இந்தாண்டு கடும் வெப்ப அலை காரணமாக தமிழ்நாட்டில் அதீத வெப்பம் நிலவி மக்கள் பல பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். Heat wave மக்களை எப்படிக் கொல்லும், அரசு செய்ய வேண்டியது என்ன? என விவரிக்கிறார்கள் சூழலியலாளர்கள்.
வெளியில் தலைகாட்டினால் கபாலமே சூடாகி தலை கிறுகிறுக்கும் கடும் வெயில்… எத்தனை தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம், எதைச்செய்தாலும் வந்துவிடும் dehydration என கடந்த ஒரு தசாப்தமாக நாம் எதிர்கொள்ளும் Heat wave பிரச்சினைகள் ஏரளாம். இதற்குத் தீர்வே இல்லையா என நாம் யோசித்தால், நாமும் நமது அரசும் இப்படியே இருந்தால் தீர்வு நிச்சயம் இல்லை என்பது தான் விடை.
இந்தியாவில் நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலை வீசுவதால் பல நகரங்களில் மே மாதம் முடிந்த நிலையிலும் வெப்பம் வாட்டிவதைக்கிறது மக்களை. இந்த பாதிப்பு தமிழ்நாட்டிலும் பரவலாக பார்க்க முடிகிறது. இதற்கு வானிலை ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் இறங்கியிருக்கும் ‘வெப்பக்குடில் – Heat Dome‘ காரணம் என்கிறார்கள்.

அதீத வெப்பத்திற்கான காரணம் என்ன? பாதிப்பை எப்படி உணருவது? அரசு செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து விளக்குகிறார்கள், சென்னை ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவின் சூழலியலாளரும் வழக்கறிஞருமான வெற்றிச்செல்வன் மற்றும் ஆய்வாளர் நிகழ்.
வெப்பக்குடிலால் இந்தாண்டு சுட்டெரிக்கும் வெப்பம்!
வெப்பக்குடில் குறித்து விளக்கிய நிகழ், ‘‘வளிமண்டலத்தில் சமீபத்தில் ‘வெப்பக்குடில் – Heat Dome‘ இறங்கியிருக்கிறது. இது என்ன செய்யுமென்றால், மிக அதிக காற்றழுத்தத்துடன் வெப்பமான சூழலை உருவாக்கும். இதனால், இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட அதீத வெப்பம் நிலவுகிறது. ஏற்கனவே பூமி வெப்பமயமாதலால் பல பகுதிகளில் இருக்கும் Climatic conditionsஐ மாற்றத்துக்குள்ளாகி வருகிறது.
முன்பிருந்த கோடை காலத்திற்கும் இந்தாண்டிற்குமான வித்தியாசம் என்னவென்றால், முன்பெல்லாம் சாதாரணமாக 32–34 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருக்கும். ஆனால், தற்போது 36 – 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சென்றுள்ளது. இதன் காரணமாக கொடும் வெப்பம் என்ற நிலையை நாம் உணர வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம்.
நீர் குடித்தால் போதும் சரியாகிவிடும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், நமக்கு அறியாமலேயே நம்மைச் சுற்றி வெப்பத்தால் பலரும் இறந்து வருகின்றனர். வெப்ப அழுத்தம் என்றால் என்ன?கொடும் வெப்பம், அக வெப்பநிலை, வெப்பத்தன்மை என்றால் என்ன? என அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

அக வெப்பநிலை (Core Body Temperature) என்பது மனித உடலின் வெப்பநிலை எப்போதும் 36– 37 டிகிரி செல்சியஸில் மட்டுமே இருக்க வேண்டும். வெயில் அல்லது அதீத வெப்பம் காரணமாக நம் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஏகநிலையை (Homeostasis) எனப்படும் உடலிற்குள் இருக்கும் அக வெப்பநிலை மாறுபட்டு, வெப்பத்தன்மை ஏற்பட்டு உடலின் சீராக இயக்கமே மாறுபடுகிறது. இது தான் Heat Stess தொடர்பான பிரச்சினைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக வெப்ப அலை அதிகரிப்பின் காரணமாக இந்தியாவில் அதிகப்படியானவர்கள் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக நாம் சவூதி அரேபியாவில் 2024ம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது ஒரே நாளில் வெப்ப அலை காரணமாக 1,300 பேர் மரணித்ததை சொல்லலாம். அதீத வெப்ப அலை காரணமாக dehydration காரணமாக இறந்தனர். அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் பல்லியா என்ற பகுதியில், 2023ம் ஆண்டு வெப்ப அலை காரணமாக வெறும் மூன்றே நாட்களில் 68 பேர் மரணித்தனர். இப்படி நாம் பல உதாரணங்களைக் காண முடியும்,’’ என்கிறார்.
வெப்ப அலை எப்படி மரணத்தை ஏற்படுத்தும்?
வெப்ப அலையில் சிக்கும் போது நம் உடலில் அக வெப்பநிலை மாறுபடும் போது உடல் எப்படியான பாதிப்புகளைச் சந்திக்கும் எனவும் விளக்குகிறார் ஆய்வாளர் நிகழ்.
‘‘நம் உடலில் அகவெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்போது உடல் சாதாரணமாக செயல்படும். வெறும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்து 38 டிகிரியைத் தொட்டால் வியர்குரு வரும், தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். 39 டிகிரி செல்சியஸ்க்கு உயர்ந்தால் தலைவலி, திடீர் தடுமாற்றம், மயக்கம் மற்றும் தள்ளாட்டம் ஏற்படும், இதயத்துடிப்பும் அதிகரிக்கும். 39.5 டிகிரி செல்சியஸ் வந்தால் குழப்பம், எரிச்சல், படபடப்புடன் மயக்கம், வாந்தி மற்றும் 40 டிகிரி செல்சியஸ் தொடும் போது அபாயகரமான வெப்ப வாதம், தசைப்பிடிப்பு, உயர் இரத்தம் அழுத்தம் மற்றும் மாரடைப்பு கூட ஏற்படலாம். இதில், 38.5 என்பதைத்தான் உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பான நிலை என வகுத்துள்ளனர். ஆனால், இன்றைய சூழலில் இந்த நிலையை நாம் கடந்து வருகிறோம்.

இதன் காரணமாகத்தான் வயலில் வேலை செய்வோர், வெயிலில் பணி செய்வோர் கோபப்படுவது, மயக்கநிலை, படபடப்பாக இருப்பதை உணர்கிறார்கள். 40 டிகிரி செல்சியஸ் தான் வெப்பவாத நிலை – Heat Stroke நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு நம் உடல் அக வெப்பநிலை சென்றால், வலிப்பு, என்ன நடக்கிறதெனத் தெரியாமல் மயக்கம், சிலர் Coma நிலைக்குச் சென்று மரணிக்க நேரிடும். இப்படி பலர் மரணிக்கும் நிலையில், இந்தியாவில் ஆண்டிற்கு எத்தனைபேர் வெப்பத்தால் மரணிக்கிறார்கள் என்ற ஆய்வும் இல்லை, தரவுகளும் இல்லை. ஆனால், சில ஆய்வாளர்களின் கணக்கெடுப்பின்படி ஆண்டிற்கு 1.5 லட்சம் பேர் மரணிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆண்டிற்கு உலகம் முழுமைக்கும் சேர்த்தே 5.46 லட்சம் பேர் மரணிப்பதாக கண்டறிந்துள்ள நிலையில், இந்தியா அதில் அதிக பங்கு வகிக்கிறது,’’ என்கிறார் அவர்.
மேலும், ‘‘இந்திய அளவிலேயே தரவுகள் இல்லாததால், தமிழ்நாட்டில் ஆண்டிற்கு எத்தனைப் பேர் மரணிக்கிறார்கள் என்ற தகவல்கள் இல்லை. அரசு இது குறித்தான எந்த ஒரு ஆய்வும் செய்யாததால் வெப்பம் தொடர்பான மரணங்களை நாம் ஒரு கண்ணுக்குத் தெரியாத மரணம் எனவும் Invincible Disaster எனத்தான் சொல்ல வேண்டும்,’’ என்கிறார் ஆய்வாளர் நிகழ்.
இந்திய அரசின் வெப்ப அலை அறிவிப்பின் சிக்கல்கள் என்ன?
இருப்பினும் வெப்ப அலை தொடர்பான இந்தியாவின் அறிவிப்புகள் மற்ற நாடுகளைக் காட்டிலும் போதாக்குறையாகவே இருப்பதாக தெரிவிக்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ‘‘தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தியாவில் இருக்கிறது. 2005ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை தொடர்பாக வெளியிடப்பட்ட சட்டத்தின் கீழ், மத்திய அரசிற்காக பிரதமர் தலைமையிலும், மாநிலங்களில் முதல்வர்கள் தலைமையில் கமிட்டி இருக்கிறது. இந்த கமிட்டி இயற்கை பேரிடர் தொடர்பான கண்காணிப்பு, செயல்பாடு, எதிர்காலத் திட்டமிடலைச் செய்ய வேண்டும். இவர்கள் சொல்வதைச் செயல்படுத்தவும், பேரிடர் வருவதற்கு முன்பே அறிவியல் ரீதியாக அறிவிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பது Ministry of Earth Science தான்.

நிலப்பரப்பில் ஒரு பகுதியில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்க வேண்டும் அப்படியென்றால் அதை Heat waveஆக எடுத்துக்கொள்ள முடியும். இதுவே கடல் இருக்கும் பகுதியென்றால் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, மலைப்பகுதி என்றால் 30 டிகிரி செல்சியஸ் பதிவானால் அது வெப்ப அலை எனப்படும் என, Ministry of Earth Science நிர்ணயித்துள்ளது.
ஆனால், இவை இரண்டு Metrological Stationகளில் பதிவாக வேண்டும், 48 மணி நேரம் பதிவாகியிருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளனர். ஆனால், வெப்ப அலை வருவது தொடர்பாக தீர்மானிக்க அவர்கள் வகுத்திருக்கும் Guidelines மிகவும் பழமையானதாக அல்லது தற்போதைய சூழலுக்கு ஏற்றது போல் இல்லை என்பது தான் உண்மை. இதை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் Universal Thermal Climate Index – UTIC, அமெரிக்கா Heat Index போன்ற மாடல்களை பின்பற்றுகின்றன.
இதில், வெறும் வெப்ப அலை, வெப்பநிலையில் அளவு எவ்வளவு இருக்குமென்பது மட்டுமின்றி Humidity, காற்றின் அளவு என பல தகவல்களை கொடுத்திருப்பார்கள். இது, நம்மைக்காட்டிலும் மிகவும் சிறப்பான Heat warning systemயாக கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வெப்பநிலைக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் வரையில் அவர்கள் சொல்கிறார்கள்,’’ என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த அவர், ‘‘இந்தியாவின் Heatwave Monitoring and Warning systemயின் மாடலை மாற்றியமைக்க வேண்டும், புதியகூறுகளான Humidity, Temperature, ஒவ்வொரு பகுதி எப்படி மாறும், Green Cover area கணக்கிட்டு அதற்கேற்ப அறிவிப்புகள் வெளியிட வேண்டும்,’’ என்கிறார்.
தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?
தமிழ்நாடு அரசு இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
‘‘ஒரு நகரத்தை நாம் கட்டுமானம் செய்கிறோம் என்றால் அது வெப்பத்தை தனிக்கக்கூடிய பகுதியாக இருக்க வேண்டும். சென்னையைப் பொறுத்தவரையில் ‘கீரின் கேர்’ எனப்படும் பசுமைப்பரப்பு அதிகமாக இருப்பதாலும், அதீத கட்டடங்கள் இருப்பதாலும் Urban Heat அதிகமாக இருக்கிறது. இதனால், இனி ACயின்றி சென்னையில் வாழ முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையை மாற்றுவதற்கு பசுமைப்பரப்பை நாம் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால், சென்னையில் கட்டுமானத்தை நாம் மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மரங்கள் அதிகரிக்க வேண்டும், நீர் நிலைகள் தேவைப்படுகிறது. இந்த அமைப்பு முறைகளை ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் திட்டமிடலில் இருந்து துவங்க வேண்டும், நகரங்களுக்கான மாஸ்டர் பிளேன்களில் நாம் மாற்றங்களைக் கொண்டு வந்து, பசுமைப்பரப்பையும், Heat Resillientஆன கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட வேண்டும். எங்கு கட்டடங்களை அனுமதிக்கலாம், எவ்வளவு அனுமதிக்கலாம், எவ்வளவு உயரம் என அனைத்தையும் திட்டமிட வேண்டும். Urban Heatingல் மிகப்பெரிய பிரச்சினைகளாக இருப்பது உயரமான கட்டடங்கள் தான். இவை அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கிக்கொண்டு வெளியில் விடாது. ஒரு வீட்டிற்கும் அல்லது குடியிருப்புக்கும் இடையில் இடைவெளி வேண்டும், மரங்கள் வேண்டும், பூங்கா வேண்டுமென அனைத்தையும் திட்டமிட வேண்டும்,’’ என்கிறார்.
நகரமயமாதலை கண்மூடித்தனமாகச் செய்யக்கூடாது…
நகரமயமாதலை கண்மூடித்தனமாக பின்பற்றினால் விளைவு படுமோசமாகும் என்கிறார் வெற்றிச்செல்வன்.
‘‘இதுவரை எப்படியோ இன்றைய சூழலுக்கு மாநில அரசு அனைத்தையும் திட்டமிட்டு, Heat Resillientஆன கட்டட வரைபடங்கள் உருவாக்கி, Heat Resillient Architecture முறைகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். இதை செயல்படுத்தாவிட்டால் சென்னையில் இனி யாரும் வாழ முடியாது.
சென்னையைச் சுற்றிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு என சில மாவட்டங்கள் பசுமைப்பரப்பாக, Heat குறைக்கும் பகுதியாக இருக்கிறது. இந்தப்பகுதிகளிலும் பரந்தூர் விமான நிலையம் போல பல விரிவாக்க பணி செய்யும் போது, பசுமைப்பரப்புகள் குறைந்து அனைத்துமே நகரமயமாகி, Concrete Jungle போல மாறி அதீத வெப்பத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும். நகரமயமாதலுக்கும் அதிகரிக்கும் வெப்பத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக ஆய்வறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. வறட்சி, வெப்பநிலை, நகரமயமாதல் இவை மூன்றும் பின்னிப்பிணைந்துள்ளது
கண்மூடித்தனமாக நகரமயமாதல், மாஸ்டர் பிளேன் அமைக்காமல், அனைத்தையும் கருத்தில் கொண்டு திட்டமிடல் (Policy) அளவில் மாற்றம் வேண்டும். அதுமட்டுமின்றி வெயிலில் வேலை செய்யும் பணியாளர்களைக் காக்க, தொழிலாளர் நலத்துறை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலையும் உருவாக்க வேண்டும். அதீத வெப்பத்தில் அவர்கள் பணி செய்வதை தவிர்க்கவும், அல்லது வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான நடைமுறைகளை வகுத்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக Gig workers எனப்படும் உணவு, பொருட்கள் டெலிவரி செய்ய வெயிலிலேயே அலைந்து திரியும் தொழிலாளர்களை காக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதிலும் நகரமயமாதல், கட்டமைப்பு என அனைத்தையும் மீளாய்வு செய்து, Heat Resillient மாடல்களாக அறிவுப்பூர்மான முறையில் கட்டமைக்காவிட்டால் இந்த வெப்ப அலை பல உயிர்களைக் காவு வாங்கும் என்பதே நிதர்சனமான உண்மை,’’ என எச்சரிக்கிறார் அவர். தமிழ்நாடு அரசு இனியாவது Heat waveயை ஒரு இயற்கை பேரிடராகக் கருதி, தனது திட்டமிடலை வெறும் வளர்ச்சி, வாய்ப்புக்கானதாக பார்க்காமல் அறிவுப்பூர்வமாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொள்ளுமா புதிய அரசு?