இலங்கையிலேயே மிகப் பெரிய மனிதப் புதைக்குழியாக அடையாளம் காணப்பட்டுள்ள யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழியின் ஆரம்பம் என கூறப்படும் கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 30 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1977ம் ஆண்டு பிறந்த கிருஷாந்தி குமாரசாமி, இதேபோன்றதொரு நாளில் ஆறு இலங்கை ராணுவ சிப்பாய்களினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – சுண்டிக்குளி மகளிர் பள்ளியின் உயர்தரத்தில் பரீட்சை எழுதிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய கிருஷாந்தி, காணாமல் போயிருந்தார்.
யாழ்ப்பாணம் நுழைவாயிலுக்கு அருகில், செம்மணி பகுதியில் வைத்து அவரை இறுதியாக உயிருடன் சிலர் கண்டுள்ளனர்.
இந்தநிலையில், செம்மணி பகுதியிலுள்ள ராணுவ காவலரணில் கிருஷாந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்ததை பலர் அவதானித்ததாக, அவர் தாயாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதையடுத்து, கிருஷாந்தியை தேடி, அவரது தாய் ராசம்மா, தம்பி பிரணவன் உள்ளிட்ட நால்வரும் அந்த ராணுவ காவலரணை நோக்கி சென்றதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், அவர்களும் படுகொலை செய்யப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 45 நாட்களின் பின்னர், இவ்வாறான படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட விசாரணைகளில் கிருஷாந்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்தன.
இதையடுத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 ராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரே, 15 உடல்களை கொண்ட செம்மணி மனிதப் புதைக்குழியை முதலில் அடையாளம் காட்டியிருந்தார்.
இவ்வாறான நிலையில், செம்மணி மனிதப் புதைக்குழி தொடர்பாக சர்வதேச கவனம் திரும்பியிருந்தது.

செம்மணி – சிந்துபாத்தி பகுதியிலுள்ள இந்து மயானத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னணியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
தகனம் செய்யப்படும் மயான பூமியில் முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் தொடர்ச்சியாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த மனிதப் புதைக்குழி என தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இறுதி அகழ்வு இடம்பெற்ற தினம் வரை 582 எலும்பு கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
இந்த மனிதப் புதைக்குழியில் மேலும் பல எலும்புக்கூடுகள் இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு விசாரணைகளின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை அவசியம் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.
எனினும், உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணைகள் தொடரும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
செம்மணி பகுதியில் தமது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் உறவினர்கள், தமது டீ.என்.ஏ மாதிரிகளை வழங்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, TNC செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.