குழந்தை பிறக்கும் நாட்கள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாகும். பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன், பிறந்த குழந்தையைப் பராமரிப்பதிலும் தந்தையின் பங்கு மிகவும் அவசியமாகிறது. இந்தச் சூழலில், தமிழக அரசுப் பணியாளர்களிடமிருந்து ஆண் ஊழியர்களுக்கும் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தற்போது 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
எப்போது இந்த விடுப்பைப் பயன்படுத்தலாம்?
தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பின்படி, திருமணமான ஆண் அரசு ஊழியர்கள் தங்களது மனைவியின் மகப்பேறு காலத்தில் மொத்தம் 15 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். இந்த விடுப்பைப் பயன்படுத்துவதற்கு அரசு இரண்டு கால அவகாசங்களை வழங்கியுள்ளது. குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு இருந்தே விடுப்பை எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை அந்த நேரத்தில் உங்களுக்கு விடுப்பு தேவையில்லை என்று நினைத்தால் குழந்தை பிறந்த தேதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண் அரசு ஊழியர்கள் ஏற்கனவே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண் மகப்பேறு விடுப்பின் முக்கியத்துவம்:
மகப்பேறு காலம் என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான காலக்கட்டம். உடல் ரீதியாகவம், மன ரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த நேரத்தில் அவர்களுடைய கணவரின் ஆறுதல் தேவை என்பதாலும், குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் அரசு ஆண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஆண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கிய மாநிலங்கள்:
2004ஆம் ஆண்டிலேயே ராஜஸ்தான் அரசு ஆண் பணியாளர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் விடுப்பு வழங்குவதற்கான விதியை அறிமுகப்படுத்தியது. இதே போன்று கடந்த 2016 ஆண்டு மேற்கு வங்க அரசு அப்பாக்களுக்கும், குழந்தை பராமரிப்பு விடுப்பை அறிமுகப்படுத்தியது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், குழந்தை பிறக்கும் சமயத்தில் மட்டுமின்றி, குழந்தைக்கு 18 வயது ஆகும் வரையிலும் இந்த விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிக்கிம் மாநிலத்தில் பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பும், ஆண் அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் வரை தந்தையர் விடுப்பு வழங்குகிறது. கடந்த 2024 ஆண்டு வெளியிடப்பட்ட திருத்தத்தின் படி, பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்தோ அல்லது குழந்தை பிறந்த 90 நாட்களுக்கு உள்ளாகவே இந்த விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் அரசு ஆண் பணியாளர்களுக்கு மனைவியின் பிரசவத்தின்போது 10 நாட்கள் தந்தையர் விடுப்பு வழங்கப்படுகிறது. மேலும் கடந்த 2025 ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் வரை தந்தையர் விடுப்பு வழங்குகிறது. ஒடிசாவில் அரசு ஆண் பணியாளர்களுக்கு ஏற்கெனவே 15 நாட்கள் தந்தையர் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தந்தையர்களுக்கும் இந்தச் சலுகையை விரிவுபடுத்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஏற்கனவே மத்திய சிவில் சர்வீஸ் விதிகள் 1972-ன் விதி 43-A-ன் கீழ், குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவோ விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.