தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 50 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இளவம்பஞ்சு, முந்திரி, காய்கறி, கனிகள் போன்றவற்றைப் பயிரிட்டு தங்களுடைய வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்த சூழலில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு 5 வது புலிகள் காப்பமாக, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் 2021ல் அறிவிக்கபட்டது. சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் மலைப்பகுதி பரப்பளவில் இந்த புலிகள் காப்பகம் இருக்கும் என்பதால், அப்பகுதிகள் தேவையில்லாத ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், இவற்றை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இப்பிரச்சனைத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், மே 29 ஆம் அளித்த வருசாடு மலைப்பகுதியில் உள்ள மக்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுமார் 5 தலைமுறைகளாக இங்கே வசித்து வரும் எங்களை உடனடியாக வெளியேற்றினால், நாங்கள் எங்கே செல்வோம். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாதா? என்று கண்ணீரோடு கேள்விகளை முன்வைக்கின்றனர். மேலும் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக சொல்லும் போது எப்படி அரசின் அனைத்து நலத்திட்டங்களை நாங்கள் பெற முடியும்? என தெரிவிக்கின்றனர்.
மேலும் வன உரிமைச் சட்டம் 2006 ன் படி, தனிநபர் மற்றும் சமூக நில உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் எனவும் உரிமை கோரிக்கைகள் முழுமையாக பரிசீலிக்கப்படும் வரை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா மற்றும் சட்டபூர்வமான வாழ்வுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேனியில் இன்று மலை கிராம பகுதி மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
மேகமலை மலைக்கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசிற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தேனி, மேகமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறோம். எனவே வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் எங்களுக்கு நில உரிமை வழங்க வேண்டும் எனவும் உரிமை கோரிக்கைகள் முழுமையாக முடிவடையும் முன் எங்களை வெளியேற்றக் கூடாது எனவும் கோரிக்கையை முன் வைக்கின்றனர். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வன உரிமைச்சட்டம் சொல்வது என்ன?
வன உரிமைச் சட்டம் 2006 (Forest Rights Act)-ன் கீழ் தனிநபர் மற்றும் சமூக நில உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் எனவும் உரிமை கோரிக்கைகள் முழுமையாக பரிசீலிக்கப்படும் வரை வெளியேற்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பல ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா மற்றும் சட்டபூர்வமான வாழ்வுரிமை வழங்க வேண்டும். பழங்குடியினர் (Scheduled Tribes) கடந்த 13 டிசம்பர் 2005-க்கு முன்பே அந்த வனப்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும். பிற பாரம்பரிய வனவாசிகள் (Other Traditional Forest Dwellers): குறைந்தது மூன்று தலைமுறைகளாக (75 ஆண்டுகள்) அந்த வனப்பகுதியை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்ததற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் பயிரிடும் நிலங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்க வழிவகுக்கிறது.