கரூர் நிகழ்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நிர்வாகிகளை கடுமையாக சாடினர்.
விசாரணையில் பேசிய நீதிபதிகள், ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டுமா? நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. விஜயின் பரப்புரை வாகனம் மீது ஏன் ஹிட் அண்ட் ரன் வழக்குப்பதிவு செய்யவில்லை?. கரூர் துயரம், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு. விபத்து தொடர்பான வீடியோக்களை பார்த்து வேதனையடைந்தேன். சம்பவ இடத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் இறந்து கிடந்தபோதும், தவெக நிர்வாகிகள் தப்பியோடிவிட்டனர்.
என்ன மாதிரியான கட்சி இது. சம்பவம் நடந்தவுடன் பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் தொண்டர்களையும் தங்களை பின்தொடர்பவர்களையும் கைவிட்டு சென்றுவிட்டனர். அக்கட்சித் தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை. ஒரு அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது; சம்பவத்திற்காக வருத்தம் கூட தெரிவிக்காததே கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது” என கடுமையாக சாடினர். விஜய் பயணம் செய்த வாகனம் விபத்தை ஏற்படுத்தியதற்கு விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? புகார் இல்லையென்றாலும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அந்த பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கலவரைத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது தொடரப்பட்ட வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா. ஏன் இவர் மீது காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப்பதிவின் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்து வழக்குப்பதிவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டமாக தெரிவித்தார்.