நபிகள் நாயகம் தொடர்பில் பேஸ்புக்கில் தவறாக பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரான அனோஜன் என்ற இளைஞனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இதன்படி, ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் தண்டப் பணத்தை செலுத்துமாறும் சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், பாதிக்கப்பட்ட அனோஜன் தனக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து குடும்பத்தாருக்கு அறிவித்துள்ளார்.
தண்டப் பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில், மேலும் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என கூறப்படுகின்றது.
நடந்தது என்ன?

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த உற்சவத்தில் கலந்துக்கொள்வதற்காக வடக்கிலிருந்து பாத யாத்திரை மூலம் பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்.
இவ்வாறு பாத யாத்திரை வந்தவர்களுடன் அவர்களுடைய சுப்ரமணியம் என்ற நாயும் பாத யாத்திரை வந்திருந்தது.
கல்முனை பகுதியில் வைத்து, இஸ்லாமிய இளைஞர் ஒருவர், சுப்ரமணியம் என அழைக்கப்படும் நாயின் மீது தாக்குதல் நடாத்தியிருந்தார்.
குறித்த இஸ்லாமிய இளைஞன் நாயை தனது காலினால் தாக்கும் படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இஸ்லாமிய இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.
நாயின் மீது தாக்குதல் நடாத்தி இளைஞன், தான் அறியாமல் செய்த தவறை ஒப்புக் கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த நிலையில், நாயின் மீது தாக்குதல் நடாத்திய படமொன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருந்த நிலையில், அந்த படத்திற்கு கீழ் சவுதி அரேபியாவில் வேலை செய்யும் அனோஜன் என்ற இளைஞன் கருத்தொன்றை பகிர்ந்திருந்தார்.
இந்த கருத்தானது, நபிகள் நாயகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்த பின்னணியில், இந்த விடயம் பாரிய பேசுப் பொருளாக மாறியது.
இஸ்லாமியர்கள் மாத்திரமன்றி, அனைத்து சமூகத்தினரும் இந்த கருத்தை வன்மையாக கண்டித்திருந்தார்கள்.
கல்முனை பகுதியைச் சேர்ந்த அனோஜன், வேலை செய்யும் நோக்கில் சவுதி அரேபியா சென்றிருந்த ஒருவர்.
இவ்வாறான நிலையில், தமிழ் மொழியில் பதிவேற்றப்பட்டிருந்த இந்த பதிவை, சிலர் அரபு மொழியில் மொழிப் பெயர்ப்பு செய்து பதிவிட்டு தமது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.
அரபு மொழியில் பதிவேற்றப்பட்ட குறித்த பதிவை அடிப்படையாகக் கொண்டு, சவுதி அரேபியா போலீஸாரிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அனோஜன், கடந்த ஜுன் மாதம் 30ம் தேதி அந்த நாட்டு போலீஸாரினால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்தார்.
அனோஜன், சமூக வலைத்தளங்களின் ஊடாக தமது தவறை ஏற்று, மன்னிப்பு கோரியிருந்த போதிலும், அவரை விடுவிக்க அந்த நாட்டு அரசாங்கம் தயாராகயிருக்கவில்லை.
அனோஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு நேற்றைய தினம் இறுதி தீர்ப்ப வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் தண்டப் பணமும் செலுத்த வேண்டும் என சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குடும்பத்தாரின் கோரிக்கை
தனது மகனை விடுதலை செய்துக்கொள்வதற்காக உதவிகளை செய்யுமாறு அனோஜனின் பெற்றோர் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த அனோஜனின் பெற்றோர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தை நடாத்தி, அதனூடாக சவுதி அரேபியா அரசாங்கத்திடம் அனோஜனின் விடுதலை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடாத்த பெற்றோர் தயாராகி வருகின்றனர்.
சமூக செயற்பாட்டாளர்களின் உதவியுடன் இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஓரிரு தினங்களில் நடாத்தப்படவுள்ளதாக சமூக செயற்பாட்டளார்கள் TNC தமிழுக்கு தெரிவித்தனர்.