இலங்கையின் மலையக பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவி வருகின்ற நிலையில், மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் சிறு அளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
வானிலை தொடர்பான அறிவிப்பு

மத்திய, சபரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்பதுடன், மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடை மழைப் பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவிவரும் கடும் மழையுடனான வானிலையை தொடர்ந்து மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, இஹல கோரலே மற்றும் பஸ்பாகவே கோரலே ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பகுதிக்கும், நுவரெலியா மாவட்த்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கும் இவ்வாறு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம்
தொலுவ, உடபலாத்த, தெல்தோட்டை, மெததும்பர மற்றும் பன்வில ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெரணியாகல, புலத்சிங்ஹல, அரநாயக்க மற்றும் தெஹிஓவிட்ட ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கையும், கேகாலை பிரதேசத்திற்கு முதலாம் நிலை அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம்
கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கையும், ஹங்குராங்கெத்த பகுதிக்கு முதலாம் நிலை அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தின் ஓப்பநாயக்க, இரத்தினபுரி மற்றும் இம்புல்பே ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கையும், குருவிட்ட மற்றும் நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, இன்று (03) மதியம் 12 மணி முதல் நாளை (04) மதியம் 12 மணி வரையான 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
மண்சரிவு அபாயம் காணப்படுமாக இருந்தால் அல்லது அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுமாக இருந்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளப் பெருக்கு அபாயம்.
மத்திய மலைநாட்டில் அதிகளவிலான மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்ற நிலையில், தாழ் நிலப் பகுதிகளுக்கு அதிவுயர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 200 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நுவரெலியா மாவட்டத்தின் வட்டவல கிராம உத்தியோகத்தர் பிரிவில் 204 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தின் தொலஸ்பாகே பகுதியில் 172 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், நாவலபிட்டிய பகுதியில் 153.40 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாதை;துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் பேராதனை பகுதியை ஊடறுத்து செல்லும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனால், மகாவலி ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால், வெள்ளம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பல்கலைக்க உபவேந்தர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.
மகாவலி ஆற்றை அண்மித்துள்ள விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வது குறிதது அவதானத்துடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், களு பாலத்தின் புனர்நிர்மானப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை காண முடிந்தது.
இந்த புனர்நிர்மானப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தித்வா சூறாவளி ஏற்பட்ட காலப் பகுதியில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி முழுமையாக நீரில் மூழ்கியிருந்தது.
40 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன
நாட்டில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் டேவோன் நீர்;த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து ஏற்பட்ட வெள்ளத்தினால் கொட்டகல – கொமர்ஷல் மற்றும் லோக்கில் தோட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள 40 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த வீடுகளிலுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மழையுடனான வானிலை தொடரும் பட்சத்தில், கொழும்பு – ஹட்டன் மற்றும் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்படையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாடசாலைகள் பூட்டு
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு கீழுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலையக பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, ஹட்டன், நுவரெலியா, கொத்மலை, கம்பளை, தெல்தெனிய மற்றும் கண்டி ஆகிய கல்வி வலயங்களில் பாடசாலைகளை நடாத்துகின்றமை தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கான அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.