கோவை அடுத்த பொள்ளாச்சி அருகே ‘இயற்கையை நேசி’ தன்னார்வ அமைப்பு, கடும் வெயிலில் இருந்து பறவைகளைக் காக்க வெறும் 30 ரூபாய் செலவில், இரண்டு லிட்டர் கொள்ளவுள்ள தண்ணீர் தொட்டிகள் தயாரித்து அசத்தியுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் கடும் வெயில் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியில் சென்றாலே தலைசுற்றும் அளவிற்கு அதீத வெயில் நம்மைச் சுட்டெரிக்கிறது.
கொடூர வெயிலால் தாகம் எடுத்தால் நாம் என்ன செய்வோம்? சிம்பிளாக வீட்டிலிருக்கும் நீரை எடுத்துக் குடிப்போம். ஆனால், கிணறு, ஆறு, குட்டை போன்ற நீராதாரங்கள் இல்லாத நகரப்பகுதிகளில் உலாவும் பறவைகள் குடிநீருக்கு என்ன செய்யும்? வெளியில் கிடக்கும் உணவுகளைக்கூட சாப்பிட்டு உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும். ஆனால், குடிநீருக்கு என்ன செய்யும்?
இப்படியான கேள்விகள் எழுந்தால் பலரும் என்ன செய்வார்கள், ‘பாவம் பறவைகள் குடிநீருக்கு என்ன செய்யும்’ என மனம் வருந்தம் அடைவதோடு நின்றுவிடுவார்கள்.
ஆனால், இதே கேள்விகள், தமிழ்நாட்டின் கோவை அடுத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த ‘இயற்கையை நேசி’ பொதுநல அறக்கட்டளைக்கும் எழுந்தது. ஆனால், நம்மைப்போல பறவைகள் குறித்து வெறும் மனவேதனையை பகிராமல், சிறிய அளவிலான தண்ணீர் தொட்டி தயாரித்து தீர்வு கண்டறிந்துள்ளனர் இந்த அமைப்பினர்.
பறவைகளுக்காக குட்டி தண்ணீர் தொட்டி!
இது குறித்து, நம்மிடம் பேசிய பொள்ளாச்சி ‘இயற்கையை நேசி’ பொதுநல அறக்கட்டளையின் நிறுவனர் வெற்றிவேல், ’’பறவைகள் புழு, பூச்சிகளை உட்கொண்டு எப்படியும் உணவுத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும். கிராமப்புறங்களில் விவசாய நிலங்கள், குளம், குட்டை, ஆறு மற்றும் சிறு நீராதாரங்கள் இருக்கும் என்பதால், பறவைகள் கிராமப்புறங்களில் எளிதாக குடிநீர் கிடைத்து விடும். ஆனால், அடுக்கடுக்கான வீடுகள் கொண்ட நகரங்களில் நீராதாரங்கள் மிகக்குறைவு, வெறும் கட்டடங்களும் வீடுகளும் இருப்பதால் பறவைகளுக்கு குடிநீர் கிடைப்பதே மிக அரிதாக மாறிவிட்டது.

இதனைக்கருத்தில் கொண்டு நான் கடந்த 5 ஆண்டுகளாக பறவைகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் வழங்கி வருகிறேன். ஆரம்பத்தில் வீணாகும் எண்ணெய் டின்களில் நான்கு பகுதியை cut செய்து, அதில் உணவும், நீரும் வைத்து வந்தேன். ஒரு கட்டத்தில் தெரிந்தது அந்த டின் துருப்பிடித்து போவதுடன், பறவைகளுக்கு உணவு கொடுத்து அதன் இயற்கை குணத்தை மாற்றக்கூடாது என உணர்ந்தேன். அதன்பின்பு நானே கண்டறிந்த சிறிய ஐடியா தான் இந்த குட்டி குடிநீர் தொட்டி திட்டம்,’’ என்கிறார் அவர்.
30 ரூபாயில் தொட்டிகள் தயாரிப்பு…
குறைந்த செலவில் எப்படி குடிநீர் தொட்டி தயாரித்தார் என்பதை விளக்கிய அவர், ‘‘அதிக செலவுகள் செய்யாமல், சிம்பிளாக 10 இன்ச் வட்ட வடிவிலான பிவிசி பைப், 8 இன்ச் பைப் இரண்டை வாங்கி அதனை அச்சாக பயன்படுத்தி அதனுள் சிமெண்ட், மணல் போட்டு வட்ட வடிவிலான கான்கிரீட் வளையம் செய்து, அதன் ஒரு பகுதியை கான்கிரீட் கொண்டு மூடி குட்டி தண்ணீர் தொட்டி தயாரிக்கிறேன். இந்த தண்ணீர் தொட்டிகளில் 2–2.25 லிட்டர் நீர் சேமிக்க முடியும். இவை பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களில் மாடி மற்றும் தரைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. எங்கள் முயற்சி என்னவோ சிறியதாகத் தெரியலாம், ஆனால் இதன் ரிசல்ட் பெரிய அளவில் இருக்கிறது.
வெயிலில் அலைந்து திரிந்து தாகமெடுத்து இறக்கும் நிலையில் நகரப்பகுதியில் சுற்றித்திரியும் பல பறவைகள் இந்தத்தண்ணீர் தொட்டிகள் தேடி வந்து தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன. நாங்கள் பறவைகளின் நடமாட்டத்தை பதிவு செய்துள்ளோம். அப்போது தான் கண்டறிந்தோம் குறிப்பிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பறவைகள் அடிக்கடி இந்த தண்ணீர் தொட்டிகளுக்கு வந்து தாகம் தீர்க்கின்றன.

மூன்று ஆண்டுகளாக இந்த தண்ணீர் தொட்டிகளை நாங்களே தயாரித்து பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகம், அரசு அலுவலகங்கள், வனத்துறைக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரையில் மொத்தமாக 6,450 தண்ணீர் தொட்டிகள் கொடுத்துள்ளேன். எங்கள் முயற்சியைப் பார்த்து மக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் தண்ணீர் தொட்டி, குண்டாக்களில் தண்ணீர் நிரப்பி பறவைகளின் தாகம் தீர்த்து வருகிறார்கள்,’’ என்றார்.
மேலும் தொடர்ந்த வெற்றிவேல், ‘‘தற்போது, 23,000 செலவில் 950 தண்ணீர் தொட்டிகள் உருவாக்கியுள்ளோம். ஒரு தண்ணீர் தொட்டியை வெறும் 24 ரூபாய் செலவில் தயாரித்து பறவைகளை பாதுகாத்து வருகிறோம்.
நான் தண்ணீர் தொட்டி தயாரிக்கும் பணியை குழுவினருடன் செய்வதால், இதற்கான தயாரிப்புச் செலவு மிகக்குறைவு தான். ஒரு லோடு பி.சாண்டு மணலை 8,000 ரூபாய் கொடுத்து வாங்கி, 20 மூட்டை சிமெண்ட் 8,500 ரூபாய்க்கும், பெயிண்ட் மற்றும் ஆயில் 1,500 ரூபாய் என மொத்தமாக, 18,000 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, 600–700 தண்ணீர் தொட்டிகளை உருவாக்கியுள்ளோம். நாள் ஒன்றுக்கு சராசரியாக 25–30 தொட்டிகள் என ஒரு மாதம் மூன்று பேர் உழைத்து இதைச்செய்துள்ளோம்.
18000 ஆயிரம் ரூபாயில் 600 தொட்டிகள் என்றால் ஒரு தொட்டியை 30 ரூபாயில் தயாரித்துள்ளோம். ஆனால், இதுவே ஆட்களை வேலைக்கு வைத்து தயாரித்தால் மூன்று பேரின் தினக்கூலி 1,200 ரூபாய் எனக்கணக்கிட்டால் ஒரு தொட்டி தயாரிக்க சராசரியாக 90 – 100 ரூபாயாகும்,’’ என்கிறார். து
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஜனவரி முதல் ஜூலை வரையில் கடும் வெயில் நிலவுவதால், டிசம்பர் மாதம் முழுவதிலும் நாங்கள் ‘‘இந்தத்தொட்டிகளை தயாரித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு அனுப்புகிறோம். பறவைகள் மீதான பேரன்பின் நாங்கள் செய்யும் இந்தச்செயல்களைப் பார்த்து பலரும் எங்களைப்போல பறவைகளுக்கு நீர் வைத்து வருகிறார்கள். நான் பள்ளிகளுக்கு வழங்கியதால், மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் தங்கள் வீடுகளில் வைத்து வருகிறார்கள்.
இந்தத்தண்ணீர் தொட்டிகளில் பறவைகள் வெறும் நீரை மட்டுமே குடிப்பதில்லை, வட்ட வடிவில் அளவான ஆழத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதால், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள தண்ணீர் தொட்டியில் குளித்து உடலை நனைத்துக்கொள்கின்றன,’’ என்கிறார் வெற்றிவேல்.
வீட்டில் மூன்று தொட்டி வைத்துள்ளேன்!
தனது வீட்டில் இந்தத்தண்ணீர் தொட்டியை வைத்துக்கொண்டே நம்மிடம் பேசிய 6ம் வகுப்பு மாணவன் ஹரிகோகுல், ‘‘இந்த அறக்கட்டளையினர் நான் படிக்கும் ஏரிப்பட்டி அரசுப்பள்ளியில் பறவைகளை கோடை காலத்தில் எப்படி பாதுகாக்க வேண்டும், பறவைகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் தொட்டி வைக்கலாம் எனக்கூறி தண்ணீர் தொட்டி கொடுத்தனர். நான் 3 தொட்டிகளை வாங்கி வந்து என் வீடு, பாட்டி வீட்டில் வைத்து பறவைகளை காக்க என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். தண்ணீர் வைப்பது மட்டுமின்றி அரிசி மற்றும் உணவும் அவ்வப்போது வைக்கிறேன்,’’ என்கிறார்.
நம்மிடம் பேசிய பொள்ளாச்சி ஏரிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் மகிழன், ‘‘‘இயற்கையை நேசி’ பொதுநல அறக்கட்டளையின் நிறுவனர் வெற்றிவேல் அண்ணா தலைமையிலான குழுவினர் எங்கள் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான தண்ணீர் தொட்டிகளை கொடுத்துள்ளனர்.

இதனை நாங்கள் பள்ளி வளாகம் முழுவதிலும் வைத்து அதில் நீர் நிரப்புவோம், மதிய உணவு இடைவேளையில் மீதமாகும் உணவுகளை தண்ணீர் தொட்டிகள் அருகே வைப்போம். இதற்காகவே பல பறவைகள் அங்கு வருகின்றன. அவை அங்கு வந்து விளையாடுவதையும் கண்டு ரசிப்போம்,’’ என்கிறார் அவர்.
‘இயற்கையை நேசி’ அறக்கட்டளையின் முயற்சி என்னவோ சிறியதாகத் தெரிந்தாலும், நடைமுறையில் அவர்களின் முயற்சி எண்ணற்ற பறவைகளை கடும் வெயிலில் இருந்து பாதுகாத்து வருகிறது.