இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களும் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளமையே அதற்கான காரணம் என பெட்ரோலிய விநியோக சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சொந்தமான லங்கா IOC, அமெரிக்காவிற்கு சொந்தமான RM Parks நிறுவனம் மற்றும் சீனாவிற்கு சொந்தமான சினோபெக் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிலான எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சர்வதேச சந்தையிலிருந்து கொள்வனவு செய்யப்படும் விலைக்கு, எரிபொருளை நாட்டில் விற்பனை செய்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையே அதற்கான பிரதான காரணம் என அவர் கூறுகின்றார்.
தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரண உதவித் திட்டம் போதுமானதாக அமையாமையினால், எரிபொருள் விநியோகத்தை குறித்த நிறுவனங்கள் மட்டுப்படுத்தி விநியோகிக்கின்ற சூழ்நிலையில், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இலங்கை முழுவதும் சுமார் 1400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.
இவற்றில் சுமார் 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், வெளிநாட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், தற்போது மீண்டும் எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலை விபரங்கள்

வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு அரசாங்கம் விடுத்த அறிவிப்பு
தட்டுப்பாடின்றி, எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் ஊடாக இன்றைய தினம் கடிதம் மூலம் இந்த அறிவிப்பை விடுக்க எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், எரிபொருள் விநியோகத்தின் ஊடாக தமக்கு நட்டம் ஏற்படுகின்றமை என தெரிவித்து தமது எரிபொருள் விநியோகத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுப்படுத்தியுள்ளமையினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்தே இந்த அறிவிப்பை விடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவிலான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.