ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க தவறிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இலங்கையின் முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று (31) வழங்கியது.
ஈஸ்டர் தினத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியமை, கடமை பொறுப்புக்களை தவறியமை மற்றும் மனித படுகொலைக்கு ஆதரவு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதையடுத்தே, பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலக்கரத்ன பண்டார ஆகிய மூவரங்கிய மேல் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என பிரியந்த லியனகே மற்றும் திலக்கரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை, மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி பிரியந்த லியனகே அறிவித்தார்.
”ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடாத்தப்படவுள்ளதாக முன்னரே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்க தவறியமையின் ஊடாக, கடமைகளை தவறியுள்ளமையினால், 268 பேர் உயிரிழந்ததுடன், 586 பேர் காயமடைந்திருந்தனர். இந்த காலப் பகுதியில் நாட்டின் போலீஸ் மாஅதிபராக இந்த பிரதிவாதியே கடமையாற்றியிருந்தார். பிரஜைகளை பாதுகாக்கின்றமை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியன இவரின் பொறுப்பாகும். எனினும், ஈஸ்டர் தினத்தில் கொழும்பு மற்றும் சனநெரிசல் அதிகமான பகுதிகளிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்தப்படவுள்ள 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி மாலை அப்போதைய புலனாய்வு சேவை பணிப்பாளர் திலங்க ஜயவர்தனவினால் இந்த பிரதிவாதிக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், இதனை தவிர்ப்பதற்கு இவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. குற்றங்களை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற வகையில் அவர் தமது பொறுப்பை தவறவிட்டுள்ளார்.” என அறிவித்திருந்தார்.
இதையடுத்தே, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை வழங்கும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விசேட மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாமிலுள்ள மற்றைய நீதிபதி விராஜ் வீரசூரிய தனது தீர்ப்பை பிரத்தியேகமாக அறிவித்தார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதி மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரண சந்தேகத்திற்கு அப்பாற் சென்று உறுதிப்படுத்தப்படாமையினால், அவரை விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் மரண தண்டனை
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை, கடமைகளை உரிய முறையில் செய்ய தவறியமை மற்றும் மனித படுகொலைக்கு ஆதரவு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஹேமசிறி பெர்ணான்டோ மீது சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுக்களில் 854 குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரியந்த லியனகே மற்றும் திலக்கரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள் தமது தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
‘ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படுவதற்கு முதல் நாள் மாலை அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, அடுத்த நாள் நடாத்தப்படவுள்ள தாக்குதல் தொடர்பில் பிரதிவாதிக்கு அறிவித்துள்ளார். எனினும், பாதுகாப்பு செயலாளர் என்ற அடிப்படையில் பிரதிவாதி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் புலனாய்வு கூட்டத்தை கூட்டி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தியிருக்கலாம். அதேபோன்று, முப்படைகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனினும், அவர் எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. தாக்குதலில் படுகொலைகள் இடம்பெறும் என்று பிரதிவாதிக்கு நன்றாக தகவல் கிடைத்திருந்தும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனூடாக கடமை பொறுப்புக்களை அவர் தவறவிட்டுள்ளார். படுகொலைகளுக்கு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அதனால், பிரதிவாதி குற்றவாளி”” என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
எனினும், பிரதிவாதி மீதான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற் சென்று உறுதியாகவில்லை என தனிதீர்ப்பை அறிவித்த மற்றைய நீதிபதி வீராஜ் வீரசூரிய அறிவித்துள்ளார்.
அதனால், பிரதிவாதியை விடுவிடுத்து விடுதலை செய்வதாகவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பெரும்பான்மை நீதிபதிகளின் இணக்கப்பாட்டிற்கு அமைய, ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல்
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி காலை 8.45 மணி முதல் அடுத்தடுத்ததாக பல்வேறு இடங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன.
மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன.
இந்த தாக்குதல் சம்பவங்களில் 268 பேர் உயிரிழந்திருந்ததுடன், 586 பேர் காயமடைந்திருந்தனர்.
8 தற்கொலை குண்டுத்தாரிகளினால் இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன.
40 வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன், 45 சிறுவர்களும் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பலியாகியிருந்தனர்.
தேசிய தவ்ஹீத் ஜமாஆத் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.