டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 57 வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி தொடர்பான சட்ட நடைமுறைகளில் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கைது செய்யும் அதிகாரம் ரத்து செய்யப்படுவதுடன், தற்போது ரூ.1 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட ஜிஎஸ்டி குற்றங்களில் குற்றவியல் வழக்கு தொடர முடியும். இனி இந்த வரம்பு ரூ.5 கோடியாக உயர்த்தப்படுகிறது. இதனால் குறைந்த மதிப்பிலான வரி தொடர்பான தவறுகளுக்கு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் சூழல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி குற்றங்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை நீக்கப்படுகிறது. ஒவ்வொரு வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அபராதம், சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தண்டனையின் அளவை நிர்ணயிக்கும் முடிவு நீதித்துறையின் வசம் விடப்படுகிறது.
அபராதம் குறைப்பு:
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்ற அபராத குறைப்பு. இதுவரை ஜிஎஸ்டி விதிமீறல்களை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையானது ரூ. 25 ஆயிரமாக இருந்தது. தற்போது கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, இந்த அபராதத் தொகையானது ரூ.10 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய அளவிலான தவறுகளுக்கான அபராதச் சுமையானது குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.-
ஜிஎஸ்டி ரிட்டர்னை தாமதமாக தாக்கல் செய்வது அல்லது வரி செலுத்துவதில் தாமதம் செய்வது போன்ற தவறுகளுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் வசூல் வட்டி மற்றும் விகிதாச்சார அபராதத்தை மட்டுமே எதிர்கொள்ளும் வகையில் நடைமுறைகள் மாற்றப்பட உள்ளன. இதற்கு மேல் கூடுதல் நடவடிக்கைகள் இருக்காது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி தாக்கல், ரீஃபண்ட் நடைமுறைகளில் தளர்வு:
வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு ஏற்படும் நடைமுறைச் சுமையை குறைக்கும் வகையில், ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் மற்றும் வரி ரீஃபண்ட் பெறும் நடைமுறைகளில் தளர்வுகள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு நடைமுறை எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி வரி விகிதம் தொடர்பான விஷயங்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரத்யேக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மட்டுமே விவாதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி விகிதங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து, வர்த்தகர்களுக்கு நிலையான வரி நடைமுறையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், ஜிஎஸ்டி சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மாற்றங்கள் மூலம் வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்துதல், குற்றவியல் நடவடிக்கைகளை வரையறுத்தல், சிறு தவறுகளுக்கான அபராதச் சுமையை குறைத்தல் மற்றும் வரி செலுத்துவோருக்கு நடைமுறை சலுகைகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.