அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

6 ஆண்டுகளாக அசல் கருப்பட்டியில் கலப்பட மோசடி ; ரூ.38 கோடி அபராதம் விதித்த ஜி.எஸ்.டி அதிகாரிகள்!

கருப்பட்டிக்கு மிகவும் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம். எங்கு பார்த்தாலும் பனை மரங்கள் நிறைந்து காணப்படும் இந்த ஊரில் மக்கள் பலரின் பிரதான தொழிலாக உள்ளது பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தான். குறிப்பாக உடன்குடி பகுதியில் மக்கள் பலர் பனைத் தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற ஊர்களில் உள்ளது போன்றில்லாமல் உடன்குடியில் 100 சதவீதம் பனைப் பதநீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும் கருப்பட்டி இயற்கையான இனிப்புச்சுவையோடு, உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும்.

மக்களுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய கருப்பட்டி தயாரிக்கும் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு விசேஷ புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதையடுத்து பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் அசல் கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றிற்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விலக்கு அளித்துள்ளது. இருந்த போதும் அவற்றை வணிக ரீதியானக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும் போது 5 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. பதநீரில் 75 சதவீதத்திற்கும் அதிகமாகச் சர்க்கரை கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றிற்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் சட்டம் உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில் தான் சர்க்கரை மூட்டைகளை வியாபாரிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் கொள்முதல் செய்வதாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் மட்டும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சர்க்கரை மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சர்க்கரையைக் கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி 6 கோடி ரூபாய் வரை விற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

ஆனாலும் சில கருப்பட்டி வியாபாரிகள், சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்தாமல், அசல் கருப்பட்டி எனக் கூறி வெறும் 5 சதவீத வரியை மட்டுமே செலுத்தி கடந்த 6 ஆண்டுகளாகப் பல்வேறு முறைகேடுகளைச் செய்தது தெரிய வந்தது. இதையடுத்மு இந்த மோசடியில் தொடர்புடைய உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் 38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மாவட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் வணிகர்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V