அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

அமெரிக்கா, சீனாவின் அதிரடி நடவடிக்கைகள் – இலங்கைக்கு விரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த விஜயத்தை மேற்கொள்ள அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயமானது, மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இந்த விஜயம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்கள் தற்போது அரசாங்க மட்டத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஏற்பாடுகள், இலங்கை விஜயத்தின் போதான சந்திப்புக்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருநாடுகளுக்கும் இடையிலான ஒன்றிணைந்த நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள், வலயத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின் போது கலந்துரையாட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் கடந்த சில வருடங்களாக முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், அந்த விஜயம் பின்னர் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங் இலங்கை வருவதன் முக்கியத்துவம் என்ன?

பூகோள அரசியலில் இலங்கை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றமையினால், உலக நாடுகள் இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த நிலையில், அயல் நாட்டிற்கு முக்கியத்துவம் என்ற நிலையில், இலங்கை தொடர்பில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகின்ற பின்னணியில், இந்தியாவிற்கு எதிராக சீனா மற்றும் அமெரிக்கா இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது கடந்த காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில், 2035ம் ஆண்டை நோக்கிய வலுசக்தி போட்டித் தன்மையானது, இலங்கையையும் அதன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச நாடுகளுக்கான வலுசக்தி பரிமாற்ற நடவடிக்கைகளில் 35 சதவீதமான பரிமாற்று செயற்பாடுகள் இலங்கையை அண்மித்த கடல்மார்க்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால், இலங்கை தொடர்பில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா இலங்கை மீதான ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது.

இலங்கை மீதான அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தை, இந்தியா ஒருபோதும் விரும்பாத நிலையில், வலயத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் சார்ந்த விடயங்களில் இலங்கை குறித்து இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா தற்போது இலங்கையிலுள்ள தமது தூதரகங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய நிலையில், இந்தியா இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

இலங்கைக்கான அமெரிக்க புதிய தூதுவராக எரிக் மேயர் அண்மையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, இலங்கைக்கான சீன தூதுவரும் மாற்றப்பட்டு, புதிய தூதுவர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட நிலையில், அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக வீ ஹுவாசியாங், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து, தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் வீ ஹுவாசியாங்

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தூதுவர்கள், வலுசக்தி தொடர்பிலான துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அமெரிக்கா மற்றும் சீனாவின் மாற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வரும் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடுகளை குறைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என கூறப்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக இந்திய உயர்மட்ட அதிகாரிகளின் பிரவேசம் இலங்கையில் தற்போது படிப்படியாக அதிகரித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தற்போது பதவி வகிக்கும் சந்தோஷ் ஜேயின் பதவிக் காலம், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலையீடுகளை இலங்கையில் குறைக்கும் அதிகாரத்தை கொண்ட ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் இந்தியா அதிக கவனம் செலுத்தும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதன் நகர்வுகளை மேற்கொள்ளும் வகையிலேயே இந்திய பிரதிநிதிகளின் வருகை இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஸ்ணன் வருகைத் தந்திருந்தார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட பலரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார்.

இந்த மாத முதல் காலப் பகுதியில் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி வருகைத் தந்ததுடன், அடுத்த மாத முதல் பகுதியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகைத் தரவுள்ளார்.

வலுசக்தி சார்ந்த போட்டித்தன்மை சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில், அதன் அடுத்தக்கட்ட நகர்வாக அமெரிக்கா மற்றும் சீனாவின் நகர்வுகளை போன்றே இந்தியாவும் அதிரடி நகர்வுகளை மேற்கொள்வதில் சந்தேகம் இல்லை என்கின்றார்கள் சர்வதேச அரசியல்சார் நிபுணர்கள்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh