அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பெற்றோரைச் சொத்துக்காகப் பயன்படுத்திவிட்டுக் கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறை! கேரளத்தின் புதிய மசோதா சொல்வது என்ன?

முதியவர்களைப் புறக்கணிப்பது, துன்புறுத்துவது, அவர்களது சொத்துகளைச் சட்டவிரோதமாக அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கும் வகையில் கேரள சட்டப்பேரவையில் புதிய மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?

இந்தியாவில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விரிவான சட்ட மசோதாவை கேரள அரசு கொண்டுவந்துள்ளது.

கேரள முதியோர் பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2026 (Keralam Senior Citizens’ (Care and Protection of Rights) Bill, 2026) கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின்படி, முதியவர்களைத் துன்புறுத்துவது, கைவிடுவது மற்றும் அவர்களது சொத்துகளைச் சட்டவிரோதமாக அபகரிப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்க முடியும்.

பெற்றோரைப் புறக்கணித்தால் சிறை!

கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள முதியோர் இல்லத்தை நவம்பர் 23ம் தேதி திறந்து வைத்துப் பேசிய கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள தண்டனை விதிகள் குறித்து விளக்கினார்.

பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைப் பராமரிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் குறிப்பிட்ட அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து சட்டமாக அமலுக்கு வந்த பிறகு, இதுபோன்ற புகார்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பெற்றோர்கள் தங்களது வாழ்நாளில் குழந்தைகளை வளர்ப்பதற்காகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், பிள்ளைகள் வளர்ந்து பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்ந்த நிலையை அடைந்த பிறகு பெற்றோரைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேரளத்தில் எந்தவொரு முதியவரும் தனிமையில் கைவிடப்படக் கூடாது என்பதே தனது கனவு என்றும் சதீசன் தெரிவித்தார்.

மசோதாவில் என்னென்ன தண்டனைகள்?

முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பல்வேறு குற்றங்களுக்குத் தனித்தனியான தண்டனைகளை இந்த மசோதா முன்மொழிகிறது.

முதியவர்களின் சொத்துகளைச் சட்டவிரோதமாக அபகரிப்பது, அவர்களை உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்துவது, அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கைவிடுவது போன்ற குற்றங்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், உரிய அனுமதியின்றி முதியோர் இல்லங்களை நடத்துபவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

சட்டத்தின் அமலாக்கத்திற்குத் திட்டமிட்டு இடையூறு ஏற்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.25,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், முதியவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு மையங்கள், குறிப்பிட்ட சூழல்களில் துன்புறுத்தல் அல்லது புறக்கணிப்பு தொடர்பான சந்தேகங்களை 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பிரிவுகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

முதியோர் இல்லங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள்

முதியோர் பாதுகாப்பு என்பது குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பு மட்டுமல்ல; அவர்களுக்குப் பராமரிப்பு வழங்கும் நிறுவனங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

இதன்படி, முதியோர் இல்லங்கள், ஓய்வு இல்லங்கள், உதவியுடன் வாழும் மையங்கள், பகல்நேரப் பராமரிப்பு மையங்கள், காப்பகங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று பராமரிப்பு வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை உரிய முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த மையங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். முதியவர்களின் பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், தங்குமிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான விதிமுறைகளும் வகுக்கப்படும்.

பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் மசோதா வழிவகை செய்கிறது.

பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சியும் சான்றிதழும்

முதியவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான திறன்களைக் கொண்ட நபர்களை உருவாக்குவதற்காகப் புதிய பயிற்சி மற்றும் சான்றிதழ் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.

இதற்காக Keralam Geriatric Care Certification Framework என்ற அமைப்பு உருவாக்கப்படும்.

முதியோர் பராமரிப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் பின்னணி சரிபார்க்கப்படுவதுடன், உரிய பயிற்சியும் வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், பராமரிப்பாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று மசோதா வலியுறுத்துகிறது.

முதியவர்களுக்கு மருத்துவ மற்றும் சமூகப் பாதுகாப்பு

முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மருத்துவ வசதிகளையும் சமூகப் பாதுகாப்பையும் விரிவுபடுத்த இந்த மசோதா திட்டமிடுகிறது.

அல்சைமர், டிமென்ஷியா, பார்கின்சன் உள்ளிட்ட நரம்பியல் மற்றும் நினைவாற்றல் தொடர்பான பாதிப்புகளைக் கொண்டவர்களுக்குச் சிறப்புப் பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்படும்.

கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்காக நடமாடும் மருத்துவச் சேவைகளும் ஏற்படுத்தப்படும்.

மேலும், முதியவர்களுக்கு இலவச சட்ட உதவி, டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி, நடமாட்ட உதவிச் சாதனங்கள், செவிப்புலன் கருவிகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய பெண்களுக்கு அரசு பராமரிப்பு மையங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

முதியோருக்கான தனி பாதுகாப்பு அமைப்புகள்

முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மாநில மற்றும் மாவட்ட அளவில் தனிப் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.

மாவட்ட அளவிலான பாதுகாப்புப் பிரிவுகள் முதியவர்களிடமிருந்து பெறப்படும் புகார்களை விசாரிப்பதுடன், முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கும்.

காவல் நிலையங்களிலும் முதியோர் தொடர்பான புகார்களைக் கையாளத் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், இணையவழி நிதி மோசடிகள் மற்றும் அடையாளத் திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு உதவுவதற்காக இணையக் குற்றப்பிரிவுகளிலும் சிறப்பு ஒருங்கிணைப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

எதிர்க்கட்சிகளின் கவலைகள் என்ன?

இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும், அதன் சில அம்சங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக, முதியவர்கள் தங்களது இறுதிக்கால மருத்துவச் சிகிச்சை தொடர்பான விருப்பங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் ‘Living Will’ நடைமுறையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளனவா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதேபோல், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள முதியோர் நலச் சட்டங்களுடன் புதிய மசோதா எவ்வாறு இணைந்து செயல்படும் என்பதையும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், மத்திய சட்டங்களுக்கு முரணான அம்சங்கள் மசோதாவில் இல்லை என்றும், Living Will தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் விதிகளில் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மசோதா

கேரள சட்டப்பேரவையில் அக்டோபர் 26ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகே இது சட்டமாகி நடைமுறைக்கு வரும்.

இந்தியாவில் முதியவர்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு விரிவான சட்டக் கட்டமைப்பை உருவாக்கிய முதல் மாநிலமாக கேரளத்தை முன்னிறுத்தும் இந்த முயற்சி, முதியோர் பராமரிப்பு குறித்த விவாதத்தையும் மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

பெற்றோரைப் பராமரிப்பது என்பது குடும்பத்தின் பொறுப்பு மட்டுமா அல்லது அதனை உறுதிப்படுத்துவது அரசின் சட்டப்பூர்வக் கடமையா என்ற கேள்விக்கு, கேரளத்தின் புதிய மசோதா ஒரு முக்கியமான பதிலை முன்வைக்கிறது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of பிரீத்தி காளியப்பன்

பிரீத்தி காளியப்பன்