இந்தியாவில் நாளுக்கு நாள் மருத்துவ வசதிகள் சொல்ல முடியாத அளவிற்கு வளர்ச்சியை சந்தித்து வருகிறது. குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக்கூட எளிமையாக சிகிச்சை அளிக்கும் முறை கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு வெறும் 7 நிமிடங்களில் சிகிச்சை அளிக்கும் ஊசி ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மருத்துவத்துறை புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
புற்றுநோய்க்கு புதிய ஊசி:
புற்றுநோய் என்றாலே அதீத பயம் கொண்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தற்போது புதிய ஊசி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெசென்ட்ரிக் என்று அழைக்கப்படும் இந்த மருந்து ரோச் பார்மா இந்திய நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையின் போது நரம்பு வழியாக ஊசி செலுத்தப்படும். இந்த சிகிச்சை முறைக்கு பல மணி நேரம் எடுக்கும். தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ஊசி தோலுக்கு அடியில் செலுத்தப்படுகிறது. இதற்கு வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்தியாவில் மிகவும் பொதுவான நுரையீரல் புற்றுநோய் வடிவமான சிறிய அல்லாத உயிரணு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக அதாவது Non small cell lung cancer – NSCLC இந்த சிகிச்சை முறையானது உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய ஊசி செயல்படும் விதம்:
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஊசி புற்றுநோய் பராமரிப்பில் இம்யூனோதெரபியின் வளர்த்து வரும் முக்கியத்துவத்தைத் தெரிவிப்பதோடு உடலில் புற்றுநோய் செல்களை நேரடியாக தாக்குகிறது. கீமோதெரபி மேற்கொள்ளும் போது புற்றுநோய் செல்களை மட்டுமல்ல ஆரோக்கியமான செல்களையும் பாதிக்கும். இது புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் சொந்த நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது. இந்த மருந்தின் விலையானது ஒரு டோஸ் சுமார் 3.7 லட்சமாகும். நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையின் போது சுமார் 6 டோஸ்கள் வரை தேவைப்படுகிறது. உயிருக்குப் போராடக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி உபயோகமாக இருந்தாலும், இதன் விலை தான் மக்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது.
.