இந்தியாவின் மாநிலங்களில் ஆங்கில அகரவரிசைப்படி கடைசிப் பகுதியில் இடம்பெறும் மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளது. ‘வெஸ்ட் பெங்கால்’ (West Bengal) என்ற பெயரை ஆங்கிலத்திலும் ‘பச்சிம் பங்கா’ (Paschim Banga) என மாற்றுவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான தீர்மானம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல்: டிசம்பர் 9ம் தேதி தீர்மானம்!
நவம்பர் 23ம் தேதி கொல்கத்தாவில் உள்ள மாநிலத் தலைமைச் செயலகமான நபன்னாவில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுவேந்து அதிகாரி, ஆங்கிலத்திலும் மாநிலத்தின் பெயர் ‘பச்சிம் பங்கா’ என்றே எழுதப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில் டிசம்பர் 9ம் தேதி இதற்கான தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும், சட்டப்பேரவையின் ஒப்புதலுக்குப் பிறகு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு நாடாளுமன்றத்தின் வழியாகத் தேவையான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இதன்படி, தற்போதைய ‘West Bengal’ என்ற ஆங்கிலப் பெயருக்குப் பதிலாக ‘Paschim Banga’ என்ற பெயரைப் பயன்படுத்துவதே மாநில அரசின் தற்போதைய முன்மொழிவாக உள்ளது.
ஏன் பெயரை மாற்ற வேண்டும்?
மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றுவதற்கான விவாதம் இப்போது தொடங்கியதல்ல. பல்வேறு அரசுகள் ஆட்சியில் இருந்தபோதும் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பெயர் ஆங்கில அகரவரிசையில் ‘W’ என்ற எழுத்தில் தொடங்குவதால், தேசிய அளவிலான மாநில முதல்வர்கள் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மேற்கு வங்கத்தின் பிரதிநிதிகளுக்குக் கடைசிப் பகுதியில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிர்வாகச் சிக்கலையும் பெயர் மாற்றத்திற்கான காரணங்களில் ஒன்றாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அதேநேரத்தில், 1947ம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது வங்காள மாகாணம் கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்ட வரலாற்றுடன் ‘பச்சிம் பங்கா’ என்ற பெயரை இணைத்துப் பார்க்கிறது தற்போதைய பாஜக அரசு.
ஏற்கெனவே தோல்வியடைந்த பெயர் மாற்ற முயற்சிகள்!
1999ஆம் ஆண்டு இடதுசாரி முன்னணி ஆட்சியின்போது மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ (Bangla) என மாற்றுவது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி நடைமுறைக்கு வரவில்லை.
2011ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான தீர்மானம் செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைக்காததால் பெயர் மாற்றம் நடைபெறவில்லை.
அதன்பிறகு, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலத்தின் பெயரை வங்க மொழியில் ‘பங்களா’ (Bangla), ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ (Bengal), இந்தியில் ‘பங்கால்’ (Bangal) என வெவ்வேறு பெயர்களில் மாற்றுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், ஒரு மாநிலத்திற்கு வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயர்கள் இருக்க முடியாது என ஒன்றிய அரசு ஆட்சேபனை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி, மூன்று மொழிகளிலும் ‘பங்களா’ என்ற ஒரே பெயரைப் பயன்படுத்துவதற்கான தீர்மானத்தை மம்தா பானர்ஜி அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
இருப்பினும், ‘பங்களா’ என்ற பெயர் அண்டை நாடான வங்கதேசத்தின் பெயருடன் ஒத்திருப்பதால் சர்வதேச அளவில் குழப்பம் ஏற்படலாம் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு ஒன்றிய அரசு அந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இவ்வாறு இடதுசாரி முன்னணி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுகளின் பெயர் மாற்ற முயற்சிகள் முடங்கிய நிலையில், தற்போது பாஜக அரசு மீண்டும் ‘பச்சிம் பங்கா’ என்ற பெயரை முன்மொழிந்துள்ளது.
அரசியல் பின்னணி என்ன?
முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு ‘பங்களா’ என்ற பெயரை முன்மொழிந்தபோது, அதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக, வங்கதேசத்துடன் பெயர் ஒத்திருப்பது மற்றும் 1947 பிரிவினை வரலாறு ஆகியவை அப்போது விவாதிக்கப்பட்டன.
தற்போது பாஜக ஆட்சியில் உள்ள மாநில அரசு ‘பச்சிம் பங்கா’ என்ற பெயரை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் வங்காளப் பிரிவினையின் வரலாற்றுப் பின்னணியை முன்னிறுத்தும் அணுகுமுறையை பாஜக அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சௌம்யா ஐச் ராய், மாநிலத்தின் பெயருடன் தொடர்புடைய அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, முந்தைய இடதுசாரி அரசு முன்வைத்த அதே நிலைப்பாட்டை தற்போது பாஜக அரசு எடுத்திருப்பதாக விமர்சித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தோலா சென், முந்தைய பெயர் மாற்றத் தீர்மானங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காமல் முடக்கியதைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.
பெயர் மாற்றம் எப்போது நடைமுறைக்கு வரும்?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவின்படி, ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகளில் குடியரசுத் தலைவரின் பரிந்துரை மற்றும் தொடர்புடைய மாநிலச் சட்டமன்றத்தின் கருத்துகளைக் கோரும் நடைமுறையும் இடம்பெறுகின்றன.
எனவே, டிசம்பர் 9ம் தேதி மேற்கு வங்கச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுவது மட்டுமே பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று பொருளல்ல.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒன்றிய அரசின் வழியாக நாடாளுமன்றத்தின் சட்ட நடைமுறைகள் நிறைவு பெற வேண்டும். அதன் பிறகே ‘வெஸ்ட் பெங்கால்’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ‘பச்சிம் பங்கா’ என மாறும்.
பல அரசுகளால் முன்னெடுக்கப்பட்டும் இதுவரை நிறைவேறாத மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றக் கோரிக்கை, தற்போது மீண்டும் அரசியல் விவாதத்தின் மையத்திற்கு வந்துள்ளது. டிசம்பர் 9ம் தேதி சட்டப்பேரவையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானமும், அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு எடுக்கவுள்ள முடிவுமே இந்தப் பெயர் மாற்றத்தின் அடுத்தகட்டத்தைத் தீர்மானிக்கும்.