கர்நாடகாவில் மிகவும் துடிப்பான மற்றும் இளம் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்தவர் அண்ணாமலை. பாரதீய ஜனதா கட்சி மீதுள்ள ஈர்ப்பால் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை பணியை ராஜினாமா செய்ததோடு, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். தன்னுடைய தனித்துவமான பேச்சால் பல இளைஞர்களின் கவனத்தைப் பெற்றார் அண்ணாமலை. பல நேரங்களில் இவருடைய பேச்சுகள் விவாதப் பொருளாகவும் மாறியது.
காவல்துறையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பிறகு, பாஜகவிற்காக தமிழகம் முழுவதும் பல பிரச்சாரங்களை நடத்தினார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை பாஜக எதிர்கொண்டது. இதில் 4 இடங்களை வெற்றி பெற்றது. இதையடுத்து அப்போதைய தலைவர் எல். முருகனுக்கு பாஜக மேலிடம் மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்கியதால், அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி கிடைத்தது.
தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தவுடன் அரசியலில் தன்னுடைய பொறுப்புகளைத் திறம்பட செய்ததன் பலனாய், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். இந்த சூழலில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை பாஜக சார்பில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் இருந்ததோடு எவ்வித கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கவில்லை. நிச்சயம் இந்த அதிருப்தி கட்சியில் தொடர்வதற்கு வாய்ப்பை அளிக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதை நிரூபனம் செய்யும் விதமாக பாரதீய ஜனதா கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். வேறு கட்சிக்கு தன்னுடைய ஆதரவை இல்லை என்ற சூழலில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அண்ணாமலை முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இச்சூழலில் இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்ததோடு உள்துறை அமைச்சர் அமீத்ஷாவையும் சந்தித்து தான் ராஜினாமா செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியதும், தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அண்ணாமலைக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்றார் போல் கோவையில் பல இடங்களில் அண்ணாமலைக்கு ஆதரவு அளிப்பது போன்ற வாசகங்களுடன் தலைவா தனித்து ஆள வா என்பது போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.