கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இரவு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த துயரச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஐஜி அஸ்ராக் கார்க் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. மேலும், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதனை எதிர்த்து தவெக தரப்பு உச்சநீமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றுபாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
சிபிஐ விசாரணைக் கோரிய 5 மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பிலும், உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பிலும் சிபிஐ போன்ற பொதுவான ஒரு அமைப்பு விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்றும், அரிதான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணைத் தேவை என்றும், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இரவில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் எந்தத் தவறும் இல்லை என்று வாதம் வைக்கப்பட்டது.
இரண்டு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், உடற்கூராய்வு செய்வதற்கு எத்தனை ஸ்லேப்கள் பயன்படுத்தப்பட்டது என்றும், மதுரைக்கிளையில் வழக்கு இருக்கும்போது சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு ஏன் புலனாய்வுக்குழுவை நியமித்தது என்றும் கேள்வி எழுப்பியது. மேலும் அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் எழுத்துப்பூர்வ ஆவணம் சமர்பிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று காலையில் இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு சிபிஐ விசாரணை மேற்பார்வையிடும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும், அவருடன் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.