தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த மூன்று வாரங்களாக இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார். ஏற்கெனவே, திருச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடிந்திருந்த விஜய், கடந்த சனிக்கிழமையில் நாமக்கல் மற்றும் கரூரில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். நாமக்கலில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு மேல் கரூருக்கு வந்தார்.. கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விஜய் பேசி முடித்து அங்கிருந்து கிளம்பிய நிலையில் சுமார் 100 பேர் வரை கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கமடைந்தனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டது. தற்போது, 41 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டத்தில் இப்படி உயிரிழப்பு ஏற்பட்டது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்தநிலையில், கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விஜய்யிடம் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
இருவருக்கும் இடையே சுமார் 15 நிமிடங்கள் நடந்த கலந்துரையாடலில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்று ராகுல்காந்தி கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்க்கு ஆறுதல் கூறி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த ராகுல்காந்தி அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.