நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான குடும்பங்கள் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றன. தற்போது நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், அவற்றின் மூலம் சுமார் 80.6 கோடி பேர் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுடன், ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அவ்வப்போது சரிபார்ப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை தற்காலிகமாக முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குநாடு முழுவதும் சுமார் 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் சலுகைகள் நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை?
ரேஷன் கார்டு தரவுகளில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் குளறுபடிகளை நீக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக குடும்பத்தில் ஒருவர் இறந்திருந்தாலும் அவரது பெயர் ரேஷன் கார்டில் தொடர்ந்து இருப்பது, குடும்பத்தினர் வேறு மாநிலம் அல்லது மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த பிறகும் பழைய முகவரியில் பதிவு தொடர்வது, நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பெறப்படாமல் இருப்பது, குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருப்பது போன்ற காரணங்களால் ரேஷன் கார்டு தரவுகளைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பதிவுகளை சரிசெய்து, உண்மையில் தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் ரேஷன் கார்டு முடக்கப்படுவதால் பயனாளிகளின் பெயர்கள் உடனடியாக நிரந்தரமாக நீக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக, ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான சலுகை மட்டுமே தற்காலிகமாக முடக்கப்படும். இதனால் பயனாளிகள் தங்களது தகுதியை உறுதி செய்து, தேவையான KYC நடைமுறைகளை முடித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
3 மாத கால அவகாசம்:
ரேஷன் கார்டு முடக்கப்பட்ட பயனாளிகளுக்கு தங்களது கார்டை மீண்டும் செயல்படுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட உள்ளது. இந்த காலத்திற்குள் பயனாளிகள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து KYC நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேவையான ஆவணங்களை வழங்கி KYC செயல்முறையை முடித்த பின்னர், தகுதி உறுதி செய்யப்பட்டால் முடக்கப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கார்டு வைத்துள்ள ஒவ்வொரு நபர்களும், குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சரியாக உள்ளதா? என்பதை பயனாளிகள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.