அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தீவிர கள அரசியலிலும் இறங்கியுள்ளார். கடந்த செப்டம்பர்13-ம் தேதியிலிருந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களைச் சந்தித்துவருகிறார். செப்டம்பர் 13-ம் சனிக்கிழமையன்று தவெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். திருச்சியில் துவங்கி அரியலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அதனைத்தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி சனிக்கிழமை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். நாகப்பட்டினம், திருவாரூரில் மக்களிடையே பேசிய அவர், ‘திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில் இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். விஜய்யை சந்திப்பதற்காக அதிகாலை முதலே நாமக்கலில் தொண்டர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என்று ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். சுமார் 9 மணி அளவில் சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்ட அவர், திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் சென்றடைந்தார். நாமக்கல் சென்ற அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழியெங்கும், விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து செல்கின்றனர்.