சக்ஸஸ் (SUCCESS) என்ற வசனத்தின் ஊடாக தனது திரை வாழ்க்கையை பராசக்தி திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 25 வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்க்கையை சக்ஸஸ்ஸுடன் இன்று (ஜுலை 21) போல் ஒரு நாளிலேயே நிறைவு செய்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த உலகை விட்டு பிரிந்து இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அவர் இந்த உலகை விட்டு விடைப் பெற்று, 25 வருடங்கள் பூர்த்தியானாலும், அவரது நினைவுகள் இன்றும் உலகில் வாழும் அனைத்து தமிழர்களின் மனங்களிலும் இருந்துக்கொண்டே இருக்கின்றது.
இந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்திய சிவாஜி கணேசன், உலகத் தமிழர்களின் மனங்களை வென்ற ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.
அவ்வாறு உலகத் தமிழர்களின் மனங்களை வெற்றிக் கொண்ட சிவாஜி கணேசன், இலங்கை தமிழர்களின் மனங்களை எவ்வாறு வெற்றிக் கொண்டார்…?
இலங்கையுடனான தொடர்பு எப்போது ஆரம்பமானது?
இந்தியாவில் மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசன், பராசக்தி திரைப்படத்தின் ஊடாக 1952ம் ஆண்டு தனது திரை வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 288 திரைப்படங்களில் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படத்துறையில் 250ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமை சிவாஜி கணேசனுக்கு உரித்தானதாகும்.
இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்த சிவாஜி கணேசனுக்கும், இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
1952ம் ஆண்டு திரை வாழ்க்கையை ஆரம்பித்த சிவாஜி கணேசன், 1953ம் ஆண்டே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
சிவாஜி கணேசன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டமைக்கான சான்றாக, யாழ்ப்பாணத்தில் இன்றும் அவர் நட்ட மரம் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.
யாழ்ப்பாணம் நகர சபை மண்டபத்தில் 1953ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி நடைபெற்ற ‘என் தங்கை’ என்ற நாடகத்தை நடிப்பதற்காக சிவாஜி கணேசன் இலங்கை வந்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் – மூளாய் கூட்டுறவு மருத்துவமனையின் வளர்ச்சி பணிகளுக்கான நாடகத்தை நடத்தி, நிதியை திரட்டிக் கொடுக்கும் நோக்கிலேயே அவரது முதலாவது இலங்கை விஜயம் அமைந்திருந்தது.
இந்த விஜயத்தின் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மரக் கன்றொன்றை நட்டார்.
அந்த மரம் இன்று பாரிய விருட்சமாக சிவாஜி கணேசனின் பெயரை சொல்லும் வகையில் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து நின்கின்றது.
யாழ்ப்பாணத்திற்கு சில வருடங்களுக்கு முன்னர் வருகைத் தந்த சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், தனது தந்தையினால் நடப்பட்ட மரத்திற்கு அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டமை, அந்த காலப் பகுதியில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இலங்கையில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலங்கையில் படமாக்கப்பட்ட சில தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் உருவான பைலட் பிரேம்நாத், மோகனப் புன்னகை போன்ற திரைப்படங்கள் இலங்கையில் படமாக்கப்பட்டிருந்தன.
பைலட் பிரேம்நாத் திரைப்படம் 1978ம் ஆண்டு வெளிவந்ததுடன், மோகனப் புன்னகை திரைப்படம் 1981ம் ஆண்டு வெளிவந்தது.
பைலட் பிரேம்நாத் திரைப்படம் 1000 நாட்களை கடந்து ஓடியதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது இலங்கையில் அதிகநாள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இன்று வரை அந்த சாதனையை வேறு எந்தவொரு திரைப்படமும் முறியடிக்கவில்லை.
இவ்வாறான நிலையில், சிவாஜி கணேசனுக்கு இலங்கையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிவாஜி கணேசனுக்கு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், 50 பவுன் எடையை கொண்ட தங்கக் கிரீடம் சூட்டப்பட்டு நடிப்புச் சக்ரவர்த்தி பட்டம் சூட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இதே நிகழ்வில் பால்கே சிவாஜி எனும் வாசனம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது,
இலங்கையின் ரேடியோ சிலோன் வானொலியின் ஊடாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கலைக்குருசில் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருதுகள் மட்டுமின்றி, சிவாஜி கணேசனுக்கு இலங்கை சார்பில் பல்வேறு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
சிவாஜி கணேசன் இலங்கைக்கு வருகைத் தந்திருந்த தருணத்தில் அரசத் தலைவர்களும் சிவாஜி கணேசனை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்ட வரலாறுகள் கூட இருக்கின்றமை விசேட அம்சமாகும்.

சிவாஜி கணேசனை பார்த்த அனுபவத்தை பகிர்ந்த இலங்கையர்
பைலட் பிரேம்நாத் திரைப்படம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் ஒரு அங்கமாக இலங்கையின் பிரபல சுற்றுலாத்தளமாக விளங்கும் மாத்தளை மாவட்டத்தில் உன்னஸ்கிரிய பகுதியிலும் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டதாக அந்த பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சிவசாமி தெரிவிக்கின்றார்.
1977ம் ஆண்டு காலப் பகுதியில் தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்ப்பதற்கான தாம் அங்கு சென்றிருந்ததாக தனது அனுபவத்தை எம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.
”உன்னஸ்கிரிய நீர்வீழ்ச்சியை அண்மித்துள்ள ஹோட்டலுக்கு வருகைத் தந்தார். அங்கு படப்பிடிப்புக்கான வருகைத் தந்தார். மக்கள் ஓடி சென்று மாலை அணிவிக்க முயற்சி செய்தார்கள். உடனே அதை அவர் மறுத்தார். வேண்டாம் என்று சொல்லி விட்டார். படிப்பிடிப்புக்கள் நடந்தது. அதை நாங்கள் சின்ன வயதில் பார்த்தோம். விமானம் கீழே நிறுத்தி வைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நான் முதல் முதலில் பார்த்த நடிகர் அவர் தான். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.” என அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.