அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழகத்திலுள்ள சுமார் 80000 இலங்கை அகதிகள் நாடு திரும்புவார்களா?

30 வருட உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில், நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் இடம்பெயர்ந்து, இந்தியாவிற்கு சென்ற இலங்கை அகதிகளை மீள நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் ஆம் தேதி வரையான காலத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்களின் ஊடாக அல்லது உரிய கடவூச்சீட்டை பயன்படுத்தாது, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று அகதி அந்தஸ்த்தை பெற்றுக்கொண்டவர்களையே நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய, சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில், குறிப்பாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப் பகுதியில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்களுக்கு இவ்வாறு நாடு திரும்பும் அனுமதி தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைகள் என்ன?

போர் இடம்பெற்ற காலப் பகுதியில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது உரிய கடவூச்சீட்டை பயன்படுத்தாது, இலங்கையிலிருந்து இந்தியா சென்று அகதிகளாக இருந்த பின்னணியில், இந்திய அரசாங்கத்தினால் அகதிகள் அந்தஸ்த்து வழங்கப்பட்ட நபர்கள், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்தின் ஊடாக சுயேற்சையாக தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அகதிகளாக இருக்கும் இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு நாட்டிற்கு மீள திரும்புவதற்கு தேவையான குடிவரவு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சட்ட மாஅதிபரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதிக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது உரிய கடவூச்சீட்டு பயன்படுத்தாது நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக இருந்த பின்னணியில், இலங்கை வெளிநாட்டு தூதுக்குழுவின் அலுவலகத்தில் இலங்கையர் என உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலான அரச புலனாய்வு சேவையின் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியமாகின்றது.

இவ்வாறு இலங்கை வருகைத் தர விருப்பம் தெரிவிக்கும் இலங்கையர், மனிதப் படுகொலை, அரச துரோகம் மற்றும் தவறுகள் செய்யாத நபர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகின்றது.

குறித்த நபர்களுக்கு தற்காலிகமாக கடவூச்சீட்டு விநியோகிக்கப்பட்டு, 1948ம் ஆண்டு 20ம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் பிரகாரம், எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாது, அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்குள் வருதைத் தர சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி முதல் போர் முடிவடைந்த 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி வரையான காலப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது உரிய கடவூச்சீட்டு பயன்படுத்தாது நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக இருந்த பின்னணியில், இலங்கை வெளிநாட்டு தூதுக்குழுவின் அலுவலகத்தில் இலங்கையர் என உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலான அரச புலனாய்வு சேவையின் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை பெற்றுக்கொள்ளும் இலங்கையர்களுக்கு, 1948ம் ஆண்டு 20ம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் பிரகாரம், குடிவரவு, குடியகல்வு ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அந்த சட்டத்தின் பிரகாரம், எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாது அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்குள் வருகைத் தர சந்தர்ப்பம் வழங்கப்படும்.

மனிதப் படுகொலை, அரச துரோகம் மற்றும் தவறுகளை இழைத்தவர்கள் இருப்பார்களாயின், அவர்கள் விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக தேவையான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள்?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதன்பின்னரான காலத்தில் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்று, அங்கு இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 என இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழகத்தில் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக தமிழகத்தின் 26 மாவட்டங்களிலுள்ள 103 அகதி முகாம்களில் 58,500 இலங்கை அகதிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இதைத்தவிர, இந்திய அரசாங்கத்தின் பதிவுகளுடன், அகதி முகாம்களுக்கு வெளியில் சுமார் 30,000 இலங்கையர்கள், அகதிகளாக வாழ்ந்து வருகின்றமை தொடர்பிலான தரவுகள் உள்ளதாக இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழகத்தில் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் குறிப்பிடுகின்றது.

அத்துடன், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக ஆயிரக்கணக்கானோர் சென்றுள்ளனர்.

எனினும், 2015ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான வருகைத் தருவோரை பதிவு செய்யும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் கைவிட்டிருந்தது.

இதன்படி, ‘ஓவர் ஸ்டே” என்ற நிலையின் கீழ், இந்தியா முழுவதும் சுமார் 5000 இலங்கையர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இலங்கையில் 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப் பகுதியில் சுமார் 300ற்கும் அதிகமான இலங்கையர்கள், தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற இலங்கையர்கள் பதிவு செய்யப்படாத போதிலும், அவர்கள் மண்டபம் முகாம் மற்றும் முகாம்களுக்கு வெளியில் தங்க வைக்கப்பட்டு அந்த நாட்டு அரசாங்கம் அவர்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது.

இவ்வாறு தமிழகத்திற்கு வருகைத் தந்துள்ள சுமார் 5000 பேருக்கு எந்தவித பதிவுகளும் இல்லை என இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழகத்தில் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவிக்கின்றது.

இலங்கையிலிருந்து வருகைத் தந்து தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதில் பல சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி உரிமை, வீட்டுரிமை, வாழ்வாதார உதவிகள், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பும் பட்சத்தில் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழகத்தில் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், நாடு திரும்புவதற்கு கோரப்படும் ஆவணங்கள் தொடர்பிலும் தமக்கு தெளிவில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தமது தாய்நாட்டிற்கு திரும்பும் எண்ணத்தில் குறிப்பிட்ட சிலர் இருப்பதாகவும், அவர்களுக்கு இதுவரை சரியான தகவலகள் கிடைக்கவில்லை எனவும் இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழகத்தில் செயற்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் குறிப்பிடுகின்றது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh