நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகாரின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளில் முதல்கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக கொண்ட ஐக்கிய ஜனதா தளம்- பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும் மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் இணைந்த மகாகன்பந்தன் எனப்படும் இந்தியா கூட்டணியும் தேர்தலை எதிர்கொள்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியு, பாஜக தவிர லோக் ஜன்சக்தி முக்கிய கட்சியாக உள்ளது. இந்தியா கூட்டணியில் சிபிஐ(எம்எல்) முக்கிய கூட்டணி கட்சியாக உள்ளது. 2005-ம் ஆண்டிலிருந்து நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சராக இருந்துவருகிறார். மூத்த தலைவருக்குப் போட்டியாக இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவ்வை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் சிறு தயக்கம் இருந்து வருகிறது. அதனால், இதுவரையில் இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள், தேஜஷ்வியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்துவருகின்றனர். இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியாக உள்ளது ராஷ்டிரிய ஜனதா தளம்தான். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேஜஷ்விதான் முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரின் பேச்சு கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் வேட்பாளர் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், ‘தேஜஷ்வி யாதவ்வை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திவருகின்றனர். ஆனால், இந்தியா கூட்டணி சார்பில் அவர் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவெடுக்கிறது என்பதை பார்க்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஷ்வி யாதவ், ‘முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தலால் தேர்தலை எதிர்கொள்ள மாட்டோம்’ என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காங்கிரஸ் தலைவரின் இந்தக் கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜன்சக்தி கட்சிக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுபறி நீடித்துவருகிறது.