தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்குப் (SIR) பிறகு, சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (SSR-2027) அடிப்படையில் 5 கோடியே 77 லட்சத்து 46 ஆயிரத்து 618 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது 4 லட்சத்து 3 ஆயிரத்து 327 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2027 ஜனவரி 1ம் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5,77,46,618 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,82,03,992 பேர் ஆண்கள், 2,95,34,734 பேர் பெண்கள், 7,892 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 13,30,742 பேர் அதிகமாக உள்ளனர். மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் பெண்களின் பங்கு 51.15 சதவீதமாக உள்ளது.
SIR-க்குப் பிறகு 4 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு!
தமிழகத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது (SIR), சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால், அதற்கு முன்பு சுமார் 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 5.43 கோடியாகக் குறைந்தது.
இதையடுத்து, ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளைப் பரிசீலித்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு, 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 5.67 கோடி பேர் இடம்பெற்றனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புகளின் மூலம், ஏப்ரல் 6ஆம் தேதி நிலவரப்படி வாக்காளர்களின் எண்ணிக்கை 5,73,43,291 ஆக உயர்ந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 5,77,46,618 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஏப்ரல் மாதத்திலிருந்து 4,03,327 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 2,29,829 பெண்களும், 1,73,334 ஆண்களும், 164 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.
SIR-க்கு முன்பு இருந்த 6.41 கோடி வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய எண்ணிக்கை இன்னும் சுமார் 64 லட்சம் குறைவாகவே உள்ளது.
பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!
தமிழக வாக்காளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, 13,30,742 பெண்கள் ஆண்களைவிட அதிகமாக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த வித்தியாசம் 12,74,247 ஆக இருந்தது.

மாநிலத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 221 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். அதேபோல், 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டுமே ஆண் வாக்காளர்கள் 6,913 பேர் அதிகமாக உள்ளனர்.
அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம் எது?
மாவட்ட வாரியான பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் 32,39,301 வாக்காளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை மாவட்டம் 29,14,908 வாக்காளர்களுடன் இரண்டாவது இடத்திலும், சேலம் மாவட்டம் 27,95,315 வாக்காளர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கோவை மாவட்டத்தில் 27,68,820 வாக்காளர்களும், மதுரை மாவட்டத்தில் 25,13,711 வாக்காளர்களும் உள்ளனர்.
மறுபுறம், அரியலூர் மாவட்டம் 5,29,528 வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக உள்ளது.
38 மாவட்டங்களின் வாக்காளர் எண்ணிக்கை!
- திருவள்ளூர் – 32,39,301
- சென்னை – 29,14,908
- காஞ்சிபுரம் – 12,21,180
- வேலூர் – 11,59,481
- கிருஷ்ணகிரி – 15,82,153
- தருமபுரி – 12,59,510
- திருவண்ணாமலை – 19,47,156
- விழுப்புரம் – 16,08,995
- சேலம் – 27,95,315
- நாமக்கல் – 13,29,376
- ஈரோடு – 17,69,770
- நீலகிரி – 5,54,840
- கோவை – 27,68,820
- திண்டுக்கல் – 17,01,894
- கரூர் – 8,56,198
- திருச்சி – 21,61,238
- பெரம்பலூர் – 5,62,134
- கடலூர் – 20,49,811
- நாகப்பட்டினம் – 5,35,448
- திருவாரூர் – 9,95,279
- தஞ்சாவூர் – 19,80,334
- புதுக்கோட்டை – 13,18,948
- சிவகங்கை – 11,26,500
- மதுரை – 25,13,711
- தேனி – 10,46,972
- விருதுநகர் – 15,19,601
- ராமநாதபுரம் – 11,33,535
- தூத்துக்குடி – 13,95,495
- திருநெல்வேலி – 12,74,966
- கன்னியாகுமரி – 15,26,871
- அரியலூர் – 5,29,528
- திருப்பூர் – 20,01,436
- கள்ளக்குறிச்சி – 11,30,530
- தென்காசி – 12,80,475
- செங்கல்பட்டு – 23,26,822
- திருப்பத்தூர் – 9,28,853
- ராணிப்பேட்டை – 9,58,271
- மயிலாடுதுறை – 7,40,963
அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது?
சட்டப்பேரவைத் தொகுதிகள் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி 5,58,729 வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது. இதில் 2,85,714 பெண்கள், 2,72,898 ஆண்கள், 117 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி தொகுதியில் 4,39,953 வாக்காளர்களும், மாதவரம் தொகுதியில் 4,37,465 வாக்காளர்களும் உள்ளனர்.
மாநிலத்திலேயே குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதி உள்ளது. இங்கு 1,20,852 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் 29.14 லட்சம் வாக்காளர்கள்!
சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ். சமீரன் ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதன்படி, சென்னையில் மொத்தம் 29,14,908 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,04,968 பேர் ஆண்கள், 15,09,040 பேர் பெண்கள், 900 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி இருந்த 28,93,505 வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது, தற்போது 21,403 பேர் அதிகரித்துள்ளனர்.
ஏப்ரல் 6 முதல் அக்டோபர் 31 வரையிலான தொடர் திருத்தப் பணிகளின்போது சென்னையில் 34,999 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் 13,596 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சென்னையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக பெரம்பூர் (2,28,139) உள்ளது. குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக துறைமுகம் (1,20,852) உள்ளது.
மேலும், சென்னையில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 46,200 இளம் வாக்காளர்களும், 85 வயதுக்கு மேற்பட்ட 28,159 மூத்த குடிமக்களும் இடம்பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 12,805 பேர் உள்ளனர். சேவை வாக்காளர்களின் எண்ணிக்கை 531 ஆகும்.
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 4,079-லிருந்து 4,071 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
SIR-க்கு முன்பு இருந்த எண்ணிக்கையை எட்டியதா சென்னை?
சென்னையைப் பொறுத்தவரையில், SIR நடவடிக்கையின்போது அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
SIR-க்கு முன்பு சென்னையில் 40,04,694 வாக்காளர்கள் இருந்தனர். 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட SIR வரைவு பட்டியலில் இந்த எண்ணிக்கை 25,79,676 ஆகக் குறைந்தது. அதாவது, சுமார் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
பின்னர் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளைப் பரிசீலித்ததைத் தொடர்ந்து, 2026 பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றனர்.

அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில் 28,93,505 ஆகவும், தற்போது 29,14,908 ஆகவும் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
SIR-க்கு முன்பு இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, சென்னையில் இன்னும் சுமார் 10.9 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.
இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். பிப்ரவரி மாத இறுதிப் பட்டியலுடன் ஒப்பிடும்போது தற்போது சுமார் 84,000 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு 21,403 மட்டுமே.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பெயர் விடுபட்டவர்கள், புதிதாக 18 வயது நிறைவடைந்தவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் மற்றும் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், நவம்பர் 12 முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள்:
- படிவம் 6 – புதிய வாக்காளர் பெயர் சேர்க்க.
- படிவம் 6A – வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வாக்காளர்களின் பெயர் சேர்க்க.
- படிவம் 7 – பெயர் நீக்கம் அல்லது ஆட்சேபனை தெரிவிக்க.
- படிவம் 8 – முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள.
இந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in இணையதளம் மற்றும் ECINET செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

2027 ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை நிறைவு செய்யும் தகுதியுடையவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், 2027 ஜனவரி 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
SIR நடவடிக்கையின்போது நீக்கப்பட்ட பெயர்களில் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர், புதிதாக எத்தனை பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர், நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியலைப் பொதுமக்கள் சரிபார்த்து, தங்களது பெயர் மற்றும் விவரங்கள் சரியாக இடம்பெற்றுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.