இலங்கையில் சுமார் 3000திற்கும் அதிகமான தமிழர்கள் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறி 43 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணைகளை நடாத்துமாறு கோரி இலங்கை நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதனினால் இந்த தனிநபர் பிரேரணை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

43 வருடங்களுக்கு முன்னர் நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது, தமிழீழ விடுதலைப் புலிகள், நடாத்திய தாக்குதலில் 13 ராணுவ சிப்பாய்கள் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்த தாக்குதல் சம்பவமானது, 1983ம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் நடாத்தப்பட்டிருந்தது.
உள்நாட்டு போர் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.
கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் முதலில் உயிரிழந்திருந்ததுடன், பின்னர் காயமடைந்த இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடாத்த ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு – பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகைத் தந்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வருகைத் தந்துள்ளதாக பொய்யான கருத்துக்கள் வெளியாகி நிலையில், சிறியளவில் ஏற்பட்ட வன்முறைகள், பின்னர் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும், பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன், கொழும்பு – வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.
இலங்கையில் தமது சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதல் முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர்.
இந்த வன்முறைகள் காரணமாக சுமார் 3000திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்ட போதிலும், அது தொடர்பிலான சரியாக தரவுகள் இன்று வரை பதிவுகள் இல்லை என கூறப்படுகின்றது.
அத்துடன், இந்த வன்முறை காரணமாக சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் தமது சொத்துக்கள், சொந்தங்களை இழந்தவர்களாக காணப்பட்டனர்.
அத்துடன், 10000திற்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.
இந்த வன்முறைகள் காரணமாக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் சேதம் ஏற்பட்டதாக அப்போது மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வன்முறையானது ஒரு இனப்படுகொலை என சர்வதேச தன்னார்வ அமைப்புகள் கூறிய போதிலும், இலங்கை அரசாங்கம் இன்று வரை அது இனப்படுகொலை என அறிவிக்கவில்லை.

43 வருடங்களின் பின்னர் விசாரணையை கோரும் தமிழ் தரப்பு
இந்த வன்முறைகள் நடந்தேறி 43 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணைகளை நடாத்துமாறு தனிநபர் பிரேரணையொன்றின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணை தொடர்பில் த ஹார்ட்லயின் செய்திப் பிரிவிற்கு, செல்வம் அடைகலநாதன் கருத்து வெளியிட்டார்.
கேள்வி :- 43 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இந்த தனிநபர் பிரேரணை கொண்டு வந்தமைக்கான காரணம் என்ன?
பதில் :- ”83ம் ஆண்டு எமது இனத்தின் மீது வன்முறை தொடுக்கப்பட்டது. குறிப்பாக வெலிகடை சிறைச்சாலையில் மரணித்த தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்டவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அதனடிப்படையிலும், கூடுதலான தமிழர்கள் கொல்லப்பட்டும் இருந்தார்கள். இதற்கான விசாரணை நடத்தப்படவில்லை. இந்த வன்முறையில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கடந்துள்ளபோதிலும், இந்த சம்பவம் இன்று வரை மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான ஒரு விசாரணை குழுவை நியமிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாக குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட சிறைச்சாலையில் மரணித்தவர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன?, காடையர்கள் வெளியிலிருந்து உள்ளே அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை அறிய வேண்டும். எங்களுடைய மக்களை கூடுதலாக கொன்று குவித்த ஆண்டே 83ம் ஆண்டு. அதை விசாரணை செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருக்கின்றது”
கேள்வி :- 83ம் ஆண்டுக்கு பின்னர் பல அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சி அமைத்திருந்தன. அந்தந்த காலப் பகுதிகளில் விடுக்கப்படாத கோரிக்கை, ஏன் தற்போது விடுக்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?
பதில் :- ”என்னை பொருத்த வரை, இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்கின்றது. ஈஸ்டர் தாக்குதல், கொலைகள் தொடர்பில் துரிதமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னர் இருந்த அரசாங்கங்களிடமிருந்து நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. காரணம், இந்த விடயத்தில் அவர்களின் தொடர்புகளும் இருந்திருக்கும் என்ற சந்தேகம் இருந்தது. இந்த அரசாங்கத்தின் கீழ் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் இதனை கொண்டு வந்திருக்கின்றேன். இதற்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுமா என்று பார்ப்போம்.”

கேள்வி :- இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்காக விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டால், அது எவ்வாறான ஆணைக்குழுவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
பதில் :- ”நியாயம் கிடைக்க வேண்டும். மூடி மறைக்கின்ற செயற்பாடுகள் இருக்கக்கூடாது. யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். எனனை பொருத்த வரையில் அறிக்கையை தயாரிக்கும் ஆணைக்குழுவாக மாத்திரம் இருந்து விடக்கூடாது. சரியான முறையில் செயற்பட்டு, உண்மையை வெளிகொணர்கின்ற ஆணைக்குழுவாக இது அமைய வேண்டும்.”
கேள்வி :- 43 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உயிருடன் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில் :- ”நீதிமன்றம் தான் அதனை முடிவு செய்ய வேண்டும். ஆனாலும், இவர்கள் தான் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்று வெளியில் வந்தாலே அது போதுமாக இருக்கும். இந்த ஆணைக்குழுவின் ஊடாக நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்ற பெயர்கள் வெளிவந்தால், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இவர்கள் தான் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஒரு ஆறுதலாக இருக்கும்.”
கேள்வி :- பிரேரணையில் என்னென்ன விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
பதில் :- ”83ம் ஆண்டு வன்முறையில் நடந்த இன அழிப்பு சம்பந்தமாகவும், வெலிகடை சிறைச்சாலையில் நடந்த படுகொலை சம்பந்தமாகவும் ஆணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றே ஒத்தி வைப்பு பிரேரணையொன்றை கொண்டு வந்தேன்.”