தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் இது வரை 15,796 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளை விட இந்த முறை தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தகவல். இதனால் தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தினால் டெங்கு மட்டுமின்றிப் பல நோய்கள் பரவுகின்றன. அவ்வகையில், இம்மூன்று மாவட்டங்களில், சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 12 , 264 பேரில் 3 665 பேருக்கும் திருவள்ளூரில் 9 367 பேரில் 1 171 பேருக்கும், கோவையில் 7 998 பேரில் 1 278 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகி உள்ளதாகத் தகவல்.
டெங்கு என்பது ‘ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசுக்களின் கடியால் பரவும் ஒரு வைரஸ். உலக மக்கள் தொகையில் பாதித் தற்போது டெங்கு அபாயத்தில் உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 100–400 மில்லியன் தொற்றுகள் ஏற்படுவதாகவும் WHO அறிவித்துள்ளது. மேலும் டெங்குவின் அறிகுறிகளாக WHO :
* அதிகக் காய்ச்சல் (40°C/104°F)
* கடுமையான தலைவலி
* கண்களுக்குப் பின்னால் வலி
* தசை மற்றும் மூட்டு வலிகள்
* வாந்தி – என்று இவற்றைக் கூறுகிறார்கள். ‘பெரும்பாலும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களுக்கு லேசான அல்லது அறிகுறிகள் இல்லாமல் இருக்கும், மேலும் 1-2 வாரங்களில் குணமடைவார்கள். அறிகுறிகள் ஏற்பட்டால், அவை பொதுவாகத் தொற்றுக்குப் பிறகு 4–10 நாட்களுக்குப் பிறகு தொடங்கி 2–7 நாட்கள் வரை நீடிக்கும்.’ என்றும் கூறுகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால் தோற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘மழைக்காலத்தில், தேங்கி நிற்கும் மழைநீர் கொசுக்கள் பெருக வழிவகுக்கும், மேலும் அதைத் தடுக்கும் முயற்சியாக, தூய்மை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.’ என்று மா. சுப்ரமணியன் கூறினார். மேலும் அப்போலோ மருத்துவமனை, கொசு கடியிலிருந்து நம்மைப் பாதுகாக்க – முழு ஆடைகளை அணியவும், வீடுகளில் கொசு வலைகளைப் பயன்படுத்தவும், கொசு இனப்பெருக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கவும் என்று சில வழிமுறைகளைப் பரிந்துரைத்துள்ளனர். இவற்றைப் பின்பற்றி, சுத்தமாக இருப்பதோடு கவனமாக இருப்பதும் நன்று.