அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பழனி முருகன் கோவிலில் மருத்துவ வசதிகள் குறைவு; அவசர உதவி கிடைக்காமல் அலையும் அவலம் – TNC கள ஆய்வு!

தமிழகத்தின் பிரசித்த பெற்ற பழனி முருகன் கோவில் நடைபாதையில் வெறும் ஒரே ஒரு முதலுதவி மையம் இருப்பதுடன், பக்தர்கள் அவசர நேரத்தில் உதவி பெற ஒரு ஏற்பாடும் செய்யப்படாமல் உள்ளதால் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இந்து கடவுள் என்றாலே முருகன் தான். முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடுவதை மக்கள் சிறப்பானதாகக் கருதுகின்றனர். அறுபடை வீடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவில் தான்.

பழனி முருகன் கோவிலைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு பக்தர்கள் மட்டுமின்றி அதிகப்படியான கேரள பக்தர்களும் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் பலரும் பல கிலோ மீட்டர்கள் நடந்து பாதையாத்திரை வருவதுடன், மாலை அணிந்தும், தைப்பூசம், சூரசம்ஹாரம் போன்ற முக்கிய தினங்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் செங்குத்தான 720 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். யானைப்பாதையில் சென்றால் ஆங்காங்கே அமரவும் நிழலிகற்காகவும் 88 மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் கோவிலுக்குச் செல்லலாம்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையிலும், கோவிலில் அடிப்படையான, அவசர உதவிக்கான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகிறது. இதனை அறிய, TNC குழு பழனி முருகன் கோவிலில் முழுமையாக கள ஆய்வு மேற்கொண்டது.

மொபைல் போன்களுக்கு தடை!

நாம் கோவிலை அடைந்த போது அங்கு பெருங்கூட்டமாக மக்கள் கோவிலுக்குச் சென்று வந்தனர். பழனி முருகன் கோவிலுக்குச் செல்ல மூன்று வழிகள் உள்ளன. இதில், வின்ச் எனப்படும் ரயில் போன்ற வாகனத்தில் ஒரு நபருக்கு 60 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி கோவிலுக்குச் செல்லலாம். மேலே செல்வதற்கு 60 ரூபாய் எனவும், கீழே இறங்க 60 ரூபாயும் தனித்தனியாக வசூல் செய்யப்படுகின்றன.

கோவிலின் அடிவாரத்தில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் பகுதியில் இருந்து 300 மீட்டர் நடந்து சென்ற போது கோவிலின் பின் பக்கத்தை அடைய முடிந்தது. அங்கிருந்து கோவில் நிர்வாகத்தின் இலவச பேட்டரி வாகனத்தில் பயணித்து, நாம் வின்ச் பகுதிக்கு சென்றோம். அங்கே பக்தர்கள் 5 ரூபாய்க்கு மொபைல் போனையும், இலவசமாக காலணிகள் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வின்ச் பகுதியில் பக்தர்கள் அமருவதற்கு இருக்கைகள், போதிய காற்றோட்டம் இருப்பதற்காக மின் விசிறிகள் மற்றும் குடிநீர் வசதிகள் இருந்தன. அங்கிருந்த நாம் மீண்டும் பேட்டரி வாகனத்தில் அடிவாரத்தை அடைந்தோம். அங்கும் பக்தர்களிடம் மொபைல் போன்ற பறிமுதல் செய்யப்பட்டு, மெட்டல் டிடக்டர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அடிப்படை வசதிகளின் நிலை என்ன?

பழனி முருகனை தரிசிக்க வின்ச், செங்குத்தான படிக்கட்டுகள் மற்றும் யானைப்பாதை ஆகிய மூன்று வழிகளில் செல்லலாம். நாம் பார்த்த வரையில், பழனி முருகனை தரிசிக்க வருவோரில் வெறும் 5 – 10 சதவீதம் பேர் தான் செங்குத்தான படிக்கட்டுக்கள் வழியாக மேலே ஏறுகின்றனர். 90 சதவீத பக்தர்கள் யானைப்பாதையில் மண்டபத்தில் அமர்ந்து கோவிலுக்குச் செல்கின்றனர்.

நாம் கோவிலுக்கு மேலே செல்லும் போது யானைப்பாதையில் சென்றோம். வழிநெடுக இருந்த 88 மண்டபங்களில் போதுமான அளவிற்கு குடிநீர் வசதி இருந்தது. 2 – 5 மண்டபங்களுக்கு ஒரு இடத்தில் கட்டணமில்லா கழிப்பிட வசதி இருந்தது. ஆனால், பல கழிப்பிடங்கள் உள்ளே நுழைந்தாலே கடுமையான துர்நாற்றத்துடன், சுத்தமின்றி காணப்பட்டன. சில பகுதிகளில் சிதிலமடைந்தும், கதவுகள் உடைந்தும் இருந்தன.

நாம் பார்த்த வரையில் அனைத்து மண்டப பகுதியிலும் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி குறைவில்லாமல் இருந்தது. ஆனால், குடிநீருக்கான வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரல் வடிவிலான தொட்டிகள் பலதும் குப்பையும், அழுக்குமாக காணப்பட்டதால் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஒரே ஒரு முதலுதவி மையம் போதுமா?

நாம் மலைக்கோவிலை அடையும் வரையிலான 88 மண்டபங்களின் நிலை, குடிநீர், கழிப்பிடம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டு வந்தோம்.

நமக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், அச்சத்தை தருவதாக இருந்தது முதலுதவி மையம் தான். கோவில் செல்வதற்கான ஒட்டுமொத்த பயணத் தொலைவின் மத்திய பகுதியில் இடும்பர் கோவில் அருகே ஒரேயொரு முதலுதவி சிகிச்சை மையம் தான் இருந்தது.

நாம் பார்த்தபோது அங்கு அடிப்படை Vitals எனப்படும் ரத்து அழுத்தம், சர்க்கரை, SPo2 எனப்படும் உடலின் ஆக்சிஜன் நிலை, இசிஜி போன்றவை பரிசோதிக்கப்பட்டன. மேலும், அங்கு அவசர உதவிக்கான மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தன, இரண்டு செவிலியர்கள் பணியில் இருந்தனர். இதை விட்டால் மலைக்கோவில் சன்னிதானத்தில் மருத்துவர்கள் பணியில் இருக்கும் ஒரு மருத்துவ உதவி மையம் செயல்படுகிறது. இந்த இரண்டு வசதியைத் தவிர ஒரு பகுதியில் கூட நாம் மருத்துவ வசதிகளைக் காண முடியவில்லை.

கொடுமை என்னவென்றால், ஆங்காங்கே பொருத்தப்பட்டு இருந்த ஒலிப்பெருக்கி வாயிலாக காணாமல் போனோரின் அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், அதில் அவசர உதவிக்கு அழைக்கவும் எனக்கூறி கோவில் தகவல் மையத்தின் மொபைல் எண் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.

கோவில் நுழைவுப் பகுதியிலேயே பக்தர்கள் மொபைல் போன்களை வாங்கி வைக்கும் கோவில் நிர்வாகம், உதவி எண்களுடன் அவசர உதவிக்கு அழைக்கவும் எனக்கூறி ஒலி பெருக்கியில் அறிவிப்பு விடுவது அபத்தமாக இருந்தது. ஏனெனில் மொபைல் போன் இல்லாமல் பக்தர்கள் எப்படி அவசர உதவிக்கு அழைக்க முடியும்?

அதுமட்டுமின்றி காவலாளிகள் அல்லது கோவில் நிர்வாகம் சார்பிலான பணியாளர்களை நடைபாதையில் காண்பதே அரிதாக இருப்பதால், பக்தர்களுக்கு அவசர உதவியைப் பெறுவதே சிக்கலான ஒன்று தான்.

நாம் கோவில் சன்னிதானத்தில் பார்வையிட்ட போது, நடைபாதை, அன்னதானக்கூடம், காத்திருப்பு மண்டபம் என திரும்பிய திசையெல்லாம் போதிய அளவில் குடிநீர், கழிப்பிடம் வசதி இருந்தன. பொது தரிசனம், 10 மற்றும் 100 ரூபாய் டோக்கன் வழியாக பக்தர்கள் தண்டாயுதபானி சாமியை தரிசிக்க வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் இருக்கும் இடங்களில் எல்லாம் காற்றோட்டத்திற்காக மின் விசிறிகளையும் காண முடிந்தது.

முருகனை தரிசிக்கச் செல்லும் நுழைவுப்பகுதியில் சில அர்ச்சகர்கள் ‘தேங்காய், பழம் இருங்குங்களா?’ எனக்கூறி பக்தர்களிடம், எவ்வித ரசீதும் தராமல், 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அறிவிக்கப்படாத கட்டணமாக பெற்றுக்கொண்டனர்.

பக்தர்கள் வைத்திருக்கும் தேங்காய், பழம் அடங்கிய பை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு அதில் பக்தர்களின் பெயரை எழுதிக் கொண்டு பூஜை செய்து தருவதாகத் தெரிவித்தனர். சாமியை தரிசித்து வெளியில் வரும் பகுதியில், பூவுடன் அந்த பையை பக்தர்களிடம் வழங்கினர்.

இப்படி துவக்கம் முதல் முருகனை தரிசிப்பது வரையில் TNC குழு கோவிலில் கள ஆய்வை மேற்கொண்டது. இதில், பக்தர்கள் நம்மிடம் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

அவசர உதவி என்பதே கிடைக்காது…

நம்மிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான சரவணக்குமார் (38), ‘‘நாங்கள் குடும்பத்துடன் அடிக்கடி பழனி முருகன் கோவிலுக்கு வருகிறோம். 64 வயதான அம்மா, 70 வயதான தந்தையை அழைத்துக் கொண்டு தான் கோவிலுக்கு வந்து செல்கிறேன்.

நான் சபரிமலை செல்லும் போது அங்கு மலைக்கோவிலை அடைவதற்குள் குறைந்தது 5 முதலுதவி மையங்களை காண முடியும். அங்கு, உடலில் நீர் தீர்ந்து வெப்ப பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ORS மட்டுமின்றி மிக விரைவாக முதலுதவி கிடைக்கும். மருத்துவ உதவி மையம் எத்தனையாவது வளைவில் இருக்கிறது, எந்த மண்டபம் அருகே இருக்கிறது என்ற தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும்.

நடைபாதையில் இருக்கும் ஒரேயொரு சிறிய முதலுதவி மையம்.

ஆனால், பழனி முருகன் கோவிலில் வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே முதலுதவி மையம் இருக்கிறது. முதலுதவி மையம் எங்கு இருக்கிறது என்ற அறிவிப்பும் இல்லாததால், அவசர நேரங்களில் பக்தர்கள் உதவியைப் பெறுவதற்குள் அவர்களின் உடல்நிலை மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சபரிமலையில் அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக, நான்கு பேர் கொண்ட டோலி சேவை மூலம் பக்தர்களை முதலுதவி மையத்திற்கோ அல்லது அடிவாரத்திற்கோ அழைத்துச் செல்வார்கள். ஆனால், பழனி முருகன் கோவிலில் இதுவரையில் அப்படியான அவசர உதவிக்கான ஏற்பாடுகள் செய்யாமல் இருப்பது வேதனையளிக்கிறது. அவசர நிலை ஏற்பட்டால் எப்படி பக்தர்களை அழைத்துச் செல்வார்கள் என்றே தெரியவில்லை,’’ என்கிறார் அவர்.

பக்தர்கள் நலனில் கோவில் நிர்வாகத்திற்கு அக்கறை இல்லை!

நம்மிடம் பேசிய திருப்பூரைச் சேர்ந்த பெண் பக்தர் செளந்திரி, ‘‘வயதானவர்களை அழைத்து வரும் போது திடீரென மருத்துவ உதவி தேவைப்பட்டால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் மொபைல் போனை கோவில் நிர்வாகம் வாங்கி வைத்துக்கொள்கிறது. ஆங்காங்கே காவலாளி அல்லது கோவில் பணியாளர்கள் பணியில் இருந்தாலாவது அவசர நிலை என்றால் அவர்களிடம் தெரிவித்து தக்க நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறலாம் அதற்கும் வாய்ப்பில்லை. இப்படி இருக்கையில் மொபைல் வாங்கி வைத்தால் பக்தர்கள் எப்படி அவசர உதவிக்கு அழைப்பது?

மொபைல் வாங்கியும் வைத்துவிட்டு, பணியாளர்களையும் நியமிக்காமல், மருத்துவ உதவி மையம் எங்கிருக்கிறது என்றும் தெரியாமல் பக்தர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். இது குறித்து நானே பலமுறை கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை, பக்தர்கள் நலனில் கோவில் நிர்காவத்திற்கு அக்கறை இல்லை. அவசர நிலை ஏற்பட்டால் யாராவது கீழே இறங்கியோ அல்லது மலைக்கோவிலுக்குச் சென்றோ அல்லது முதலுதவி மையத்திற்கு சென்று தான் உதவியைப் பெற முடியும்.’’ என்கிறார் அவர்.

பழனி முருகனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள்.

மேலும் தொடர்ந்த செளந்திரி, ‘‘அவசர உதவி கொடுக்க உடனடியாக முதலுதவி மையங்கள், தகவல் மையங்களை அதிகப்படுத்த வேண்டும். முதலுதவி மையம் எங்கிருக்கிறது என்ற அறிவிப்பு பலகைகள் வைப்பதுடன், முதலுதவி பெறுவதற்காக பணியாளர்களை ஆங்காங்கே பணியமர்த்த வேண்டும். இப்படி எதையும் செய்யாமல் இருந்தால், அவசர நிலையில் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை,’’ எனக்கூறி வருந்துகிறார் அவர்.

கோவில் சன்னிதானத்தில் நாம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம்னா பக்தர்களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் கேட்க முயற்சித்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. போன் வாயிலாக கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டும் பதில் பெற முடியவில்லை.

இதுவரை இருந்த அதிமுகவும் சரி, திமுக அரசும் சரி பழனி முருகன் கோவிலில் அவசர உதவிக்கான ஏற்பாடுகளில் துளியும் அக்கறை கொள்ளவில்லை. ‘மாற்றம்’ எனக்கூறி ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசாவது இந்த நிலையை மாற்றுமா?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of திலீபன்

திலீபன்