இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் முக்கிய இடத்தை வகிப்பது கதிர்காமம்.
கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது ஆரம்பமாகி, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ், சிங்கள மற்றும் இஸ்லாமிய பக்தர்களின் யாத்திரை, கதிர்காமத்தை நோக்கி ஆரம்பமாகியுள்ளது.
கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்வசம், கடந்த 15ம் தேதி, கதிர்காமம் தர்கா பள்ளிவாசல் வளாகத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தற்போது விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கதிர்காமம் கந்தனின் ஆடிவேல் திருவிழாவானது, இஸ்லாமிய மரபுகளுக்கு அமைய, அரபு எழுத்துக்களினால் பொறிக்கப்பட்ட கொடியே ஏற்றப்பட்டு, மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பாக சிங்கள முறைப்படியான பூஜை வழிபாடுகளே இங்கு நடைபெறுவது வழக்கம்.
கதிர்காமம் கந்தனை, கத்தரகம தெய்யோ என்றே சிங்களவர்கள் அழைத்து வழிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது கதிர்காமம் நோக்கி பக்தர்கள் படையெடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கதிர்காமத்திற்கான காட்டு வழிப் பாத யாத்திரை
இலங்கையின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புனித பூமியே கதிர்காமம்.
கதிர்காமம் உற்வசம் காலம் ஆரம்பமாவதற்கு முன்னரே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் பாத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு முறைகளின் கீழ் கதிர்காமத்தை நோக்கி வருகைத் தர ஆரம்பிப்பது வழக்கமானது.
இதன்படி, இம்முறையும் கதிர்காமத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக கதிர்காம கந்தனை வழிபடுவதற்கான காட்டு வழி பாத யாத்திரை மிகவும் பிரசித்திப் பெற்ற, பழைமை வாய்ந்த வழிபாட்டு முறையாக காணப்படுகின்றது.
இந்த காட்டு வழி பயணமானது மிகவும் ஆபத்தானது என்ற போதிலும், பக்தர்கள் அதனையும் பொருட்படுத்தாது இந்த பயணத்தை பக்தியுடன் மேற்கொள்கின்றனர்.
இலங்கையின் கிழக்கு பகுதியில் ஆரம்பமாகி, தென் கிழக்கு பகுதி வரை வியாபித்துள்ள யால வனப் பகுதியின் ஒரு அங்கமே குமன பறவைகள் சரணாலயம்.
இந்த பகுதி வழமையாகவே வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் மூடப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நிலையில், கதிர்காம மகோற்சவ காலப் பகுதியில் மாத்திரம் புனித பாத யாத்திரைக்கான திறக்கப்படும்.
இதன்படி, இம்முறையும் இந்த பகுதி பக்தர்களின் வழிபாட்டுக்கான திறக்கப்பட்டுள்ளது.
இந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கு, வரலாற்று சிறப்புமிக்க உகந்தை முருகன் ஆலயத்தை வழிபடும் சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.

யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றமை மற்றும் அரிய வகை காட்டு மிருகங்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டும் இந்த வழியாக செல்ல மக்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும், கதிர்காம புனித யாத்திரைக்காக மாத்திரம் இந்த வழி திறக்கப்படுகின்றது.
இலங்கையின் வடப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் காட்டு வழி பாத யாத்திரையை மேற்கொள்கின்றமை விசேட அம்சமாகும்.

இந்த வழியாக இம்முறை புனித பாத யாத்திரையை மேற்கொண்ட முருகன் பக்தரான வெலிமடை பகுதியைச் சேர்ந்த சத்திவேல் கோகுலன் எமது செய்திப் பிரிவுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
குமன வனப் பகுதியிலிருந்து கதிர்காமத்திற்கு சுமார் 100 கிலோமீற்றர் வரை நடந்து சென்று இம்முறை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார் சத்திவேல் கோகுலன்.
‘நாங்கள் உகந்தை முருகன் ஆலயத்திற்கு கடந்த 10ம் தேதி சென்றோம். அங்கு சிறப்பு பூஜை வழிபாடுகளை நடத்தினோம். அதன்பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு கதிர்காமத்திற்கான எமது பாத யாத்திரையை ஆரம்பித்தோம். கதிர்காமத்தை சென்றடைய 5 நாட்கள் எடுத்தன. யானைகளின் நடமாட்டம் அதிகம் என்பதனால் மாலை வேலையில் பாத யாத்திரை செல்ல அரசாங்கம் தடை விதிக்கின்றது. அதனால் இரவு நேரத்தில் பாத யாத்திரை மேற்கொள்ள முடியாது. இரவு நேரத்தில் காட்டு பகுதியில் அங்காங்கே வெட்டை வெளிப் பகுதிகளில் தங்கிக் கொள்வோம். இரவு காட்டு பகுதியிலேயே சமைத்து சாப்பிடுவோம். இப்படி 5 நாட்கள் நடந்து கதிர்காம கந்தனை வழிபட்டமை மனதிற்கு திருப்தியாக உள்ளது.” என சத்திவேல் கோகுலன் தெரிவிக்கின்றார்.

பாத யாத்திரை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அங்காங்கே மிருகங்கள் இறந்த நிலையில் இருந்ததையும் தாம் அவதானித்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
”நாங்கள் செல்லும் வழியேங்கும் பல மிருகங்கள் இறந்த நிலையில் இருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. மான், மரை, யானை, காட்டு எருமை, பறவைகள் என பல உயிரினங்கள் இறந்த நிலையில் காணப்பட்டன. இந்த உயிரினங்கள் இறந்த நிலையில் இருப்பதை பார்க்கும் போது கவலையாக இருந்தது. இந்த காட்டு வழி பயணத்தில் போது, காட்டு பகுதிக்குள் பாரம்பரிய கடவுன் வழிபாட்டு முறைகள் காணப்பட்டன. அந்த இடங்களில் வழிபாடுகளை நடத்தினோம். இந்த காட்டு பகுதியில் மூலிகைகள் இருப்பதாகவும், இந்த காட்டு வழி பயணத்தின் போது மூலிகைகளின் வீரியம் காற்று வழியாக பக்தர்களின் உடலில் பட்டால் அது நோய் நிவாரணியாக அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.” என அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு கதிர்காமத்தை நோக்கி சென்று, மகோற்சவத்தின் கொடியேற்றத்தையும் பார்வையிட்டு வழிபாடுகளை நடாத்தினார் சத்திவேல் கோகுலன்.
கதிர்காமம் முருகன் ஆலயம் மாத்திரமன்றி, அங்கு பிள்ளையார், வள்ளி, தெய்வானை சிவன், விஷ்ணு, காளியம்மன், அஞ்சநேயர் உள்ளிட்ட பல ஆலயங்கள் இருக்கும் அதேவேளை, கிரிவேஹெர புத்த விகாரை, தர்கா பள்ளிவாசல் ஆகியனவும் காணப்படுகின்றன.
கதிர்காம முருகனின் மகோற்சவ பெருவிழா, தர்கா பள்ளிவாசலில் கொடியேற்றத்துடன் இம்முறை வெகு விமர்சையாக ஆரம்பமானது.

”இஸ்லாமிய மார்க்கத்தின் வழிமுறைகளின் பிரகாரம் வழிபாடுகள் நடாத்தப்பட்டன. இந்த வழிபாடுகளில் பௌத்த பிக்கு மற்றும் சைவ குருக்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் ஒன்றிணைந்து தர்கா பள்ளிவாசல் வளாகத்தில் கொடியை ஏற்றி, மகோற்சவத்தை ஆரம்பித்திருந்தார்கள்.” என சத்திவேல் கோகுலன் தெரிவிக்கின்றார்.
அதன்பின்னர் முருகன் ஆலயத்தின் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு, அன்று நள்ளிரவு முதலாவது வீதிவுலா (பெரஹெர) இடம்பெற்றது.
யானைகளின் மீது முருகனின் புனித சின்னங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட சின்னங்கள் ஏற்றியவாறு வீதிவுலா இடம்பெற்றது.

செல்ல கதிர்காமம், எழுமலை என பல்வேறு வழிபாட்டு முறைகளை கொண்டமைந்த கதிர்காம புனித யாத்திரை, வரலாற்று சிறப்புமிக்க ஒரு உற்சவமாக இலங்கையின் கருதப்படுகின்றது. அத்துடன், இலங்கையின் புனித கங்கையான மாணிக்க கங்கையின் நீராடி பக்தர்கள் தமது வழிபாடுகளை ஆரம்பிப்பதும் மிக முக்கியமான அம்சமாகும். இந்த பூஜை வழிபாடுகளில் முடி இறக்கி, புனித கங்கையில் பக்தர்கள் தமது நேர்த்தி கடன்களை தீர்த்துக்கொள்வார்கள். இவ்வாறு இலங்கையின் மிக முக்கிய வழிபாட்டு முறையாக கதிர்காமம் உற்சவம் அமையப் பெற்றுள்ளது.
இந்த பூஜை வழிபாடுகளை காண்பதற்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்திருந்தமை விசேட அம்சமாகும்.

