தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் திணறி வந்த நிலையில், தற்போது திமுக கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐ.யூ.எம்.எல் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் நாளை முதல்வராக பதவியேற்கிறார் தவெக விஜய்.
நாடு முழுவதிலும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பல நலத்திட்டங்களை செயல்படுத்தி 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக 59 இடங்களிலும், எதிர்கட்சியான அதிமுக 47 தொகுதிகளிலும், திமுக ஆதரவில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிக் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.
முதலில் ஆதரவளித்த காங்கிரஸ்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க மொத்தமுள்ள, 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் தொங்கு சட்டசபை நிலை உருவானது.
இதனைத் தொடர்ந்து தவெகவின் முக்கிய தலைவர்களாக ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் போன்றோர் – திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சிகளிடம் ஆதரவைத் திரட்ட அந்தந்த கட்சி தலைமை அலுவலகங்களுக்குச் சென்று அந்தக்கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வந்தனர். ஆனால், ஆரம்பத்தில் யாரும் ஆதரவளிக்காமலே இருந்தனர். இந்நிலையில், ஆட்சியமைக்க தவெகவிற்கு இன்னமும் 10 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், திமுகவின் 10 ஆண்டு தேர்தல் கூட்டணி உறவை முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த 6ம் தேதி ஆதரவளித்தது. இதன் மூலம் 5 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐ.யூ.எம்.எல் மற்றும் விசிகவினர் ஆதரவளிக்காமல் இருந்த நிலையில், நேற்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர். இதன் மூலம் 107 இடங்கள் (விஜய் ராஜினாமா செய்யும் ஒரு தொகுதி கழித்து) மற்றும் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 4 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என, 116 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர்.
ஆனால், ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில் தவெகவினர் தொடர்ச்சியாக விசிக தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு கேட்டு வந்தனர். ஐ.யூ.எம்.எல் மற்றும் விசிக கட்சி தொடர்ச்சியாக ஆதரவளிக்காமல் இருந்ததுடன், திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொடர்ச்சியாக ஆலோசனைகள் செய்து, இன்று முடிவை வெளியிடுகிறோம், நாளை வெளியிடுகிறோம் என காலம் தாழ்த்தி வந்தனர்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு – விசிக!
இப்படியான நிலையில், விசிக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றவருமான வன்னியரசு தனது எக்ஸ் தளத்தில், ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற விசிகவின் பல ஆண்டு கோரிக்கையை முன்வைத்து பதவிட்டு வந்தார்.
மேலும், செய்தியாளர்களை சந்தித்தபோதும், ‘‘எங்களை ஒதுக்க நினைத்தாலும் நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முடிவுக்கு சரியான தருணம்’ எனப்பேட்டியிளத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ‘விசிகவினர் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்கள், துணை முதல்வர் பதவியைக் கேட்கிறார்கள், இரண்டு எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு பேரம் பேசுகிறார்கள்,’ என்றெல்லாம் அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்தன.
விசிகவுக்கு துணை முதல்வர் பதவி?.. வன்னியரசு பதில்#VanniArasu | #TVK | #VCK | #Vijay | #Thirumavalavan pic.twitter.com/B5zv3qJfgu
— PttvOnlinenews (@PttvNewsX) May 9, 2026
இதற்கிடையில், நேற்று வெள்ளிக்கிழமை 8ம் தேதி, விசிக தலைவர் திருமாவளவன் தவெகவுடனான கூட்டணி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தாமதமாகி இன்று 9ம் தேதி மாலை, 4 மணிக்கு விசிக தனது முடிவை வெளியிடுமென கூறப்பட்டது.
இன்று மாலை தவெக கட்சிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்த திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
‘விஜய்க்கு ஆதரவு – திமுகவுடன் கூட்டணி’ – திருமாளவன்!
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘‘விசிக கணித்தப்படி தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. திமுகவுடனான கூட்டணியில் விசிக போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
இந்த அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கிற சூழலில், இடதுசாரி கட்சிகளும், விசிக-வும் தொலைநோக்கு பார்வையோடு, எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு இணைந்தே முடிவெடுப்போம் எனக் கலந்து பேசி அறிவித்திருக்கிறோம். விசிக-வின் உயர்நிலைக்குழுக் கூட்டம் நேற்று இணைய வழியில் நடைபெற்றது. அதில் பேசப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் தலைமை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. கலந்தாலோசித்து தவெக-விற்கு ஆதரவு கடிதத்தை வழங்கியிருக்கிறோம். இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதனைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
செய்தியாளர் சந்திப்பு… pic.twitter.com/NuByWBNwFG
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 9, 2026
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். இன்றைய நடைமுறையில், எங்களால் விஜய் ஆட்சியமைக்க முடியாமல் போனது என்கிற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. எங்களால் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலுக்கு வந்துவிடக் கூடாது. இதன் அடிப்படையில், வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்கிற முடிவை எடுத்திருக்கிறோம்.
நாங்கள், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால், அரசியல் நெருக்கடியான இந்தச் சூழலில், அரசியல் கட்சியாக எங்களுக்கான சுதந்திரத்தைப் பயன்படுத்தி, இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.
இது எந்த வகையிலும், எங்களின் உறவைப் பாதிக்கும் என நாங்கள் நம்பவில்லை. ஆளுநர் விஜய்யைச் சந்திக்க மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குதிரை பேரம் நடப்பதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அரசியமைப்புச் சட்டத்தைப் பாதுக்காக்க வேண்டும். ஆளுநரைச் சந்தித்துவிட்டு, விசிக அலுவலகம் வருவதாக விஜய் சொன்னார். பதவியேற்பு நடந்துப் பிறகு வாருங்கள். இப்போது வர வேண்டிய கட்டாயம் இல்லை எனச் சொல்லியிருக்கிறேன். எங்களுடைய நிலைப்பாட்டை மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தோம். அவர் எங்களுடைய நிலைப்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.” என்றார்.
இதேபோல், தொடர்ச்சியாக திமுக கூட்டணியில் இருக்கிறோம் எனக்கூறி தவெக–விற்கு ஆதரவளிக்காமல் இழுத்தடித்த வந்த ஐ.யூ.எம்.எல் கட்சியும் தவெகவிற்கு ஆதரவளித்துள்ளனர். இதனை அக்கட்சியின் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சிகளின் ஆதரவைப் பெற்றதால் தற்போது தவெக் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.
மூன்று முறை ஆளுநரை சந்தித்த விஜய்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றிய போதிலும் ஆட்சி அமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்வி அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை.
மே 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து இன்று 9ம் தேதி வரையிலான, ஐந்து நாட்களில் மூன்று முறை விஜய் தமிழ்நாடு ஆளுநர் ஆர்வி அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றி இதுவரையில் அதிக இடங்களைப் பிடித்த கட்சி, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் இல்லாவிட்டாலும், Floor Testல் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்கும். ஆளுநர் மாளிகையிலோ அல்லது அவரிடம் கடிதங்கள் கொடுத்தோ அதை ஆளுநர் மாளிகையில் நிரூபித்தது இல்லை.
ஆனால், விஜயின் விஷயத்தில் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆளுநர், ‘நீங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் ஆதரவுக்கடிதம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுக்கடிதம் கொடுத்தால் ஆட்சியமைக்கலாம்,’ எனக்கூறி தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் விஜயை திருப்பி அனுப்பியிருந்தார். இதனால், பாஜகவினர் வேண்டுமென்றே ஆளுநரை வைத்து விஜயை நசுக்கப்பார்க்கிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தற்போது, தலா இரண்டு எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கும் விசிக, ஐ.யூ.எம்.எல், இந்திய கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் என திமுக கூட்டணி கட்சிகளின் 13 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெக பெற்றுள்ளது.
தங்களின் 107 எம்.எல்.ஏக்களுடன் இந்த 13 எம்.எல்.ஏக்கள் சேர்த்து 120 பேரை வைத்திருக்கும் பெரும்பான்மை பெற்ற, ஆட்சியமைக்க தகுதிவாய்ந்த கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு, 7:00 மணிக்கு தவெக தலைவர் விஜய், ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது நிர்வாகிகளுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இரண்டு மணி நேரமாக தொடர்ச்சியாக விஜய் தரப்பு ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது,

நாளை பதவியேற்கிறார் விஜய்
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை 10ம் காலை, 10:00 மணிக்கு, 9 அமைச்சர்களுடன் விஜய் முதல்வராக பதவியேற்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெகவில் யாரெல்லம் அமைச்சராகிறார்கள், கூட்டணிக்கட்சிகளில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுக்கப்படுமென இன்னமும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
5 நாட்களாக தமிழக மக்கள் Breaking Newsகளை பார்த்தபடி அமர்ந்திருக்க, நீண்ட இழுப்பறிக்குப்பின் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டிய பிறகு, நாளை முதல்வராக பதவியேற்று, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றியமைக்கப்போகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.