நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகாரின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளில் முதல்கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத் தேர்தல் நாடு முழுவதும் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, எல்ஜேபி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இன்னொரு புறம் எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ(எம்-எல்), சிபிஐ, சிபிஎம், விகாசீல் இன்சான் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுரான், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாகண்பந்தன் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பம் நிலவுகிறது. மேலும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டிலும் குழப்பம் நீடித்துவந்தது.
இந்தநிலையில், காங்கிரஸ், ஆர்.ஜே.டியே இடையே தொகுதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. விகாஷீல் இன்சான்(விஐபி) 16, இடது சாரிகளுக்கு 29 முதல் 31 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிஹாரில் கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில், ஆர்ஜேடி 144 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், இந்த முறை அந்தக் கட்சி குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த முறை காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு மிகக்குறைந்ததாக 19 எம்எல்ஏ-க்களை பெற்றது. எனவே, இந்தமுறை வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளில் குறிவைத்து காங்கிரஸ் செயல்படும் என்று தெரிகிறது.