நாகர்கோயிலில் பிறந்து சென்னையில் வசிக்கும் ராபர்ட் கென்னடி, உலகின் மிக பழமையான கடிகாரங்களைப் பொக்கிஷமாக சேமித்து கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பழங்கால கடிகாரங்கள் மீதான காதலால் 42 ஆண்டுகளாக இடைவிடாத உழைப்பில் அவர் சேமித்து வைத்திருக்கும் அரிய கடிகாரங்கள் அவருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளன.
சுமார் 295 ஆண்டுகள் பழமையான கடிகாரத்தை, 1992ல் 1,100 ரூபாய்க்கு அவர் வாங்கியுள்ளார். மேற்கத்திய நாட்டில் கையால் தயாரிக்கப்பட்ட அந்த கடிகாரம் அவரது கடிகார அலமாறியை அலங்கரித்துள்ளது. கென்னடியின் சேகரிப்பில் உள்ள பல கடிகாரங்கள் காலனித்துவ வர்த்தகத்தாலும், உலகப் போர்களின்போதும் இந்தியாவிற்கு வந்தவை. அந்த கடிகாரங்களின் வரலாற்றை அவர் துல்லியமாகப் பதிவு செய்து பராமரித்து வருகிறார்.
தனது வாழ்நாள் சேகரிப்பான கடிகாரங்களின் தொகுப்பை அருங்காட்சியகமாக மாற்றுவது தான் அவரது விருப்பம். இதன் மூலம் நேரத்தின் வரலாற்றையும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் இளைய தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்பது அவரிடன் நோக்கம்.இதற்கு அச்சாரம்விடும் வகையில் சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ராபர்ட் கென்னடியை தானாக தேடி வந்து சந்தித்தார். அச்சந்திப்பை பற்றி அவரிடம் கேட்ட பொழுது ‘மோகன்லாலும் சில பழைய கடிகாரகங்களை சேகரித்து வைத்துள்ளார். என்னைப் பற்றி அவர் தெரிந்து கொண்டு, என்னுடைய கடிகார சேகரிப்புகளைக் காண வந்தார். இருவரும் சேர்ந்து கடிகார கண்காட்சி வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அது இன்னும் இறுதி செய்யப்பட வில்லை’ என்று கூறினார்.
தனது அரிய கடிகார சேகரிப்புகள் மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லாலை அழைத்து வந்ததை கென்னடி நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கூறினார்.
‘மோகன்லால் மிகவும் அமைதியான மனிதர் என்று நான் கேள்வி பட்டுளேன், அனால் என்னுடன் ஒரு சக நண்பரை போல் மிக எளிமையாகப் பழகினார்’ என்றும் கென்னடி தெரிவித்தார்.
மோகன்லால் மற்றும் ராபர்ட் கென்னடியின் இணைப்பு கலை, வரலாறு மற்றும் கைவினையின் சங்கமமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரத்தின் மதிப்பையும் கைவினையின் பெருமையையும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இம்முயற்சி, இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

