மதுரை என்றாலே திருவிழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆன்மீகத்தையும், பாரம்பரியத்தையும், கிராமியப் பண்பாட்டையும் இன்றளவும் தனது அடையாளமாகக் கொண்டுள்ள மதுரை மாவட்டத்தில், தே.கல்லுப்பட்டி ஏழு ஊர் முத்தாலம்மன் திருவிழா தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. தேவன்குறிச்சி, தே.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, அம்மாபட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டி என ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்தத் திருவிழா, வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டும் இல்லாமல், ஊரின் மீதான மக்களின் அன்பையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் பண்பாட்டுத் திருவிழாவாகவும் திகழ்கிறது.
திருவிழாவின் வரலாறு!
ஆந்திர மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலிருந்து நவாப் படையெடுப்பின் போது, மூதாட்டி ஒருவர் தன்னுடைய 6 குழந்தைகளோடு தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள தே. கல்லுப்பட்டி என்ற கிராமத்திற்கு வந்தார்கள் என்றும், அவர்கள் வந்தவுடன் தலைவிரித்தாடிய பஞ்சம் போனது என்று வரலாறுகள் கூறுகிறது. தெய்வக்குழந்தையான இவர்களுக்கு தெற்கே மாப்பிள்ளைத் தேடி சென்று போது திருமணம் செய்துக் கொள்ள மாட்டோம் என இந்த மண்ணிலே தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், பின்னர் ஓர் ஆண்டிற்கு ஒருமுறை வந்து உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்போம் என்றும், வறட்சி, பஞ்சம் எதுவும் இல்லாமல் மக்களைக் காக்கும் என்பதால் தான் இத்திருவிழாவை சிறப்பாக கொண்டாடுகிறோம் என ஊர் திருவிழாவை ஒன்றிணைத்து நடத்தும் சம்பத் தெரிவிக்கிறார்
ஏழு ஊர்களில் அருள்பாலிக்கும் ஏழு அம்மன்கள்!
ஏழு ஊர்களைச் சார்ந்த அம்மனும், தெற்கே உள்ள அம்மாபட்டியில் ஓர் ஆண்டிற்கு ஒருமுறை உயிர்த்தெழுவார்கள். அம்மாபட்டியில் 7 அம்மன்களை உருவாக்கி, திருவிழா நேரத்தில் அந்தெந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது.. ஒவ்வொரு அம்மனுக்கும் தனித்துவமான பெயர் சூட்டி, அதற்கேற்ப வழிபாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும், தே.கல்லுப்பட்டியில் சரஸ்வதியாகவும், வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமியாகவும், அம்மாபட்டியில் பைரவியாகவும், காடனேரியில் திரிபுரசுந்தரியாகவும், கிளாங்குளத்தில் சபரியாகவும், சத்திரப்பட்டியில் சௌபாக்கியவதியாகவும் அம்மன் அருள்பாலிக்கிறார். இப்படி ஏழு ஊர்களிலும் வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படும் அம்மன்கள், ஒரே திருவிழாவில் ஒன்றிணைவது இப்பகுதி மக்களின் நீண்டகாலப் பாரம்பரியத்தையும் நம்பிக்கையாகவும் உள்ளது.

காலம் மாறினாலும் மாறாத சப்பரத் திருவிழா!
ஆரம்ப காலத்தில் தங்கள் ஊர் செழிக்க வேண்டும், விவசாயம் சிறக்க வேண்டும், மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன், தங்களால் இயன்ற பொருட்களைக் கொண்டு அம்மனுக்குச் சப்பரம் அமைத்து வழிபடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அன்று எளிமையாகத் தொடங்கிய இந்த வழிபாட்டு முறை, காலப்போக்கில் பிரம்மாண்டமான சப்பரத் திருவிழாவாகப் பரிமாணமாகியுள்ளது.. காலங்கள் மாறியுள்ளன; சப்பரங்களின் வடிவமைப்புகளும் மாறியுள்ளன. ஆனால், ஏழு ஊர் மக்களையும் ஒன்றிணைக்கும் அந்தப் பாரம்பரியமும் பக்தியும் மட்டும் இன்றளவும் மாறாமல் தொடர்கின்றன.
7 கி.மீ. தலைச்சுமைப் பயணம்… சோர்வடையாத இளைஞர்கள்!
இந்தத் திருவிழாவில் அனைவரையும் வியக்க வைக்கும் மற்றொரு அம்சம் இளைஞர்களின் பங்களிப்புதான். ஊர் கூடு தேர் இழுக்கும் ஊர்களுக்கு மத்தியில், தங்களது வரக்கூடிய அம்மனை அழைப்பதற்காக சப்பரத்தைத் தலைச்சுமையாகச் சுமந்துகொண்டு சுமார் 3 லிருந்து 7 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் இளைஞர்கள், வழிநெடுகிலும் உற்சாகத்துடன் பயணிக்கின்றனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நீண்ட தூரப் பயணத்தால் ஏற்படும் களைப்பைக்கூட அந்தந்த ஊர் பெண்கள் அளிக்கும் உற்சாகமும் வரவேற்பும் மறக்கச் செய்துவிடுகின்றன. பெண்களின் ஆரவாரம், பெரியவர்களின் ஆசிகள், இளைஞர்களின் உற்சாகம் என ஒவ்வொரு தருணமும் திருவிழாவை உயிரோட்டமாக்குகிறது.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்த ஊரின் ஒற்றுமை!
இன்றைய நவீன வாழ்க்கையில் மக்கள் பல்வேறு காரணங்களால் தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், ஊர் என்று வரும்போது அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற உணர்வை இந்தத் திருவிழா அழகாக எடுத்துக்காட்டுகிறது. பெரியவர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்த பாரம்பரியத்தை இன்றைய இளைஞர்களும் ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்கின்றனர். ஊரின் பெருமை, மண்ணின் மீதான பற்று, அம்மன் மீதான பக்தி என அனைத்தும் ஒன்றிணையும் இந்தத் திருவிழா, கிராமியப் பண்பாட்டின் உயிர்ப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஏழு ஊர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்களின் உணர்வும் கொண்டாட்டமும் ஒன்றுதான் என்பதை ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டுகிறது தே.கல்லுப்பட்டி ஏழு ஊர் முத்தாலம்மன் திருவிழா.