2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. இந்தப் போரின் காரணமாக காஸா பகுதியில் வசிக்கும் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டது. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துவந்தன. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தத்தை செய்யவேண்டும் என்று தொடர்ந்துவலியுறுத்திவந்தார். இந்தநிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். அதன்படி, முதற்கட்டமாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
எகிப்தின் ஷர்ம் அல் – ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முக்கிய கூட்டம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெறவுள்ளது. போரின் முக்கிய மத்தியஸ்தர்களான எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் – சிசி உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது இஸ்ரேலுக்குச் சென்றுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு அவர் முதன்முறையாக இஸ்ரேலுக்குச் சென்று இருக்கிறார். காசா போர் முடிந்துவிட்டதாக அப்போது அவர் தெரிவித்தார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு, எகிப்தில் நடைபெறும் உயர்மட்ட அமைதி உச்சிமாநாட்டுக்கு அவர் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குத்தேரஸ், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ‘இஸ்ரேல் காசா இடையேயான போர் முடிவுக்கு வந்துவிட்டது. இதுநான் முடித்து வைக்கும் 8-வது போராகும்.
காசா விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பும் என்று நினைக்கிறேன். காசா மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட விரைவில் ஒரு அமைதி வாரியம் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.