதற்கான அரசியல் முடிவு.
காட்கில் குழு பயன்படுத்திய 1,29,037 சதுர கிலோமீட்டர் Western Ghats
boundary-யுடன் ஒப்பிடும்போது, தற்போதைய 2026 வரைவு சுமார் 55.96% குறைவான ESA பரப்பை முன்மொழிகிறது.
தொடர்ச்சியான கொள்கை நீர்த்துப்போகலைச் சந்தித்து வரும் மேற்குத்தொடர்ச்சி மலையை காக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். பல லட்சம் மக்களின் உயிர்நாடியாக, காட்டுயிர்களின் வீடாக இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையைக் காக்க, ESA பகுதிகளை விரிவுபடுத்தி கடுமையான கட்டுப்பாட்டுகளை விதிக்க வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.