ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்ற இனிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளைச் சேர்ந்த 31 நடிகர்கள் பங்கேற்பு.
பள்ளி, கல்லூரி நண்பர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது வருடத்திற்கு ஒருமுறை சந்திப்பது போல் 1980கள் மற்றும் 90களில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து நட்பை வலுவாக்கி, நினைவுகளை உயிர்ப்பித்து வருகின்றனர். கனமழை காரணமாகக் கடந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 80களின் நட்சத்திர ரீயூனியன் நடைபெற்றது.
சென்னையில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் அக்டோபர் 4 மாலை நடைபெற்ற இந்நிகழ்வை லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஒருங்கிணைத்தனர்.
இந்த இனிய நிகழ்வில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நதியா, பாக்யராஜ், ஜெயராமன் எனத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளைச் சேர்ந்த 31 நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர். அன்பு, நட்பு, மற்றும் ஒற்றுமை நிறைந்த இந்தச் சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

