தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத முக்கியமான நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தவர் பூமணி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் கடந்த 1947 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்க வாசகம். இளையரசனேந்தலில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர், விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். தமிழக கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த இவர், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றினாலும் கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் கவிதை, சிறுகதைகள் எழுதினார். பின்னதாக கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் சிறிய சிறிய நாவல்களை எழுதினார். வெக்கை, நைவேத்யம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி உள்ளிட்ட அவரது நாவல்கள் தமிழ் இலக்கியத்தில் எப்போதுமே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2007ல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதையும், 2009ல் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். இதோடு 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணம் கழுவேற்றம், நாயக்கர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற மோதல் , சிவகாசியில் நடந்த சாதியக் கலவரம் போன்ற பல்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்வதாக அமைந்தது பூமணியின் அஞ்ஞாடி நாவல். இந்த நாவலுக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு பூமணி எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய எதார்த்தமான எழுத்துக்களின் மூலம் தமிழ் ஆர்வலர்களை தன்னுடைய எழுத்துக்களால் கட்டிப்போட்டிருந்தவர். குறிப்பாக கரிசல் மண்ணில் வாழும் மக்கள் குறித்து அவர் எழுதிய ஒவ்வொரு படைப்புகளும் யதார்த்தமானது. இங்குள்ள மக்களின் வாழ்க்கை, வறுமை, சாதிய ஒடுக்குமுறை, மனித உறவுகள் போன்றவற்றை தன்னுடைய படைப்புகளின் மூலம் எதார்த்தமாக வெளிப்படுத்தினார்.
குறிப்பாக எழுத்தாளர் பூமணி எழுதிய வைக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக அசுரன் திரைப்படம் தேசிய அளவில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இலக்கிய திறமையின் மூலம் தமிழ் ஆர்வலர்களை மற்றும் எழுத்தாளர்களைக் கட்டுப்போட்டு வைத்திருந்த எழுத்தாளர் பூமணி உடல் நலக்குறைவால் உயிரிழ்ந்தார். இவரது மறைவு இலக்கிய உலகையும், சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசு மரியாதையை பெறும் பூமணி:
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
பூமணி கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.
அவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘அசுரன்’ திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.
பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச்சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.