இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ இன்று 2.18 கோடி பாலோவர்ஸ்களை பெற்றுள்ளது. நேபாளத்தில் ஆட்சியைக் கவிழ்த்தில் இருந்து தமிழ்நாட்டில் தவெகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது என பல நாடுகளை அலறவிட்டு அரசியல் கணக்குகளை மாற்றி வருகிறார்கள் Gen Z தலைமுறையினர்.
வரலாறு நெடுகிலும் ஒரு தலைவன் அல்லது சில தலைவர்கள் அவர்களால் சமூகத்திற்காக பின்பற்றப்படும் அல்லது உருவாக்கப்பட்ட கொள்கை, சித்தாந்தம் இவற்றை பின்பற்றும் தொண்டர் படை; இவை தான் வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
பல ஆண்டுகளாக ஆட்சிபுரியும் பழைய கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு, புதிய அரசியல் கட்சி உருவாகி ஆட்சியைப் பிடிப்பது, அல்லது ஒரு நாட்டிலுள்ள ஆட்சியையே அடித்து நொருக்கி வெளியேற்றுவது போன்ற சாதனைகளையும் வரலாறுகளையும், இதுவரையில் படைத்தது தலைவர்களும் அவர்களின் கொள்கைகளும், பல ஆண்டு உழைப்பும் தான்.
ஆனால், இத்தகைய பழைய அரசியலை முற்றிலுமாக மாற்றி, Digital Eraவில் வெறும் சில நாட்கள் அல்லது மாதங்களிலேயே பெரும் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வருவது, சமூக வலைதளங்களால் ஒன்றிணையும் Gen Z தலைமுறை.
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை சூர்யகாந்த் இளைஞர்களை கரப்பான்பூச்சியுடன் ஒப்பீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள Gen Z தலைமுறை ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற அமைப்பை துவங்கி 2 கோடிக்கும் அதிகமான பாலோவர்ஸ்களை பெற்றது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இத்தகைய சூழலில் நாம் Gen Z தலைமுறையின் புரட்சிகளைப் பார்க்க வேண்டியுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் Gen Z புரட்சி…
அப்படி என்னதான் Gen Z தலைமுறையினர் சாதித்துள்ளனர் என்பதற்கும், அவர்கள் எப்படி பல்லாண்டு காலமாக இருந்த அரசியல் கணக்குகளை மாற்றியமைத்துள்ளனர் என்பதற்கு பல சமீபத்திய உதாரணங்களை நாம் காண முடியும்.
எடுத்துக்காட்டாக நேபாளத்தில் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை எதிர்த்து, அரசை கண்டித்து, Gen Z நடத்திய பெரும் போராட்டத்தால் ஒரு நாடே தீக்கிரையாகி, போராட்டங்களைச் சந்தித்து புதிய அரசையே அமைத்துள்ளனர்.
செப்டம்பர் 4, 2025 அன்று, அரசு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதித்தது. சமூக வலைதளங்களில் மட்டுமே பெரும்பான்மையான நேரத்தை செலவிட்டு வாழும் Gen Zக்களின் கோபத்தை தூண்டிய நேபாள அரசு அதற்கடுத்த தொடர் போராட்டங்களை எதிர்கொண்டு, அந்நாட்டு பிரதமரின் அலுவலகம் தீக்கிரையாகின.

அந்நாட்டின் ஆட்சிக்கு எதிராக களமிறங்கிய Gen Zக்களின் வெறும் 5 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக, போராட்டத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் செப்டம்பர் 9-ஆம் தேதி பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு தேர்தல் நடத்தப்பட்டு இளைஞர்களின் ஆதரவு பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி (ஆர்.எஸ்.பி) வெற்றி பெற்று, காத்மாண்டு மேயரும் முன்னாள் ‘ராப்’ பாடகரான 35 வயதான பாலேந்திரா ஷா பிரதமராக பதிவியேற்றார். 2025-ஆம் ஆண்டு நேபாள Gen Z தலைமுறை தங்களின் வலிமையால் ஒரு ஆட்சியையே கவிழ்க்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தனர்.
மடகாஸ்கரில் 2025 அக்டோபர் மாதம், மடகாஸ்கரில் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை எதிர்த்துத் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், விரைவிலேயே அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான மாபெரும் புரட்சியாக உருவெடுத்தது.

இந்தோனேசியாவிலோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வாடகைப் படிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் Gen Z தலைமுறை சமூக வலைதளம் வாயிலாக ஒன்று திரண்டு பெரும் போராட்டம் நடத்தினர், இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்படி 2025ம் ஆண்டில் மட்டுமே உலக அளவில் நேபாளத்தைச் சேர்த்து 11க்கும் அதிகமான முக்கிய போராட்டங்கள் அதன் வாயிலாக பெரு மாற்றங்களைச் செய்துள்ளனர்.
நடிகர் விஜயின் தவெக வெற்றியும் Gen Zக்களின் பங்கும்…
2025ம் ஆண்டில் உலக அளவில் பல நிகழ்வுகளை இவர்கள் நிகழ்த்தினார்கள் என நாம் நினைத்தால், இந்த Gen Zக்களின் தாக்கம் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை.
சமூக வலைதளத்தில் இணைந்த பல கோடி இளைஞர்கள், தங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஓட்டுக்களையும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெற்றுத்தந்து இன்று தவெகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்துள்ளனர்.
வீடு வீடாகச் சென்றால் வாக்கு கிடைக்கும், இந்த சாதியைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால் வென்றுவிடலாம், இதைச் பேசினால் வாக்கு கிடைக்கும், பணத்தை அள்ளி வீசினால் வென்று விடலாம் என்பது போன்ற பழைய அரசியல் கணக்குகளையும், வியூகங்களையும் இந்தத் தேர்தலில் தவிடுபொடியாக்கி தகர்த்துள்ளனர் Gen Z தலைமுறையினர்.

1967ம் ஆண்டு முதல் அரைநூற்றூண்டுக்கும் மேலாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க என திராவிட அரசியல் கைக்குள் இருந்த தமிழ்நாட்டை, கட்சி துவங்கி வெறும் 2 ஆண்டுகளைக் கடந்த தமிழக வெற்றிக் கழகம் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெறச்செய்து, திராவிடக் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டனர்.
இந்த ‘டிஜிட்டல் ஏரா’வில் Gen Zக்கள் நினைத்தால் எதையும் மாற்ற முடியுமென்பதற்கு மற்றுமொரு சமீபத்திய உதாரணம் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் வெற்றி. இப்படி Gen Z தலைமுறையினரால் தவிடுபொடியாக்கப்பட்டு உள்ளது பழைய அரசியல் கணக்குகளும், வியூகங்களும். அந்த வகையில் தற்போது, ‘Cockroach Janata Party’ என்ற கட்சியைத் துவங்கி, இந்தியாவின் மாபெரும் டிஜிட்டல் புரட்சியை துவங்கியுள்ளார்கள் இளைஞர்கள்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் ‘கரப்பான் பூச்சி’ கருத்து…
கடந்த வாரம், ‘டெல்லி உயர் நீதிமன்றம் தன்னை சீனியர் வழக்கறிஞராக அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்,’ என சஞ்சய் துபே என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘சில இளைஞர்கள் இங்கே கரப்பான் பூச்சிகளைப்போல இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இல்லை, தொழில் இல்லை என்பதால், மீடியா, சமூக வலைதளச் செயற்பாட்டாளர், ஆர்.டி.ஐ ஆர்வலர் என அவதாரம் எடுத்து, அனைவரையும் தாக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்’’ என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பா.ஜ.க ஆட்சியமைத்த 2014ம் ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை 5.44 சதவீதமாக இருந்த நிலையில் படிப்படியான வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகி, 2024ம் ஆண்டு நாட்டின் வேலைவாய்ப்பின்மை 9.2 சதவீதத்தை எட்டியுள்ளது.
இளைஞர்கள் பலரும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல், கிடைக்கின்ற வேலைகளுக்குச் சென்று ஜீவனம் செய்து வரும் நிலையில் தான், தலைமை நீதிபதியின் ‘கரப்பான்பூச்சி’ கருத்து இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இன்ஸ்டாவில் 2.1 கோடி Followers கடந்த ‘Cockroach Janata Party’…
நீதிபதியின் கருத்தால் நாடு முழுவதிலும், ‘‘இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பது யாருடைய தவறு… ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற நினைப்பவர்கள் கரப்பான் பூச்சிகளா…’’ எனப் பல தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இப்படியான நிலையில், டெல்லியைச் சேர்ந்த அபிஜீத் திப்கே என்ற இளைஞர், ‘‘நாங்கள் கரப்பான் பூச்சிகள் என்றால், இது எங்களுக்கான கட்சி’’, எனக்கூறி மே 16-ம் தேதி, ‘CJP – Cockroach Janta Party’ (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) என்ற பெயரில், தலைமை நீதிபதியின் கருத்தை எதிர்த்து அவரை கிண்டல் செய்யும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் ஒரு இயக்கத்தை துவங்கினார்.
‘‘இளைஞர்களுக்காக, இளைஞர்களால் தொடங்கப்பட்ட, இளைஞர்களின் அரசியல் இயக்கம் இது. ‘சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோம்பேறித்தனம்’ இதுதான் எங்கள் கொள்கை. இதை ஏற்றுக்கொள்பவர்கள் எங்கள் இயக்கத்தில் இணையலாம்’’ என்று சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அழைப்பு விடுத்தது சி.ஜே.பி.

இதனைத் தொடர்ச்சி, எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த கட்சியை பின்தொடர்ந்தனர். மேலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்து விவாதங்களை எழுப்பியும், பா.ஜ.க அரசுக்கு எதிரான தனது கருத்துக்களை வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்யும் மாபெரும் கட்சியான பா.ஜ.க தனது டிவிட்டர் பக்கத்தில் வெறும், 9.2 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி துவங்கப்பட்டு வெறும் எட்டு நாட்களில் 21.8 மில்லியன் (2.18 கோடி) பாலோவர்ஸ்களை பெற்றுள்ளது இந்தக்கட்சி.
சர்வதேச அளவில், Al Jazeera, BBC, The Guardian, Newyork Times உள்பட பல ஊடகங்கள், தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைதளத்தில் சாதாரணமாக துவங்கப்பட்ட இந்த இயக்கம், Gen Z தலைமுறையால் மாபெரும் பேசுபொருளாகி, உலக அளவில் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் என்ன?
நிகழ்ச்சி ஒன்றிய பேசிய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘நிகழ்வொன்றில் பேசுகையில் அவர் கூறியதாவது, “நான் தெரிவித்த கருத்துக்களை ஊடகங்களின் ஒரு பிரிவினர் தவறாகச் சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என்பதைப் படித்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். நான் நாட்டின் இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று விமர்சித்ததாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது. போலிப் பட்டங்களைப் பயன்படுத்தி வழக்கறிஞர் போன்ற உன்னதமான தொழில்களுக்குள் நுழைபவர்களை மட்டுமே நான் குறிப்பாக விமரிசித்தேன்.
இத்தகைய நபர்கள் தான் பின்னர் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க துறைகளுக்குள்ளும் ஊடுருவுகிறார்கள். அதனால்தான் இவர்களை ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் சுரண்டும் ஒட்டுண்ணிகள் என்று நான் சாடினேன்.
இந்திய இளைஞர்கள் என் மீது அளவற்ற மதிப்பை கொண்டுள்ளேன். நான் அவர்களை என்றும் வளர்ந்த இந்தியாவின் மிக முக்கியத் தூண்களாகவே கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நீதிபதி சூர்யகாந்திற்கு எதிராகவும், ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் இளைஞர்கள், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை வைத்து டிஜிட்டல் போராட்டங்களையும், புரட்சியையும் செய்து வருகின்றனர். இந்தக்கட்சி எக்ஸ் தளத்தில் இயங்குவதை தடுக்க கட்சியின் எக்ஸ் தள கணக்கை மத்திய அரசு முடிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து பல புதிய கணக்குகள் உருவாக்கப்பட்டு மீண்டும் உயிர்தெழுகிறது.
சிஜேபி (CJP) என்றால் என்ன? அதன் நிறுவனர் என்ன சொல்கிறார்?
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணையதளத்தில் அதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அவரது பெயர் அபிஜித் தீப்கே. மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்த அபிஜித் தீப்கே, கல்லூரிப் படிப்பிற்காக புனே சென்றுள்ளார். பின், சில ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பணியாற்றிய அவர், ஐ.டி பிரிவிற்காக சில மாதங்கள் பணியாற்றியுள்ளார்.

ஏன் இந்தக்கட்சியை துவங்கினேன் என, அபிஜித் தீப்கே தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில், ‘‘எக்ஸ் வலைதளத்தில் இந்திய தலைமை நீதிபதி சொன்னதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், நாட்டின் இளைஞர்களை, குறிப்பாக அமைப்பை விமர்சிப்பவர்களையும் தங்கள் கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்துபவர்களையும் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டார். ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் வழங்கும் அரசியலமைப்பை பாதுகாப்பதையே கடமையாகக் கொண்ட தலைமை நீதிபதியே இப்படிப் பேசியது மிகவும் அபத்தமான ஒன்றாகத் தோன்றியது. கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் அவர் இளைஞர்களை எப்படி ஒப்பிட முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘‘இது எனக்குள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது, அதனால்தான் எக்ஸ் தளத்தில் எனது கருத்தைப் பதிவிட்டேன். ‘அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?’ என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு ‘Gen Z’ மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து ஆச்சரியமான பதில்கள் வந்தன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். இளைஞர்களின் இந்த பதில்கள் தான், ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஆன்லைனில் நையாண்டி அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை எனக்குக் கொடுத்தது. ‘எங்களை நீங்கள் கரப்பான் பூச்சி என்று அழைக்கிறீர்கள் என்றால், சரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியையே உருவாக்கலாம்’ என்று முடிவு செய்தோம்.’’ எனப்பேசியுள்ளார்.
கட்சியைத் துவங்கியது மட்டுமின்றி அவர் சில தகுதிகளையும் நிர்ணயித்திருந்தார். ‘‘தலைமை நீதிபதி கூறியது போல் சோம்பேறியாக இருக்க வேண்டும். வேலை இல்லாதவராக இருக்க வேண்டும். தலைமை நீதிபதி குறிப்பிட்டது போல, நீங்கள் எப்போதும் ஆன்லைனிலேயே நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும்.’’ என்பவை தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன. இவர்கள் இந்தக்கட்சியை துவங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே இதற்கு பிரமாண்டமான வரவேற்பு கிடைத்து.
இவர்கள் தற்போது, கட்சிக்கான இணையதளத்தை https://cockroachjantaparty.org/ உருவாக்கி அதில் தங்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டதுடன், உறுப்பினர் சேர்க்கையையும் அதிகரித்துள்ளனர்.
5 தேர்தல் வாக்குறுதிகள்…
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 5 முக்கியமான வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர்.
- CJP ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு தலைமை நீதிபதிக்கும் ஓய்வுக்குப் பிந்தைய வெகுமதியாக மாநிலங்களவை சீட் வழங்கப்படாது.
- CJP ஆட்சி செய்யும் மாநிலத்திலோ அல்லது எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்திலோ, எந்தவொரு முறையான வாக்கும் நீக்கப்பட்டால், குடிமக்களின் வாக்குரிமையைப் பறிப்பது பயங்கரவாதத்திற்குச் சற்றும் குறைவானதல்ல என்பதால், தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்படுவார்.
- நாடாளுமன்றத்தின் பலத்தை அதிகரிக்காமல், பெண்களுக்கு 33% என்பதற்குப் பதிலாக 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும், அனைத்து அமைச்சரவைப் பதவிகளிலும் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
- உண்மையான சுதந்திரமான ஊடகங்களுக்கு வழிவகுக்கும் வகையில், அம்பானி மற்றும் அதானிக்குச் சொந்தமான அனைத்து ஊடக நிறுவனங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்படும். கோடி மீடியா தொகுப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் விசாரிக்கப்படும்.
- ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவும் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ, 20 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும், எந்தவொரு பொதுப் பதவியை வகிப்பதிலிருந்தும் தடை செய்யப்படுவார்.
இவற்றை தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். மேலும், கட்சியில் சேருவதற்கான தகுதிகளாக, ‘‘வேலைவாய்ப்பு இல்லாதவர், சோம்பேறி, அதிக நேரம் ஆன்லைனில் இருப்பது போன்றவற்றை நிர்ணயித்துள்ளனர்.
நாளுக்கு நாள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கான ஆதரவு கோடிக்கணக்கில் அதிகரித்து வருவது, நாட்டில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளதையும், இதற்காக ஆளும் பா.ஜ.க அரசு மற்றும் மாநில அரசுகள் மீதான கோபத்தை நமக்கு உணர்த்துகிறது.
தற்போது, மாநிலம் தோறும் பலரும் இந்தக்கட்சி பெயரில் மாநில வாரியாக இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் துடங்கி லட்சக்கணக்கில் பாலோவர்ஸ்களை பெற்று வருகின்றனர். அதேசமயம், பலரும் இந்தக்கட்சி பெயரில் சமூக வலைதள கணக்குகளை துவங்கி தவறான தகவல்களை பரப்பச் செய்கின்றனர்.
இன்று காலை, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது’ எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்ட்டு வருகிறது. இதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வெளியிட்டு பதிலளித்துள்ள அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே, ‘‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை முடக்கவும், அதை அழிக்கவும் மத்திய அரசு காத்துக்கொண்டிருக்கிறது. நமது சிறிய தவறும் அவர்களுக்கு தீனியாக மாறிவிடும். நாம் எந்தவொரு போராட்டத்தையும் அறிவிக்கவில்லை, தவறான தகவல்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம்,’’ எனப்பேசியுள்ளார்.
Gen Z தலைமுறை நினைத்து, சமூக வலைதளங்களில் ஒன்றாக அவர்கள் திரண்டால் போதும் எதையும் சாதிக்க முடியும், ஒரு நாட்டையே புரட்டிப்போட்டு பிரதமரை மாற்ற முடியும் என்பதற்கு நேபாளம் ஒரு சாட்சி.
இது இந்தியாவில் நிகழ்ந்துவிடுமோ என்பது தான் தற்போது பல அரசியல் தலைவர்களின் அச்சமாக இருக்கிறது. எது எப்படியோ கோடிக்கணக்கான Gen Z இளைஞர்கள் வெறும் சில நாட்களுக்குள் டிஜிட்டல் வாயிலாக ஒன்றாக திரள முடியும் என்பது தான் மீண்டும் மீண்டும் நிரூபனமாகிக் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் வாயிலாக Gen Z தலைமுறையைச் சுற்றி தான் இனி வரும் அரசியல் கணக்குகளும், வியூகங்களும் இருக்குமென்பதே நிதர்சனம்.